Published : 27 Dec 2019 11:27 AM
Last Updated : 27 Dec 2019 11:27 AM

ரசிகப் பார்வை: பதின்ம வயதின் கேள்விகள்!

ஸ்டாலின் சரவணன்

ஏதேனுமொரு படம் பார்த்த ஞாபகத்தைக் கிளர்த்தாமல் பழைய நாட்களை நினைவு கூருவது என்பது தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு சாத்தியப்படாதுதான். அப்போதைய பெரிய பொழுதுபோக்கு சினிமாவைத் தவிர வேறெதுவுமில்லை.

இப்போது தொழில்நுட்பம் பெருகிய காலகட்டத்திலும் எல்லோருக்குள்ளும் ஒரு பதின்பருவத்துக் காதல் நினைவு குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த உறக்கத்தைக் கலைக்கும் திரைப்படங்கள் சீரான இடைவெளியில் வந்துகொண்டும் இருக்கின்றன.

பள்ளிப் பருவக் காதலை உள்ளடக்கமாகக் கொண்ட திரைப்படங்கள் குறித்து இருவேறு பார்வைகள் உண்டு. ‘இதுபோன்ற படங்கள் பதின்ம வயதினர் மனதைச் சலனப்படுத்துகின்றன. இவை வரவேற்கத்தக்கவை அல்ல’ என்பது அவற்றில் ஒன்று. கலை என்பது உண்மைக்கு மிக அருகில் நின்று பேசுவதும் நிகழ்ந்து கொண்டே இருப்பதும் என்ற புரிதல் கொண்ட ரசிகர்கள், ‘அழியாத கோலங்கள்’, ‘பன்னீர்ப் புஷ்பங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’ தொடங்கி ‘அழகி’, ஆட்டோகிராப்’ ‘96’வரை தமிழில் வெளிவந்த ‘பள்ளிக் காதல்’ படங்களை வரவேற்காமல் இல்லை. மலையாளத்திலும் இந்த வரிசை பெரும் சுகந்தமாக வீசிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘தண்ணீர் மாந்தன் தினங்கள்’ நினைவுகளைக் கிளர்ந்தெளச் செய்யும் வரிசைக்கு அழகு சேர்த்திருக்கிறது.

இயக்குநர் ரூபா ராவ், இயக்கத்தில் கடந்த அக்டோபரில் வெளியான ‘காண்ட்டுமூட்டே’ (Gantumoote) கன்னடப் படத்தில் பதின்ம வயதின் பள்ளிக் காதலை மலர்ச்சியான திரைக்கதையோடு அணுகியிருந்தார். தண்ணீர் மாந்தன் தினங்கள்’ படத்தின் திரைக்கதை ரசிகனின் மனத்தை இன்னும் மலரச் செய்யும் மாயத்தைச் செய்கிறது.

மீரா கல்லூரியில் படிக்கின்ற காலத்திலிருந்து கதை தொடங்குகின்றது. ஆனால், மீராவின் பள்ளிக் காலத்துக் காதலை நினைவில் மீட்டுவதுதான் படம். தொண்ணூறுகளில் நடப்பதாகக் காட்டப்படுவது காட்சிகளுக்கு இனிமை கூட்டுகிறது . ஒரு மலை மீது அமர்ந்து கொண்டு தன் நினைவுகளின் வழியே படத்தை மென்னுணர்வுகளில் மிதக்கவிடுகிறாள். அவளது ஒன்பது வயதிலிருந்து தொடங்கும் நினைவுகள் ஓர் பதின்மப் பெண்ணின் தனித்த உலகுக்குள் அழைத்துச் செல்கின்றன.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் தனித்து வாழும் மகள், திரையரங்கு சென்று சினிமா பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்கிறாள். பெண் ஒருத்தி தீவிரமாக சினிமா பார்ப்பதாகக் கதையொன்றில் வருவது புதிதாக இருக்கிறது.சினிமாவைத் தன் குருவாக, காதலாக வரித்துக்கொள்கிறாள்.திரைப்படங்களுக்கும் வாழ்வுக்குமான இடைவெளியைக்கூட எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத அவளது மனம், மெல்ல மெல்ல முதிர்வடைவதைக் காட்சிப்படுத்திய பாங்கு சிலிர்பூட்டக்கூடியது.

