Published : 03 Jan 2020 10:39 AM
Last Updated : 03 Jan 2020 10:39 AM

திரைவிழா முத்துகள்: ஈரானின் இன்னொரு முகம்

எல். ரேணுகா தேவி

அழகியலும் யதார்த்தமும் நிறைந்த திரைப்படங்கள் என்றாலே ஈரான் நாடு நினைவுக்கு வந்துவிடும். ஈரானியப் படங்கள் உலக அளவில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் குறைத்துச் சொல்வதற்கில்லை. அப்படிப்பட்ட தேசத்தின் அதிர்ச்சிகரமான இன்னொரு முகத்தைத் துணிந்து வெளிக்காட்டுகிறது ‘ஜஸ்ட் 6.5’ என்ற திரைப்படம்.
சயீத் ருஸ்டியின் (Saeed Roustayi) எழுத்து, இயக்கத்தில் உருவான இப்படம், ஈரானின் தேசிய திரைப்பட விழாவில் பார்வையாளர்களின் விருதை (Audience Award) வென்றது.

நடந்து முடிந்த 17-ம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, தமிழ்த் திரை ஆர்வலர்களை உறையவைத்தது. போதைப் பொருள் கடத்தலைக் கடும் குற்றமாகப் பார்க்கும் ஈரானில், அதில் ஈடுபடுவோரின் சமூகப் பின்னனி, அதைத் தடுக்க முற்படும் சட்டம், நீதி விசாரணை அமைப்புகளின் எதிர்மறையான அணுகுமுறை ஆகியவற்றை அழுத்தமாகப் பேசியிருக்கிறது ‘ஜஸ்ட் 6.5’.

ஒதுக்குப்புறமான இடமொன்றில் போதைப் பொருள் பயன்படுத்தும் ஒரு கூட்டத்தைக் கைது செய்கிறது காவல்துறை. அதைத் தொடர்ந்து போதைப் பொருள்களைக் கடத்தி விற்கும் இளம் தாதாவான நசீர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியான சமத்தால் கைது செய்யப்படுகிறார். அவர் ஏன் இந்தக் குற்றத் தொழிலுக்குள் வந்தார் என்பதைப் போலவே, இதில் ஈடுபடும் ஒவ்வொருக்கும் ஒரு கதை இருக்கிறது.

போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் தொழிலைப் பின்னால் இருந்து இயக்கும் பெரிய தாதாக்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பித்துவிட, நசீர் போன்ற கூலிக்கு மாரடிப்போரின் உயிர்கள் மதிப்பற்றுப் பறிக்கப்பட்டுவிடுகின்றன. வேரை விட்டுவிட்டுக் கிளைகளை நீக்கும் ஈரானின் இத்தகைய தண்டனைச் சட்டத்தையும் அதன் போதாமையையும் இப்படம் திரைவிலக்கிக் காட்டுகிறது.

திரைக்கதையின் வேகத்துக்குச் சமமாகப் படத்தின் உரையாடலும் வேகம் காட்டுகிறது. விசாரணை அதிகாரி சமத் பேசும் வசனங்களின் நீளத்தையும் அடர்த்தியையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். நசீருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவனது வீடு உட்பட அனைத்து சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. அப்போது, “எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், எனது உறவினர்கள் வசிக்கும் வீட்டை மட்டுமாவது விட்டுவிடுங்கள். எங்களது பழைய வீட்டில் ஒருவர் உள்ளே சென்றால் மற்றொருவர் எதிரில் வர முடியாது.

அவ்வளவு குறுகலான, காற்றோட்டம் இல்லாத வீடு. வெளிநாட்டில் பயிலும் குழந்தைகளின் படிப்பை முடக்கிவிடாதீர்கள். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட என் தாயின் உடல்நிலையைப் பராமரிக்க வக்கற்றுக் கிடந்தோம். குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒவ்வொருவரும் இறந்து போனார்கள். என்னையே வேறொருவர் பராமரிக்க வேண்டிய சிறு வயதில், நான் பத்துப் பேரைப் பராமரிக்க வேண்டிய சூழலில் நின்றேன். அதுவே இன்று என்னை இங்கே நிறுத்தியுள்ளது” என்று கண்ணீர் மல்க நசீர் பேசும் வசனங்கள் பார்வையாளர்களை உலுக்குகின்றன.

