

ஆர்.சி.ஜெயந்தன்
கடந்த ஜனவரி 4-ம் தேதி வெளியான ‘தேவகோட்டை காதல்’ படம் தொடங்கி டிசம்பர் 27-ம் தேதி வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ படம் வரை 2019-ல் மொத்தம் 206 திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் தமிழ் மறு ஆக்கம், தமிழ் மொழியாக்கம், ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ‘பார்க்கத் தகுந்தவை’ என்ற தகுதியைச் சுமார் 140 படங்கள் பெற்றுவிடுகின்றன.
அவற்றில் கனவுடன் முதல் படத்தைக் கொடுத்த அறிமுக இயக்குநர்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். இன்றைய அறிமுக இயக்குநர்தான் நாளைய நட்சத்திர இயக்குநர். 2019-ல் ஏமாற்றம் அளிக்காத திரை அனுபவம் தந்த அறிமுக இயக்குநர்கள் யார் யார் என்பதை, அந்தந்த படம் வெளியான தேதியின் அகர வரிசையில் பார்ப்போம்.
ஜெகதீசன் சுபு - ‘சிகை’, ‘பக்ரீத்’
திரையரங்கில் வெளியிட முடியாத நிலையில் இணையத்தில் வெளியானது ‘சிகை’. பாலியல் தொழிலாளர்கள், அவர்களை அட்டையாக உறிஞ்சும் தரகர்கள் என உழலும் பாலியல் சந்தை உலகத்துக்குள் குறுக்கிடுகிறார் ஒரு திருநங்கை.
மனத்தில் பூத்த காதலுடன் தவிக்கும் அத்திருநங்கை எதிர்கொள்ளும் புறக்கணிப்பின் வலியைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியது ‘சிகை’. விளிம்பு வாழ்க்கையுடன் பாலியல் தொழிலில் அலைக்கழிக்கப்படும் அபலைப் பெண்களின் துயரம், மூன்றாம் பாலினத்தவரின் உணர்வுகளை அருவருப்பாகப் பார்க்கும் பொது மனோபாவம் இரண்டையும் கச்சிதமான புள்ளியில் இணைத்து ஒரு சமூக திரில்லர் அனுபவத்தைக் கொடுத்தார் ஜெகதீசன் சுபு.
அவரது இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது ‘பக்ரீத்’. ‘தமிழ் சினிமாவின் மஜித் மஜிதி’ என்று பாராட்டத்தக்க வகையில், முற்றிலும் புதிய கதைக் களத்தில் ‘பக்ரீத்’ படத்தை இயக்கியிருந்தார். ஆசையாக வளர்த்த ஒட்டகக் குட்டியை அதன் பூர்விக வாழ்விடத்தில் விட்டுவரப் புறப்படும் ஓர் ஏழைத் தமிழ் விவசாயின் கதை. அவனது மாநிலம் கடந்த பயணமும் அதில் அவன் பெரும் தரிசனங்களும் பார்வையாளர்களுக்கும் கிட்டின.
சீயோன் - ‘பொதுநலன் கருதி’
ஏழை, நடுத்தர மக்கள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி, தங்களது வாழ்க்கையை எப்படிச் சிதைத்துக் கொள்கிறார்கள் என்பதைச் சிதறடிக்கப்பட்ட திரைக்கதை மூலம் சொன்னவிதம் புதுமையாக இருந்தது. கந்துவட்டிக் குழுக்களுக்குப் பின்னால் இயங்கும் நிழலுலக மனிதர்கள், சமூகத்தின் முன்னால் தங்களை எப்படிக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதை ‘பொதுநலன் கருதி’ படத்தில் கச்சாத்தன்மையுடன் காட்சிப் படுத்தியிருந்தார் அறிமுக இயக்குநர் சீயோன். பணம் படைத்தவர்கள் அதையே ஆயுதமாக்கி, பணம் இல்லாதவர்களுக்குக் கொடுத்து, அவர்களை மீண்டெழ முடியாத கடனில் வீழ்த்தும் அராஜகத்தை திரில்லர் வகைமையில் திரை விலக்கிக் காட்டியிருந்தார்.
முரளி கார்த்திக் ‘களவு’
‘சிகை’ படத்தைப் போலவே திரையரங்கை எட்ட முடியாமல் இணையத் திரையில் வெளியானது ‘களவு’. அதன் இயக்குநர் முரளி கார்த்திக்கின் நேர்த்தியான கதை சொல்லல், படமாக்கம் ஆகியவற்றால் ஈர்த்த இதுவும் ஒரு திரில்லர் படம்தான். முறையற்ற தொடர்பு, செயின் பறிப்பு, வரதட்சிணைக் கொடுமை, குடியில் அழியும் இளைஞர்கள், காவல்துறையின் அலட்சியம் என அன்றாடக் குற்றச் செய்திகளில் பரவிக் கிடக்கும் உண்மைச் சம்பவங்களையே நெருக்கமான கண்ணிகளாகக் கோத்து உருவாக்கிய திரைக்கதை ஈர்த்தது.
