

மானா பாஸ்கரன்
‘சினிமா என்பது சப்தமல்ல’ என்பதைத் தமிழ் சினிமாவில் நிறுவியவர் இயக்குநர் மகேந்திரன். எழுபதுகள் தொடங்கி தொண்ணூறுகள் வரையில் தமிழ் சினிமாவின் திசையைத் தீர்மானித்த திரைச் சிற்பிகளில் மகேந்திரன் முதன்மையானவர். அவர் மறைந்த ஒரு மாத காலத்துக்குள் வெளிவந்த அற்புதமான நூல் இது.
பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு ரசிகனின் நெஞ்சை வருடித் தாலாட்டுவது மட்டுமே சினிமா கலையின் தொழில் தர்மம் என்று கோடம்பாக்கம் எண்ணிக்கொண்டிருந்த காலம் அது. மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ போன்ற திரைப்படங்கள் காட்சிக் கலையின் மழைமறைவுப் பிரதேசங்களாக குளிர் சாரலைக் கொண்டு வந்து சேர்த்தன.
அருள்செல்வன் தொகுத்துள்ள இப்புத்தகத்தில் தமிழகத்தின் பலதுறைகளைச் சேர்ந்த மிகச் சிறந்த ஆளுமைகள் பலரும் மகேந்திரன் மீதான தங்களுடைய மீள்பார்வையைப் பதிவு செய்திருக்கிறார்கள். மகேந்திரனின் திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதில் பார்வையாளனின் மனதில் மிதமான மழை பெய்யும்..
படத்தைப் பார்த்து முடித்த அந்த நொடியில் ஒரு கனமழை பெய்வதை ஒவ்வொரு பார்வையாளனும் உணரமுடியும். அதுதான் மகேந்திரன். இந்த உணர்வைத்தான், அவரது படங்கள் தமிழ் சினிமா வானின் வானிலையாக பெரும் தாக்கத்தைச் செலுத்தியதை ஆளுமைகள் ஒவ்வொருவரும் அவரவர் மொழியில் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ‘அவருடன் சில படங்களில் இணைந்து பயணிக் கிறபோது அவருக்குள் இருந்த எழுத்தாளனின் பெரு வலிமையை அருகிருந்து பார்த்து வியந்திருக்கிறேன்’ என்கிறார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்.
‘மகேந்திர ஜாலம் செய்த மாமனிதன். மெளன முக அசைவுகளை நடிப்பு மொழியாக்கிய கலா வித்தகர்’ என்று தனது குருநாதர் மகேந்திரனை வியக்கிறார் அவருடன் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் ‘யார்’ கண்ணன்.இப்படி ‘சொல்லித் தந்த வானமாக விளங்கிய மகேந்திரனை’ ஆளுமைகள் வியந்துசெல்லும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ரசனையான பாடம். சினிமாவைச் சுவாசிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ‘குடைவரை’ புத்தகம்!
சொல்லித் தந்த வானம்
தொகுப்பு - அருள்செல்வன்
வெளியீடு: புதிய தமிழ் புத்தகம்
1, பாரதிதாசன் தெரு,
மலையம்பாக்கம், சென்னை - 122.
போன்: 98409 48514
பக்கம்: 256
விலை ரூ: 230