Published : 13 Dec 2019 11:59 am

Updated : 13 Dec 2019 12:19 pm

 

Published : 13 Dec 2019 11:59 AM
Last Updated : 13 Dec 2019 12:19 PM

17 வது சென்னை சர்வதேசப் படவிழாவில் இன்று: ஒரு தாயின் முடிவு!

ciff

திரை பாரதி

சென்னை சர்வதேசப் படவிழாவின் இரண்டாவது நாளாகிய இன்று, தவறவிடக் கூடாத படங்கள் பல. தனிப்பட்ட மனிதர்களின் குடும்ப வாழ்க்கையைப் புரட்டிப்போடும் சக உறவுகளின் அதிரடியான நகர்வுகள், தேசத்தின் நெருக்கடியான அரசியல், குடிமக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வலை, யதார்த்தமும் கற்பனையும் கச்சிதமாக இணையும் ஃபாண்டஸி, குற்றம் மலிந்த நிழலுலகம் எனப் பலவிதமான கதைக் களங்களில் உருவான பன்னாட்டுத் திரைப்படங்களை உலகத் திரைப்படங்களுக்கே உரிய ஈர்க்கும் திரைமொழியில் காணலாம்.

இன்று ஹங்கேரி, அர்ஜெண்டினா, அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, இத்தாலி, ஈரான், உக்ரேன், டென்மார்க், மலேசியா, சிங்கப்பூர்,. பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, போலந்து, ஆகிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன. காலை 9.30 மணிக்கு அண்ணா திரையரங்கிலும் 9.45 மணிக்கு அதன் அருகிலேயே உள்ள கேசினோ திரையரங்கிலும் முதல் திரையிடல் தொடங்கி விடுகின்றன. தேவி திரையரங்கில் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது முதல் திரையிடல். அத்திரையரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்குத் திரையிடப்படும் அமெரிக்கப் படம் ‘ஆலிஸ்’ (Alice).

கணவனால் ஏமாற்றப்பட்டு, கைவிடப்படும் ஒரு இளம் தாய், தனது குழந்தைகளைக் காப்பதற்காக, கையறு நிலையில் துணிந்து எடுக்கும் முடிவை, பழமை வாதமும் ஆணாதிக்க உலகமும் எப்படிப் பார்க்கின்றன என்பதைத் த்ரில்லர் தன்மையுடன் கூடிய விறுவிறுப்பான குடும்ப நாடகமாக விவரித்துச் செல்லும் படம். ஐரோப்பிய மாற்று சினிமாவில் புதிய தலைமுறை பெண் இயக்குநராக அடிவைத்திருக்கும் ஜோஸ்பின் மெக்காராவின் முதல் படம்.

தேவி திரையரங்கில் பிற்பகல் 7 மணிக்குத் திரையிடப்படும் கத்தார் நாட்டின் திரைப்படம் ‘எ சன்’ (A Son). வட ஆப்ரிக்க குடியரசு நாடாகிய துனிசியாவில் கதை நடக்கிறது. கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக ஃபாரெஸ் தனது மனைவி மரியம் 10 வயது மகன் அஜீஸ் ஆகியோருடன் சந்தோஷமாக ஆடிப்பாடியபடி காரில் சென்று கொண்டிருக்கும்போது, சற்றும் எதிர்பாராத துப்பாக்கி சூடு ஒன்றில் சிக்கிக் கொள்கின்றனர்.

பெற்றோர் தப்பித்தாலும் அஜிஸ் படுகாயம் அடைகின்றான். அதன்பின்னர் அந்தக் குடும்பத்தின் பின்னால் புதைந்திருக்கும் ரகசியம் வெளிவருகிறது. அரசியல் நிர்வாகம் முடங்கிய ஒரு தேசத்தின் சிதைவையும் மதமானது சாமானியர்களின் அன்றாட வாழ்க்கையில், பெண்களின் நிலைமையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் இப்படம் உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறது.

இன்று மதியம் 1 மணிக்கு தேவி பாலா திரையரங்கில் ‘தி டே ஆஃப்டர் ஐ எம் கான்’ (The Day After I’m Gone) என்ற இஸ்ரேலியப் படம் திரையிடப்படுகிறது. தற்கொலை முடிவை எடுத்துவிட்ட ஒரு இளம்பெண்ணுக்கும் அவளது தந்தைக்குமான மனப்போராட்டத்தை சித்தரிக்கும் கதை.

இதே திரையரங்கில் இன்று மாலை 5.30 மணிக்குத் திரையிடப்படும் ‘சன்ஸ் ஆஃப் டென்மார்க்’ (Sons of Denmark) 2025-ல் கதை நடப்பதாகச் சித்தரித்தாலும் புலம்பெயர் சிக்கலால் பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்கும் டேனிஸ் குடிமக்களின் பரிதவிப்பை, போராளி இயக்கம் ஒன்றில் சந்தித்து நண்பர்களாகும் இரண்டு இளைஞர்களின் பரபரப்பான வாழ்க்கை வழியே சொல்கிறது.

தேவி பாலாவில் இரவு 8 மணிக்குத் திரையிடப்படும் ‘தமனி’ என்ற மலேசியத் தமிழ்ப் படம், பாதை மாறிச் செல்லும் பல மலேசியத் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை உண்மையும் கற்பனையும் கலந்து முன்வைக்கிறது.

கேசினோ திரையரங்கில் இரவு 7 மணிக்கு திரையிடப்படும் ஈரானியத் திரைப்படம் ‘தி வார்டன்’. அண்ணா திரையரங்கில் மாலை 4.30 மணிக்குத் திரையிடப்படும் ஜெர்மானியத் திரைப்படமான ‘ஸ்வீட் ஹார்ட்ஸ்’ ஆகிய படங்களுடன் தமிழ்ப் படப் போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ‘மெய்’, ‘ஜீவி’ ஆகிய படங்களை ரஷ்யக் கலாச்சார மையத்திலும் காணலாம்.


17 வது சென்னை சர்வதேசப் படவிழாஒரு தாயின் முடிவுதாய்CIFF

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author