Published : 20 Dec 2019 10:52 am

Updated : 20 Dec 2019 10:52 am

 

Published : 20 Dec 2019 10:52 AM
Last Updated : 20 Dec 2019 10:52 AM

பாம்பே வெல்வெட் 14: ஒரு நடிகர் பாடகர் ஆன கதை!

bombay-velvet

பாடல் பதிவுக்கான அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் அனைவரும் பதற்றத்துடன் காத்திருந்தனர். டூயட் பாடல் ஒன்றுக்கு அன்றைய நாளின் பிரபலப் பாடகர்கள் இருவர் ஜோடியாகப் பாடுவதாக இருந்தது. ஆண் குரலுக்கான பாடகர் மட்டுமே வந்திருந்தார். அவர்தான் திரைப்படத்தின் கதாநாயகனும் கூட. பெண் பாடகர் இன்னும் வந்தபாடில்லை.

சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தொடர்ந்து வேறு பணிகள் காத்திருந்தன. சூழலின் இறுக்கம் கலைத்து அந்தப் பாடக நடிகர் முன்வைத்த வித்தியாசமான யோசனைக்கு, இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி அரைமனதாகச் சம்மதித்தார். அதன்படி ஆண், பெண் என இரண்டு குரலிலும் ஆண் பாடகரே பாடி முடித்தார். ‘ஹால்ஃப் டிக்கெட்’ படத்தில் பெண் வேடமிட்ட ஆணுக்குச் சற்றுப் பிசிறடித்த ‘பெண் குரல்’ பொருந்திப்போக, ரசிகர்கள் அதனை வரவேற்கவும் செய்தனர். அந்த சமயோசித பாடக நடிகர் கிஷோர் குமார்.

தமிழ்ப் படவுலகின் சந்திரபாபு போல, இந்திப் படவுலகை அக்காலத்தில் கலக்கிய கிஷோர்குமார் ஒரு பன்முக வித்தகர். காமெடி, கதையின் நாயகன் என நடிப்பில் பரிமளித்ததுடன், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் ஆகியவற்றின் மூலம் தன்னுடைய திறமைகளை பரிபூரணமாக திரை உலகுக்கு அளித்தவர். மாரடைப்பால் திடீர் மரணத்தை எதிர்கொண்ட கடைசிநாள் வரை பாலிவுட்டின் உச்ச பின்னணிப் பாடகராகவும் பிரகாசித்தார்.

அண்ணனுக்காக நடிக்க வந்தவர்

பாலிவுட்டில் கங்குலி சகோதரர்கள் வெகு பிரபலம். வங்காளிகளான இந்த மூன்று சகோதரர்களில் மூத்தவர், ‘பாம்பே டாக்கீஸ்’ காலத்தில் கொடிகட்டிப் பறந்த அசோக் குமார். தன் வழியில் தம்பி அனூப் குமாரையும் நடிகராக்கினார் அசோக் குமார். விளையாட்டுத்தனம் மிகுந்த கடைத்தம்பி கிஷோர் குமார், அண்ணனின் இழுப்புக்கு எளிதில் உடன்படவில்லை.

அசோக்குமாருக்காக கிஷோரைக் கதாநாயகனாக்கிப் படமெடுத்தவர்கள் எல்லாம் கையைச் சுட்டுக் கொண்டனர். 1946-55 இடையே கிஷோர் குமார் நடித்த 22 படங்களில் 16 படுதோல்வியைக் கண்டன. எஞ்சிய படங்கள் தப்பிப் பிழைக்க கிஷோர் காரணமாக இல்லை. இத்தனைக்கும் கிஷோர் குமாருக்கு சினிமா என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால், அவரது ஆர்வம் திரையில் தோன்றுவதைவிட திரைக்குப் பின்னே பாடுவதிலே இருந்தது. அதை அண்ணன் அசோக்குமார் ரசிக்கவில்லை.