சில்லறைத் திருட்டுக் குற்றம் ஒன்றுக்காக மூன்று இளைஞர்களை போலீஸ் வளைக்கிறது. ஆனால், அந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடுகிறாள். அவளைக் கொல்வதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் பழியைச் சுமக்கும் இளைஞர்கள் அதிலிருந்து விடுபடப் போராடும் கதை. கூர்மையான வசனங்களின் உதவியுடன் கலவையான திரில்லர் காட்சிகள் வழியாக நம்மையும் கதைக் களத்துக்குள் பிரவேசிக்க வைத்தார் இயக்குநர் முரளி கார்த்திக்.
செழியன் - ‘டுலெட்’
சென்னையில் மென்பொருள் துறை அசுர வளர்ச்சியை நோக்கி முன்னேறிய தொடக்க ஆண்டுகளில் சாமானியர்கள் சந்தித்த அதன் பக்க விளைவுகள் பல. அவற்றில் முதன்மையான ஓர் அடிப்படைப் பிரச்சினை பற்றி, புலம்பலோ அலம்பலோ இல்லாமல் தனது காட்சிமொழி வழியாகப் பார்வையாளனிடம் உரையாடியது ‘டுலெட்’ திரைப்படம். ஓர் இளம் தம்பதி, அவர்களுடைய மகன் ஆகியோரை ‘டுலெட்’ என்கிற வார்த்தை எப்படி அலைக்கழிக்கிறது என்ற ஒருவரிக் கதை. அதை ஜோடனை ஏதுமற்ற யதார்த்தத்துடன் படமாக்கியிருந்தார் ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியன். வாடகை வீடுகளில் உழல்பவர்களின் வலியை, அழுது வடியும் காட்சிகள் இல்லாமல், மிக முக்கியமாகப் பாடல்கள், பின்னணி இசை இல்லாமல் உணரவைத்தார் இயக்குநர்.
செல்வக் கண்ணன் - ‘நெடுநல்வாடை’
தமிழ் கிராமிய வாழ்வில் முதல் தலைமுறைப் பட்டதாரியாக உருவெடுக்கும் இளைஞர்களின் வாழ்வை ‘நெடுநல்வாடை’ படத்தின் மூலம் உணர்வுபூர்வமாகக் காட்டினார் செல்வக்கண்ணன். கிராமிய வாழ்வில் தாத்தா – பேரன் உறவில் நிரம்பி வழியும் பாச உணர்ச்சியை, மிகை என்ற எல்லைக்குள் எடுத்துச் சென்றுவிடாமல் இயல்பாகச் சித்தரித்திருந்தார். நெல்லை பேச்சு வழக்கில் மட்டுமே புழங்கக்கூடிய பல அசலான வட்டாரச் சொற்களை வெகு இயல்பாகக் கதாபாத்திரங்கள் பயன்படுத்தின. நெல்லை வட்டாரப் பேச்சுமொழியின் கலப்படம் இல்லாத வாசம் பார்வையாளர்களை ஈர்த்தது.
சரவண ராஜேந்திரன் - ‘மெகந்தி சர்க்கஸ்’
தமிழ் சினிமாவில் வெகு அபூர்வமாக எடுத்தாளப்பட்ட சர்க்கஸ் பின்னணியை உயிர்ப்புடன் எடுத்தாண்ட படம். சர்க்கஸில் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் ஆபத்தான வித்தை ஒன்றைத் திரைக்கதையின் முக்கிய கண்ணியாக்கியது, பனி போர்த்திய கொடைக்கானல் கதைக்களப் பின்னணியில் இளையராஜாவின் 80, 90-களின் திரையிசைப் பாடல்களைக் கதாபாத்திரங்களுக்கு இடையில் காதலை வளர்க்கப் பயன்படுத்திக்கொண்டது என வெளிப்பட்ட இயக்குநரின் ரசனையான அணுகுமுறை, ரசிகர்களைக் கட்டிப்போட்டது. காதலின் ஆழத்தை, அதன் காலங் கடந்த பயணத்தை அறிமுக நட்சத்திரங்களைக் கொண்டே சாதித்துக் காட்டியது சரவண ராஜேந்திரனின்
இயக்கம்.
பரத் நீலகண்டன் - ‘கே 13’
முன்பின் அறிமுகற்ற பெண்ணின் வீட்டுக்கு வந்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நாயகனைப் பற்றிய கதை. பக்கத்தில் பிணத்தை வைத்துக் கொண்டு நாயகன் அடையும் பதற்றத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் முயற்சியில் முழுமையான வெற்றியைப் பெற்றிருந்தார் பரத் நீலகண்டன். திரையில் கால்பதிக்க துடிக்கும் ஓர் இளைஞனின் கதாபாத்திரத்தைத் துடிப்பு மிக்கதாக வடிவமைத்திருந்தார். ’கே 13’ மூலம் நேர்த்தியான படங்களைத் தன்னிடம் எதிர்பார்க்க வைத்திருக்கிறார்.
