

சுமன்
அதிரடி ஜேம்ஸ் பாண்ட் திரைப் படங்களின் வரிசையில் 25-ம் படமாக வெளியாக உள்ளது ‘நோ டைம் டு டை’.பிரதான வில்லன் எர்னஸ்ட் ஸ்டாவ்ரோ ‘ஸ்பெக்டர்’ படத்தில் பிடிப்பட்டார். அப்படத்தின் தொடர்ச்சியாக இந்தப் புதிய பாண்ட் படத்தின் கதை தொடங்குகிறது.
தன் ஒற்றன் வேலைக்குத் தற்காலிக ஓய்வு தந்திருக்கும் ஜேம்ஸ் பாண்டை அவருடைய நண்பரும் சிஐஏ அதிகாரியுமான ஃபெலிக்ஸ் லெய்டர் சந்திக்கிறார். கடத்தப்பட்ட முக்கிய விஞ்ஞானி ஒருவரை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைக்கிறார். கையிலிருக்கும் தடயங்களின் அடிப்படையில் நூல்பிடித்துப் போகும் பாண்ட், வழக்கம்போல அதுவரை உலகம் சந்தித்திராத அபாயங்களை எதிர்கொள்கிறார்.
டேனி பாய்ல் இயக்கத்தில் வளர்ந்த ‘டைம் டு டை’ திரைப்படம், கருத்து முரண்பாட்டால் அவர் விலகியதில் முடங்கிப்போனது. பின்னர் கேரி ஃபகுனாகா (Cary Fukunaga) இயக்கத்தில் முழுமை அடைந்து திரைக்கு வருகிறது. பாண்டுக்கு நிகரான சாகசங்கள் செய்யும் ரஷ்ய வில்லனாக ராமி மாலெக் தோன்றுகிறார். நவோமி ஹாரிஸ், லாசானா லின்ச், அனா டி, ஜெஃப்ரி ரைட் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.
பொருத்தமான படத்தலைப்புக்குப் பலவற்றையும் பரிசீலித்துச் சோர்ந்த படக்குழு வினர், நிறைவாக 1958-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படத்தின் தலைப்பில் திருப்தி அடைந்திருக்கிறார்கள். 1952-ல் இயான் ஃபிளமிங் படைப்பில் பிரபலமான பிரிட்டீஷ் உளவாளியின் அதிரடிக் கதைகள், பத்தாண்டுகள் கழித்து ‘டாக்டர்.நோ’ மூலம் முதல் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமாக வெளியானது.
இந்த வரிசையில் 24-ம் படமாக ‘ஸ்பெக்டர்’ 2015-ல் வெளியானது. தற்போது 25-ம் படைப்பாக ‘நோ டைம் டு டை’ திரைப்படம் ஏப்ரல் 8 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது பாண்ட் அவதாரத்தில் ‘டேனியல் க்ரெய்க்’கின் 5-ம் திரைப்படமாகும். ஆக்ஷன் காட்சிகளில் அடிபட்டு, அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ரத்தம் சிந்தி நடித்திருக்கிறார் டேனியல் க்ரெய்க்.