திரையிலும் திரைக்குப் பின்னும்

பாலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டாரும், பாடக நடிகருமான கே.எல்.சேகல், கிஷோர் குமாரின் மானசீகக் குரு. சேகலின் தொனியை அடியொற்றி சதா பாடிக்கொண்டிருக்கும் தம்பியை, அதே சேகல் பாணியில் பாட்டுடன் நடிக்கவும் செய்யலாமே என மடக்கினார் அசோக்குமார். அதன் பிறகுதான் கிஷோர்குமார் கவனம் நடிப்பில் திரும்பியது.

பாடக நடிகர்களின் காலம் முடிந்து, முகமது ரஃபி, மன்னாடே, முகேஷ் எனப் பின்னணிப் பாடகர்களுக்கு நடிகர்கள் வாயசைத்த அடுத்த பத்தாண்டுகளில், பாட்டுடன் நடிப்புமாகத் தனி பவனி வந்தார் கிஷோர் குமார். இந்தப் பாடகர்களின் மென்மையான குரலுக்கு மாற்றாக ஒலித்த கிஷோர்குமாரின் வித்தியாசக் குரல் அவரை மளமளவென்று முன்னேற்றி, முதலிடத்திலிருந்த முகமது ரஃபிக்கு இணையாக நிறுத்தியது.

அசோக்குமார் நடித்த ‘ஷிகாரி’ (1946) திரைப்படத்தில் ஒரு நடிகராக கிஷோர் குமாரின் திரைவாழ்க்கை தொடங்கியது. ‘ஸித்தி’ (1948) படத்தில் தனது முதல் திரைப்பாடலைப் பாடினார். நடிப்பை முதலிடத்திலும் பின்னணிப் பாடலை இரண்டாமிடத்திலும் வைத்து திரைவாழ்க்கையைத் தொடங்கினார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் ஒரு நடிகராகத் தன்னை நிரூபித்த பிறகு, தன் ஆசைப்படியே பின்னணிப் பாடலுக்கு முன்னுரிமை தரத் தொடங்கினார்.

அப்போதைய முன்னணி நடிகர்களுக்கான பின்னணிக் குரல்களை முகமது ரஃபியும், கிஷோர் குமாரும் சரிபாதியாக வென்றனர். ராஜேஷ் கன்னாவுக்கு கிஷோர் குமாரின் குரல் சாலப் பொருந்தியது. கிஷோர் குரலுக்காக சஞ்சீவ் குமார் காத்திருந்தார். தொடர்ந்து தர்மேந்திரா, ஜிதேந்திரா, அமிதாப் பச்சன், மிதுன் சக்ரவர்த்தி, சஞ்சய் தத், அனில் கபூர் என அடுத்தடுத்த பத்தாண்டுகளில் கிஷோர் குமார் திரும்பிப் பார்க்கவே நேரமின்றிப் பாடித் தள்ளினார்.

‘ஆஹா...’ ஆலாபனை

கிஷோர் குமார் வீட்டில் அண்ணன் அசோக்குமார் உபயத்தில் ஆளுயர தாகூர் உருவப் படம் ஒன்று வீற்றிருந்தது. அதன் அருகே கே.எல்.சேகல் மற்றும் ஹாலிவுட்டின் பாடக நடிகர் ‘டேனி கே’(Danny kaye) ஆகியோருக்கும் தன்பங்குக்கு இடம் தந்தார் கிஷோர்குமார். இந்த மூவரையும் வணங்கிய பின்னரே அன்றாடக் கடமைகளைத் தொடங்குவது அவரது வாடிக்கை.

டேனி கே உள்ளிட்ட ஹாலிவுட் பாடகர்கள் மத்தியில், மேற்கத்திய பாணியிலான ஆலாபனை அப்போது பிரபலமாக இருந்தது. இந்தியாவில் அதைத் தன் குரலில் பதிப்பித்தார் கிஷோர் குமார். பின்னாளில் வெளியான ‘அந்தாஸ்’ (1971) திரைப்படத்தில் ஹேமமாலினியுடன் ராஜேஷ்கன்னா தோன்றும் ‘ஸிந்தகி ஏக் ஸஃபர்...’ பாடல் இதைக் காட்சிபூர்வமாகச் சொல்லும்.