வி.ஜே.கோபிநாத் - ‘ஜீவி’
சூழ்நிலையைப் பயன்படுத்தி திறமையாகத் திருடிய ஒருவன், தனது பகுத்தாயும் புத்தியால் அக்குற்றத்தால் விளையவிருந்த ஊழ்வினையின் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளும் கதை. ஊழ்வினையி லிருந்து யாரும் தப்ப முடியாது என்று திருக்குறள் முன்வைக்கும் தத்துவத்துக்குச்சவால் விடுத்தது திரைக்கதை. மூளைக்கு வேலை தரக்கூடிய அறிவுப்பூர்வமான திரைக்கதை, உரையாடலை பாபு தமிழ் என்பவருடன் இணைந்து எழுதி தமிழ் ரசிகர்களைத் திரையரங்கில் விழித்திருக்க வைத்தார் இயக்குநர் வி.ஜே.கோபிநாத்.
எஸ்.ஒய்.கௌதம்ராஜ் - ‘ராட்சசி’
அரசுப்பள்ளிகளை மெல்ல மெல்ல அழித்தொழிப்பதில் கல்வி வியாபாரிகளின் பங்கு என்ன என்பதை எடுத்துக்காட்டிய துணிச்சலுக்காகவே எஸ்.ஒய்.கௌதம்ராஜ் கவனம் பெற்றுவிடுகிறார். கீதா ராணி எனும் ஒற்றைக் கதாபாத்திரத்தைச் சுற்றிச் சுழலும் துணைக் கதாபாத்திரங்கள் விழிப்புபெறும் தருணங்கள் கவனிக்க வைத்தன. அரசுப்பள்ளிகளுக்குத் தேவைப்படும் மேம்பாடு, அங்கே அத்தியாவசியமாக உருவாக்கப்பட வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவை பற்றிய விழிப்புணர்வைத் திடமாகப் பார்வையாளர்களின் மண்டைக்குள் ஏற்றியது கௌதம் ராஜின் இயக்கம்.
மகாசிவன் - ‘தோழர் வெங்கடேசன்’
சுயதொழில் செய்து உயர நினைக்கும் ஓர் இளைஞனின் வாழ்வைச் சாலை விபத்துப் புரட்டிப்போட்டுவிடுகிறது. கைகள் இரண்டையும் இழந்த நிலையில், பெரும் போராட்டத்துக்குப் பின் இழப்பீட்டை அறிவிக்கிறது நீதிமன்றம். இழப்பீடு தரவேண்டிய அரசு அலைக் கழிக்கிறது. விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தை ஜப்தி செய்து கொடுக்கிறது நீதிமன்றம். அந்தப் பேருந்தை இயக்கவும் முடியாமல், அதைப் பராமரிக்கவும் முடியாமல் கைகளை இழந்த அந்தச் சாமானியன் படும் அவஸ்தைகளை, அரசாங்கம் சாமானியர்களை எப்படி அலைக்கழிக்கும் என்பதை, வணிக சினிமாவுக்குரிய சமரசங்களுடன் காட்சிப்படுத்தியிருந்தாலும் முற்றிலும் புதிய முயற்சியைக் கையிலெடுத்திருந்தார் மகாசிவன்.
பிரதீப் ரங்கநாதன் - ‘கோமாளி’
பள்ளிக் காலத்தில் தன்னைக் கவர்ந்த பெண்ணிடம் காதலைச் சொல்லும் வேளையில் விபத்துக்குள்ளாகி கோமாவில் விழும் நாயகன் பதினாறு ஆண்டுகள் கழித்து கண் விழித்துப் பார்க்கிறான். இனி வருந்திப் பயணில்லை என்று எல்லாம் மாறிப்போய்விட்ட நிகழ்கால உலகத்துக்குள் தன்னை வெற்றிகரமாக தகவமைத்துக்
கொள்பவனின் கதையை நகைச்சுவை கொப்பளிக்க சொல்லி கவனிக்க
வைத்தார் பிரதீப் ரங்கநாதன்.
எம்.ஆர்.பாரதி - ‘அழியாத கோலங்கள்’
ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன் தனது எழுத்துக்கு விதையூன்றிய கல்லூரித் தோழியை 24 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் தருணம். அப்போது நேரும் எதிர்பாராத இழப்பின் சூழலில் சிக்கும் அந்த முதிய தோழியைச் சமூகமும் சட்டமும் எதிர்கொள்ளும் விதம்தான் கதை. சிறுகதைத் தன்மை கொண்ட கதையை, சமரசம் ஏதுமின்றித் திரைக்கதை ஆக்கியிருந்தார் இயக்குநர் எம்.ஆர்.பாரதி. உரையாடலும் படத்தில் பங்கேற்ற நட்சத்திரங்களைப் பயன்படுத்திய விதமும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தன.
இவர்களோடு ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை, ‘காளிதாஸ்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீசெந்தில், ‘மெய்’ படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன், ‘அருவம்’ படத்தின் இயக்குநர் சாய் பாஸ்கர் ‘தொரட்டி’ பட இயக்குநர் மாரிமுத்து, ‘வெள்ளைப்பூக்கள்’ பட இயக்குநர் விவேக் இளங்கோவன் ஆகியோருக்கும் 2019-ல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த அறிமுக இயக்குநர்களின் பட்டியலில் கம்பீரமாக இடமளிக்கலாம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in