அந்தக் காலகட்டத்தில் இந்தி சினிமாவில் பிரபலமாகத் தொடங்கிய ஷாரூக் கான், சல்மான் கானைக் கனவு நாயகர்களாக மனத்தில் வரைந்து கொள்ளும் சாதாரண இளம் கதாபாத்திரமாகத்தான் முதலில் அறிமுகமாகிறாள் மீரா. ஆனால், தொடரும் காட்சிகளில் அவளின் தெளிவு, உறுதியான மனத்தின் வழியாக, வாழ்வைத் தத்துவ விசாரணையை செய்துகொள்ளும் முதிர்ச்சி அவளுக்குச் சேகரமாகிறது.

பெண்களின் பரிசுத்தமான அன்பைக் கையாளும் பக்குவம் கூட ஆண்களில் பெரும்பாலானோருக்கு இல்லை என்பதுதான் திரைவழி காட்டப்படும் யதார்த்தம். பள்ளியில் உருவாகும் காதல், நகரும் போக்கில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப் படம் இயல்பாகச் சொல்கிறது.

படம் முடிந்த பின்னும் மீரா கண்களை விட்டு வெளியேற மறுக்கிறாள். முதன்முதலில் அவள் முகத்தில் வரும் வெட்கத்தைக் காட்சியில் பார்க்கும்போது, கொல்லையில் மொட்டு மலர்வதைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்கள் ஆகிறோம். எந்தத் திணிப்பும் இல்லாத காட்சிகள். ஒவ்வொருவரது மன ஆல்பத்தைத் திறந்து பார்க்க வைக்கிறது.

இருளைப் பார்த்து மிரளும் கண்களைப் போல, காமம் துளிர்விடும் பருவத்தில் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவருக்கொருவர் எதிர்ப்பக்கம் தள்ளிவிடும் காட்சிகள் உயிர்ப்போடு இருக்கின்றன. மீராவை டார்லிங் என்பதன் சுருக்கப்பதமாக ‘டிங்' என்றழைப்பதாக இருக்கட்டும்; தாழ்வு மனப்பான்மை படரும் இடமாகட்டும் நாயகன் மது பதின்ம வயதின் பிரதிநிதியாக வருகிறார்.

முத்தமிட்டால் கர்ப்பம் ஆகிவிடுவோமோ என்று மீரா, காதலன் மதுவிடம் கேட்கும் இடம் அந்தப் பருவத்தில் நாமும் அப்படித்தானே இருந்தோம் என்று எண்ணி நகைக்கத் தோன்றுகிறது. அதேநேரம் நமது கல்வித்துறையில் விலங்கியல் ஆசிரியர்கள், ‘நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்று பாலியல் விழிப்புணர்வுப் பக்கங்களைக் கடப்பது காலத்தின் தொடர்ச்சியான வருத்தத்துக்குரியது.

வெறும் காதலை மட்டும் படம் பேசவில்லை. பொதுத்தேர்வை முன்வைத்து இளம் மனங்களில் ஏற்படும் அச்சம் வாழ்வையே குலைத்துப் போடுகிறது என்ற கருத்தை மற்றொரு இழையாக, ஆனால் மறைமுகமாக உணர்த்திச் செல்கிறது ஷாபின் பேக்கருடன் இணைந்து இப்படத்தின் இயக்குநர் ஏ.டி.கிருஷ் எழுதியிருக்கும் திரைக்கதை.

இதுபோன்ற படங்களில் கதாபாத்திரங்களின் தோழமைபோல் பின்னணி இசை அவர்களைப் பின்தொடர வேண்டும். நதியில் விழுந்து நகரும் இலையென அதைச் செய்திருக்கிறது இசை. படத்தில் யாருடைய நடிப்பும் மிகை இல்லை, ஆசிரியராக வரும் கதாபாத்திரம், பள்ளிகளில் பதின்பருவத்து சிக்கலான மாணவர்களைக் கையாளும் பக்குவத்தை வலியுறுத்துவதிலும் திணிப்போ பாடம் நடத்துதலோ இல்லை.

மீரா தன் வாழ்வின் ஜன்னல்களை நம்மைக் கைபிடித்து அழைத்துக்கொண்டுபோய் ஒவ்வொன்றாகத் திறந்து காட்டுகிறாள். ஒவ்வொரு சன்னல் திறப்பும் ஒரு அனுபவத்தைத் தருகிறது. அது நம் மனத்தின் ஜன்னல்களையும் ரகசியமாகத் திறக்காமல் இல்லை. திரைப்படங்கள் பார்ப்பது ஒரு நல்ல அனுபவத்தைப் பெறுவதற்காக என்பதை இத்திரைப்படம் நிரூபணம் செய்கிறது.

தொடர்புக்கு: stalinsaravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x