பாடவைத்த பர்மன்கள்

அசோக்குமாரைச் சந்திப்பதற்காக வந்த இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன் காதுகளில் வீட்டுக்குள்ளிருந்து கசிந்த வித்தியாசமான இந்த ஆலாபனை ஈர்த்தது. அதுவரை சேகலை அடியொற்றியே பாடிவந்த கிஷோர் குமாரை அரவணைத்து, அவரது தனித்தன்மையை வெளிக்கொணர்ந்தார் பர்மன். அப்போது கொடிகட்டிப் பறந்த லதா மங்கேஷ்கருடன் பர்மனுக்குப் பிணக்கு ஏற்படவே, லதாவுக்குப் போட்டியாக லதாவின் சகோதரி ஆஷா போஸ்லேவைக் களமிறக்கினார்.

லதாவுக்கு முகமது ரஃபி போல, ஆஷாவுக்கு ஏற்ற ஆண் குரல் ஜோடியைத் தேடிக்கொண்டிருந்த பர்மனுக்கு, கிஷோர் குமார் வரப்பிரசாதமானார். எஸ்.டி.பர்மன் இசையில் கிஷோர்-ஆஷா குரல்களில் தித்திப்பான பாடல்கள் பிறந்தன. எஸ்.டி.பர்மனைத் தொடர்ந்து மகன் ஆர்.டி.பர்மனும் கிஷோர் குமாரைத் தான் இசைகோக்கும் திரைப்படங்களின் ஆஸ்தான ஆண் குரலாக வைத்துக்கொண்டார். திரைப்படங்களுக்கு அப்பாலும், ஆர்.டி.பர்மன் இசையில் கிஷோர்-ஆஷா ஆல்பங்கள் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை ஈர்த்தன.

துரத்திய தனிமை

உச்ச நடிகையான மதுபாலா உட்பட நான்கு நடிகையரை அடுத் தடுத்து மணந்தார் கிஷோர் குமார். இவர்களில் இருவர் விவாகரத்தாகிச் செல்ல, இதய நோய் பாதிப்பால் தனது மனைவியாகவே இறந்த மதுபாலாவின் மறைவு கிஷோரை வெகுவாகப் பாதித்தது. இருமுறை எட்டிப்பார்த்த மாரடைப்புக்குப் பின்னர் தொய்ந்த உடல், மனநிலையிலே பின்னணிப் பாடல் உலகில் சஞ்சரித்தார். பாடும் நேரம் தவிர்த்து, இதரப் பொழுதுகளில் பெரும் தனிமையில் தவித்தார்.

தோட்டத்துச் செடிகளுக்குப் பெயர் வைத்து அவற்றுடன் பேசிக் கொண்டிருந்ததும், அவற்றுக்காகப் பாடியதும் அப்போது செய்தியானது. நாட்டின் பிரபலப் பின்னணிப் பாடகராக வலம்வந்த கிஷோர் குமார், 58 வயதில் மூன்றாம் மாரடைப்பின் அழைப்பில் தன்னைத் துரத்திய தனிமையில் முழுவதுமாக ஆழ்ந்தார்.

ரசிகர்களால் செல்லமாக ‘கிஷோர்தா’ என அழைக்கப்படும், கிஷோர்குமார் பாடல்கள் பலவும் சாகாவரம் பெற்றவை. ‘மேரி சப்னோ கி ராணி’ ( ஆராதனா-1969), ‘தேரே பினா ஸிந்தகி’ (ஆந்தி-1975), ‘ஓ சாத்தி ரே’ (முகாதர் கா சிக்கந்தர்-1978), ‘சாகர் கினாரே’ (சாகர்-1985), ‘ஹமே தும்ஸே பியார் கித்னா’ (குத்ரத்-1981) போன்றவை அவற்றில் சில.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com


பாம்பே வெல்வெட்நடிகர்பாடகர்கதைதிரைபாடவைத்த பர்மன்கள்துரத்திய தனிமை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author