Published : 27 Dec 2019 12:36 PM
Last Updated : 27 Dec 2019 12:36 PM

நினைவில் நிற்பதே பெரும் சவால்! - ‘முண்டாசுப்பட்டி’ ராம் குமார் நேர்காணல்

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்கள் வழியே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ராம்குமார். அதற்காக 17-ம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 2018-ம் ஆண்டுக்கான ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருதைப் பெற்றிருக்கிறார்.

மற்றொரு பக்கம் ஃபிலிம்பேர் விருதையும் வென்றிருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியை இரட்டிப்பு மகிழ்சியும் உற்சாகமுமாகக் கடக்கும் அவர், அடுத்து தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கான திரைக்கதை ஆக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து.....

அடுத்தடுத்து இரண்டு விருதுகளைப் பெற்றிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

ஒரு வேலையை நாம் சரியாகச் செய்திருக்கிறோம். அடுத்துச் செய்யவிருக்கும் வேலையை இன்னும் கவனமாக, சிறப்பாக செய்ய வேண்டும். இந்த இரண்டு விஷயங்களுக்கும் பலமும் ஊக்கமும் தரும் அங்கீகாரமாக இந்த விருதுகளைப் பார்க்கிறேன். ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்போதே ஃபிலிம்பேர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தேன்.

இந்த ஆண்டு கிடைத்ததில் மகிழ்ச்சி. சொந்த மண்ணில் கிடைக்கிற அங்கீகாரம்தான் மிக முக்கியமானது. அது 17-ம் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் வழங்கப்பட்ட ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது. நான் சற்றும் எதிர்பார்க்காதது.

திரைப்பட ஆர்வலர்களும் அபிமானிகளும் அதில் தீவிரமாக இயங்குகிறவர்களும் அந்த விருதுக்கான ஜூரிக்களும் என்னையும் எனது வேலைகளையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் நன்றியும் தமிழ்த் திரைப்படச் சூழல் இதுபோன்ற விஷங்களில் ஆரோக்கியமாக இருப்பது குறித்த பெருமிதமும் கொள்கிறேன். இந்த விருதின் பெயரிலேயே உள்ளதுமாதிரி இளைய சமுதாயத்துக்கான இன்ஸ்பிரேஷனாக இருக்கவேண்டும் என்ற பொறுப்பும் எனக்குக் கூடி இருக்கிறது.

கலைஞர்களுக்குச் சரியான தருணத்தில் பாராட்டுகள், விருதுகள் வந்து சேர்வதுதான் அவர்களது உழைப்புக்கும் படைப்பாக்கத்துக்கும் உந்து சக்தி. ஆனால், எந்த விருதாக இருந்தாலும் அரசியலும் ஒரு சார்ப்பும் இருக்கும் என்ற விமர்சனமும் வந்துவிடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விருதுகளில் அரசியல் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும், ஒரு முக்கியமான விருது என்று வரும்போது அதில் குறைந்தது 3 முதல் 7 பேர் வரைக்கும் நடுவர் குழுவில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரது மனத்திலும் நாம் செய்த வேலை நினைவில் இருக்க வேண்டும். அப்படியொரு படைப்பைக் கொடுப்பது என்பதும் சாமர்த்தியம்தான். திரைக் கலைஞனுக்குப் பாராட்டுகள் மிகவும் அவசியம். அது சமகாலத்தில் கிடைக்கும்போது கூடுதல் மகிழ்ச்சியைத் தரும். அவனது முயற்சிகள் மேம்படும்.

ரசிகனையும் திருப்திப்படுத்தி, விருக்கானதாகவும் ஒரு படத்தை உருவாக்குவது சவாலா, சக்ஸஸ் ஃபார்முலாவா?

இரண்டுமேதான். நம்மை நம்பித் திரையரங்குக்கு வரும் ரசிகனை ஏமாற்றக் கூடாது. அது மட்டும்தான் என் நோக்கம். ஒரு திரைப்படத்தைப் பார்க்க வீட்டிலிருந்து புறப்படும் ஒரு ரசிகன், அவரது 3 மணி நேரத்தையும் பார்க்கிங் செலவு, பாப்கார்ன் செலவு உட்படக் குறைந்தது 250 ரூபாய் பணத்தையும் கொடுக்கிறார்கள்.

