

சந்திப்பு: கா.இசக்கிமுத்து
“இதுவரை ரஜினி காந்த் பண்ணாத ஒரு படம் பண்ணனும். அதில், அவருக்கான விஷயங்களும் இருக்கணும் என முதலில் முடிவு செய்தேன். அப்படி யோசிக்கும்போதுதான் அவர் போலீஸ் கதையில் நடிச்சு நாளாச்சே என்று தெரிந்தது.
அந்தக் களத்தில் ஆயிரம் கதை கள் மனத்தில் உதித்தாலும் இது சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல். ரஜினி காக்கிச் சீருடை அணிந்து கலக்கியிருக்கும் பின்னணி இதுதான். என ‘தர்பார்’ ரகசியங்களை உடைத்து உரையாடத் தொடங்கினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். படத்துக்கு உருவாகியிருக்கும் பெரும் எதிர்பார்ப்பு, ரஜினியை இயக்கிய அனு பவம் ஆகியவை குறித்து உரையாடத் தொடங்கினார்…
தமிழ்நாட்டின் பின்னணியை எடுத்துக்கொள்ளாமல் மும்பையைத் தேர்வுசெய்தது ஏன்?
ரஜினியை வைத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த முடியாது. எனக்கும் மும்பையில் ‘துப்பாக்கி’ பண்ணிய அனுபவம் இருக்கிறது. ஆகையால்தான் மும்பையில் இருக்கும் தமிழ் போலீஸ் அதிகாரி மாதிரி கதையை வடிவமைத்தேன். வேறு எந்தக் காரணமும் இல்லை.
‘தர்பார்’ கதையில் ரஜினி மாற்றங்கள் சொன்னாரா?
ரஜினி நிறையக் கேள்விகள் கேட்டார். ‘எந்தவொரு இடத்திலும் லாஜிக் மிஸ் ஆகக் கூடாது. அதில் மட்டும் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு காட்சியையும் தன் நடிப்பால், ஸ்டைலால் மெருகேற்றினார். ‘இந்தக் காட்சியை இப்படி எடுத்தால் என்ன?’ என்றெல்லாம் அவர் கேட்டதில்லை. படப்பிடிப்புத் தளத்துக்குள் அவர் வந்துவிட்டாலே அமைதி குடிகொண்டுவிடும். அனைவருமே அவர் பேசிக்கொண்டிருப்பதை, நடிப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
ரஜினியை இளமையாகக் காட்ட என்னவெல்லாம் செய்தீர்கள்?
கதை முடிவானவுடன் அவருடைய தோற்றம் எப்படியெல்லாம் இருக்கலாம் என நிறைய ஓவியங்கள் வரைந்து பார்த்தோம். அதில் இந்தத் தோற்றம்தான் சரியாக இருக்கும் என ஒருமனதாக இறுதி செய்து போட்டோ ஷூட் செய்தோம். அவரது உடல்வாகு, உற்சாகம், பேசும் விதம் எல்லாம் அவரை இளமையாகக் காட்டுவதை எளிதாக்கி விடுகின்றன. கொஞ்சம் ஒப்பனை, சரியான விக், கச்சிதமான உடைகள், சந்தோஷ் சிவனின் ஒளி அமைப்பு எல்லாம் சேர்ந்தால் இளமை துள்ளும் ரஜினி ரெடி. அதேநேரம் ரஜினி இன்னும் மனத்தள வில் இளமையாகவே இருக்கிறார். இளமை யாகவே சிந்திக்கிறார். அதை அப்படியே திரையில் காட்டுவது கடினமல்ல.
படத்தில் அரசியல் வசனங்கள் உண்டா?
அவரது அரசியல் வருகையை வைத்து இந்தக் கதையை எழுதவில்லை. இந்தப் படத்தின் வெற்றியால் அவருக்கு அரசியல் ஆதாயம் நிச்சயமாகக் கிடையாது. ஏனென்றால், இது அப்படிப்பட்ட கதை அல்ல. படத்தின் கதையில் துளியும் அரசியல் கிடையாது. காக்கியில் அதிரடி ரஜினியை மட்டுமல்ல; கலர்ஃபுல் ரஜினியையும் காணலாம்.
காவல் அதிகாரி ஹேமந்த் கர்க்கரேவின் பின்னணியை வைத்துத் தான் ‘தர்பார்’ எழுதியிருக்கிறீர்கள் என்ற தகவல் இருக்கிறதே...
நேர்மையான அனைத்து அதிகாரிகளுமே ஹீரோக்கள்தாம். குடும்பத்தினர், ‘சற்றுமுன்னர்தான் பணிக்குக் கிளம்பிச் சென்றார், இறந்துவிட்டார்’ என்று சொல்லும்போது அந்த இழப்பு எவ்வளவு கொடூரமானது. அந்தக் குடும்பத்தின் வேதனை எவ்வளவு ரணமானது. எந்த போலீஸ் கதை பண்ணினாலும் ஹேமந்த் கர்க்கரே, விஜயகுமார் ஆகிய அதிகாரிகளின் உடல் மொழி இல்லாமல் இருக்காது. முழுக்க அவர்களுடைய கதை என்று சொல்ல முடியாது. அவர்களுடைய அணுகுமுறை இருக்கத்தான் செய்யும்.
கதை சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பும்போது மன அழுத்தம் தாக்குமா?
இல்லாமலா? இதிலிருந்து எடுத்து எழுதினேன் என நான் பேட்டிகளில் கூறினாலே, இது என்னோட கதை என்று வரிசை கட்டி நிற்கிறார்கள். நிஜக்கதையை வைத்து யார் வேண்டுமானாலும் கதை பண்ணலாம். ஆனால், இரண்டு இயக்குநர்களுமே ஒரு கதையை எழுதி யிருக்கிறார்கள் என்று ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்துச் சொல்ல முடியாது.
அப்படியென்றால் இதைத் தவிர்க்கவே முடியாது என்கிறீர்களா?
முடியாது தான். ‘கத்தி’ படத்துக்கு ஐந்து பேர் வழக்குப் போட்டார்கள். முதலில் அந்தக் கதை புதுசே கிடையாது. எம்.ஜி.ஆர் காலத்துக் கதை தான். என்னைப் பொறுத்தவரை, இரண்டு கதைகளுக்கு இடையில் ஒற்றுமை வரும் போது ‘அவர் முன்னாடி பதிவு பண்ணிட்டார்... அவர் கதையைத் தான் நீங்க எடுக்குறீங்க’ என்று சொல்லி நஷ்ட ஈடு கேட்பது தவறு. இவரிடமிருந்து இப்படித்தான் இந்தக் கதை இப்படி போயிருக்கிறது என்று நிரூபித்தால் மட்டுமே நஷ்ட ஈடு கொடுக்க முடியும். அது தொடர்பான செய்திகளில் கதைத் திருட்டு என்று சொல்வது கடுமையான வார்த்தை.