ஏழைகள் பலருக்கும் இப்படியான ஒரு கதை இருக்கத்தானே செய்யும், அதற்காகப் போதைப் பொருள் கடத்தலை, விற்பனையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்கிற கேள்வியைதான் விசாரணை அதிகாரியான சமத்தும் கேட்கிறார். தொடரும் விசாரணையில் “ நீ ஒரு பத்து வயது குழந்தையைக் கடத்தி, வன்புணர்வு செய்து புதைத்துவிட்டாய்” என்று குற்றம் சாட்டப்படுகிறான் நசீர்.

அப்போது துடித்துக் கதறும் அவன், “இல்லவே இல்லை, ஒருபோதும் நான் அப்படிச் செய்ததில்லை, அப்படியான மோசமான நடவடிக்கையைச் செய்பவனும் நானல்ல” என்று குரலெடுத்து அழுகிறான். “நீ செய்யாமல் இருக்கலாம். ஆனால், நீ கடத்தி விற்கும் போதைப் பொருள்தான் இப்படியான பல்வேறு சம்பவங்களுக்கும் காரணம்” எனும்போது, போதைப் பொருள் பரவலின் சமூகத் தாக்கம் எத்தகையது என்பதை மிக அழுத்தமாக எடுத்துரைக்கிறது படம்.

நசீர் உள்படப் பத்துக்கும் மேற்பட்ட மரண தண்டனை கைதிகள் ஓர் அதிகாலையில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுகிறார்கள். இதை வெகு தொலைவில் நின்று அதிகாரி சமத் பார்க்கிறார். அவர் மனத்தை உலுக்கிவிடுகிறது அந்தக் கோரக் காட்சி. அப்படியே சோர்ந்து போய் காரின் ஸ்டேரிங்கில் தலை சாய்கிறார். அவரின் கார் கண்ணாடிகளை ஒரு முதியவர் சுத்தம் செய்துவிட்டு சன்மானம் கேட்கிறார். தனது பர்ஸிலிருந்து சன்மானம் போல் அல்லாமல் கொஞ்சம் கூடுதலான பணத்தை கொடுத்தனுப்புகிறார் சமத்.

போதைப் பொருள் விற்பவர்கள், கடத்துபவர்கள், அதைப் பயன்படுத்துபவர்களை களத்துக்குச் சென்று கைதுசெய்யும் அதிகாரியாகப் பொறுப்பில் இருந்த சமத், நிர்வாகப் பிரிவுக்குப் பணிமாறுதல் வாங்கி செல்கிறார். ‘ஏன் நீங்கள் அலுவலகப் பணிக்குப் போக வேண்டும்?” என அவருடைய நண்பர் கேள்வி எழுப்புவார்.

அதற்கு சமத் அளிக்கும் பதில், நியாய தீர்ப்புகளிலிருந்து கொஞ்சம் விலகி நின்று உண்மையை உரசிப் பார்க்கும் வகையில் இருக்கிறது“இன்று நம் நாட்டில் (ஈரானில்) போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை “ஜஸ்ட் 6.5” மில்லியன் (65 லட்சம்). நாம் மேற்கொண்ட கடுமையான உழைப்பு, கொடுக்கப்பட்ட மரண தண்டனை போன்றவை இல்லாமல் இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை 6.7 மில்லியனாக (67 லட்சம்) உயர்ந்திருக்கும். அவ்வளவுதானே” என்கிறார்.

போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நசீரின் ஏழ்மை நிறைந்த பால்ய வாழ்க்கையின் சூழல் வேறு மாதிரியாக இருந்திருந்தால் அவன் போதையின் பாதைக்குப் போயிருப்பானா என்ற கேள்வியை மௌனமாக எழுப்புகிறது படம். ஏழ்மை, வேலையின்மை, வறுமை நிறைந்த வாழ்க்கைச் சூழல், தரமான மருத்துவம், கல்வி அனைவருக்கும் கிடைக்காமை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல், சட்டம், தண்டனை என்பதோடு மட்டும் சுருங்கிக்கொள்வது எதற்கும் உதவாது என்பதே இப்படத்தின் வெளிப்பாடு.

மீண்டும் ஒரு பெரிய காவலர் பட்டாளம் போதைப் பொருள் பயன்படுத்தும் ஒரு பகுதியைச் சுற்றிவளைக்க விரைந்து ஓடும் காட்சியோடு படம் முடிகிறது. ஆனால், படம் எழுப்பிய கேள்விகள் மனத்திரையில் இடைநில்லாக் காட்சிகளாக ஓடிக் கொண்டே இருக்கின்றன.

தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x