முதலில் அவர்களின் அந்த அர்ப்பணிப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இணையப் பொழுதுபோக்கு, சொந்தப் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு திரையரங்குக்கு வரும் ரசிகர்களை எந்த விதத்திலும் நாம் ஏமாற்றக்கூடாது. எல்லோரும் அப்படி நினைத்தாலே இங்கு பல நல்ல திரைப்படங்கள் வரத் தொடங்கிவிடும்.

ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி?

கொசுக்கள் முட்டையிடுவது போல படம் எடுக்க வேண்டும் என நினைப்பது தவறு. நாம் படம் எடுக்காத காலகட்டத்திலும் எப்போதோ எடுத்த படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க வேண்டும். ‘முண்டாசுப்பட்டி’ படம் முடித்துவிட்டு அடுத்த படத்துக்கான வேலைகளில் இருந்தபோது, ‘ஒரு கோடி சம்பளம் தர்றோம். ‘முண்டாசுப்பட்டி’ மாதிரியே காமெடி படம் எடுங்க?’ என சில தயாரிப்பாளர்கள் முன் வந்தனர்.

ஆனால், எனக்குப் பணம் முக்கியமில்லை. அதனால்தான் ‘ராட்சசன்’ பட வேலைகளைக் கையில் எடுத்தேன். தொடர்ந்து ரசிகர்களின் நினைவில் நிற்பதே பெரும் நிம்மதியாக நினைக்கிறேன். இன்றைக்கும், ‘முண்டாசுப்பட்டி’ படம் பார்க்கும் பலரும், ‘மன அழுத்தம் இருக்கும்போதெல்லாம் உங்கள் படத்தைத்தான் பார்க்கிறோம்’ என்கிறார்கள். ‘‘ராட்சசன்’ பார்த்த பலரும், ‘பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஐந்து முறை பார்த்தேன்’ என்றார்கள். அதைத்தான் அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

தனுஷுக்கு எந்த மாதிரியான ஒரு களத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்?

தனுஷிடம் இந்தக் கதையின் கருவைச் சொன்னதும், ‘எப்போது படப்பிடிப்பு இருக்கும்?’ எனக் கேட்டார். நானோ, ‘எனக்கு திரைக்கதையை முடிக்க குறைந்தது 10 மாதங்கள் தேவை!’ என்றேன். நான் இப்படிச் சொன்னது அவருக்குப் பிடித்திருந்தது.

தனுஷும், வெற்றிமாறனும் இணையும் படங்கள் கமர்ஷியல் களத்தில் உருவாகும் படங்கள் மட்டுமே அல்ல. சினிமா ரசிகன் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளும் விதமானதாகவே இருக்கின்றன. தனது பெரும்பாலான படங்களை அந்த மாதிரியான தளத்தில் நின்றுதான் தனுஷ் எதிர்கொள்கிறார். அப்படிப்பட்ட கலைஞனுக்கு ஒரு கதை எழுதும்போதும் அது எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியொரு களத்தைத் தேர்வு செய்திருக்கிறேன்.

கதை என்ன, எப்போது படப்பிடிப்பு?

கதையும் களமும் முடிவானாலும், திரைக்கதை இன்னும் என்னிடம் நேரம் கேட்கிறது. படத்தின் இடைவேளை காட்சிக்கு மட்டுமே ஒரு மாதம் எடுத்துக்கொண்டேன். திரைக்கதை உருவாக்கத்தின்போது இந்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என நான் அழுத்தம் கொடுத்துக்கொள்வதில்லை. அதேபோல 24 மணி நேரமும் யோசித்துக்கொண்டே இருப்பதுமில்லை.

தினசரி வாழ்க்கையில் ஒரு பகுதியாக இந்த வேலையை எடுத்துக்கொண்டு செய்துவருகிறேன். முந்தைய படங்களைப் போல நகைச்சுவை, திரில்லர் வகைகளில் இந்த புதிய படத்தினை அடக்கி விட முடியாது. சமூகம் சார்ந்த அக்கறையை பிரதிபலிக்கிற களம். தமிழ்நாட்டில் நடந்த இரண்டு உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை உருவாகிறது. ஜனரஞ்சகமான கதைக் களம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x