

கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி சமீபத்தில் வெளியான ‘மை சேண்டா’ மலையாளப் படத்தில் கிறிஸ்மஸ் தாத்தாவாக நடித்து குழந்தைகளையும் தனது ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் நடிகர் திலிப். ஆண்டுக்கு மூன்று மசாலா படங்களில் நடித்துவிடும் திலிப்புக்கு, மலையாள சினிமாவில் இன்னும் மவுசு குறையவில்லை.
ஆனால், படத்துக்குப் படம் தோற்றத்தில் சின்னச் சின்ன மாறுபாடுகளைக் காட்டிக்கொண்டிருப்பார். தற்போது ‘கேசு இ வீடிண்டே நாதன்’ என்ற மலையாளப் படத்தில் பெரிய தொப்பை, வழுக்கைத் தலை, நரைமுடியுடன் கூடிய தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான முதல் பார்வை போஸ்டர் வெளியாகி திலிப் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.
8 நாட்களில் ஒரு படம்!
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சினிமா சங்கங்களில் முன்னால் நிற்பவர் என பாபு கணேஷுக்குப் பல அடையாளங்கள் உண்டு. தற்போது அவருடைய மகன் ரிஷிகாந்த் நடித்துள்ள படம் ‘370’. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த ஆர்டிகிள் 370-ஐ மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, நான்கு கேமராக்களைக் கொண்டு ஒரு நாளைக்கு 6 மணிநேரம் வீதம் 48 மணி நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார். பல சர்வதேச சாதனைப் புத்தகங்களின் கண்காணிப்புப் பிரதிநிதிகள் முன் இந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்ததுடன் இந்தச் சாதனையை அவர் கின்னஸுக்கும் அனுப்பி யிருக்கிறார்.
இணையத்தில் இணைந்தார்!
ராம்கோபால் வர்மா இல்லாமல் தெலுங்கு, இந்தி சினிமா இல்லை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. மும்பை நிழலுலகத்தை அவரது ‘ஷிவா', ‘சத்யா', ‘கம்பெனி' உள்ளிட்ட பல படங்கள் துணிவுடன் தோலுரித்தன. இதனால் பாலிவுட்டிலும் பிரபலமானார் ராம்கோபால் வர்மா. ஆனால், கடந்த பத்து வருடங்களால் அவர் இயக்கிய படங்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்தன. இருந்தாலும் படங்கள் இயக்குவதை இன்றுவரை அவர் நிறுத்தவில்லை. இதற்கிடையில் இணையத் திரையில் அவர் ஐக்கியமாகி இருக்கிறார். தாவூத் இப்ராஹிமின் வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இணையத் தொடரை இயக்கப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
சமூகவலை தந்த ஏற்றம்!
சமூக வலைத்தளங்களைத் தங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிவிடுகிறவர்கள் மிருணாளினி ரவியைப் போல மிகக் குறைவு. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முதலில் டப் மாஷ் நடிப்பு மூலம் பிரபலமாகி ரசிகர்களைக் குவித்தார் மிருணாளினி ரவி. அதன் காரணமாகவே ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஏலியன் பெண்ணாக ஒரு மிகச் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
இப்போதோ, தமிழ் சினிமாவில் மிக பிஸியான கதாநாயகி. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சாம்பியன்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக ‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கிலும் வாய்ப்பு வாசல் ஏற்கெனவே திறந்துவிட்டது. கதாநாயகி ஆகிவிட்டாலும் இன்னும் ‘டப் மாஷ்’ செய்வதை நிறுத்தவில்லை இவர்.
உலகம் சுற்றும் அழகி!
மிஸ் இந்தியாவாகத் தேர்வாகி, பின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த பூஜா ஹெக்டேவுக்குத் தமிழ் சினிமாதான் முதல் வாய்ப்பை வழங்கியது. தற்போது முப்பது வயதாகும் பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் அவருக்கு நிரந்தரமான இடம் கிடைத்துவிட்டது.
தமிழ்ப் படங்களை ஏற்றுக்கொள்வதில் பெரிய தயக்கம் காட்டும் பூஜா, ஆண்டுக்கு ஒரு படம் அது வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, தனக்காகக் கதைகளைக் கேட்டு முடிவு செய்ய ஐந்துபேர் கொண்ட குழுவை அமைத்துக்கொண்டிருக்கிறாராம். ஆண்டில் ஆறு மாதம் படப்பிடிப்பு, ஆறுமாதம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா என வாழ்க்கையை அழகாக அமைத்துக்கொண்டிருக்கும் பூஜா இதுவரை 50 நாடுகளுக்குச் சென்று வந்துவிட்டாரம்.