

ஆர்.சி.ஜெயந்தன்
சுகுமாரன், சுபா, குதிரவோட்டம் பப்பு என முன்னணி நடிகர்கள், இளமை துள்ளும் ஷ்யாமின் இசை, புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்று, மலையாளப் படவுலகில் அன்று ‘மோஸ்ட் வாண்டெட்’ கேமராமேனாகப் புகழ்பெற்றிருந்த கே.ராமச்சந்திர பாபுவின் ஒளிப்பதிவு எனப் பார்த்துப் பார்த்துத்தான் தனது முதல் படத்தின் படக்குழுவைத் தேர்வு செய்தார் கேயார். ஆனால் ‘சிசிரத்தில் ஒரு வசந்தம்’ படுதோல்வி அடைந்தது. அதற்கான முக்கிய காரணம் விநியோக முறையில் நிறைந்திருந்த சிக்கல்களும் ஓட்டைகளும் என்பதைத் தெரிந்துகொண்டார்.
போட்ட பணம் சிறிதும் திரும்பி வராமல் போனதற்கான காரணத்தை இன்னும் நெருக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பிய அவர், படம் வெளியான திரையரங்குகளைத் தேடி கேரளா முழுவதும் பயணித்தார். திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்க ஊழியர்கள், முக்கியமாக ‘புரஜெக்டர்’ அறைக்குப்போய் படத்தை திரையிடும் ஆபரேட்டர், படத்தை ஏரியா வாரியாக வாங்கி வெளியிட்ட உள்ளூர் விநியோகஸ்தர்கள் என அனைவரையும் சந்தித்தார்.
படத்தின் முதல் பிரதி தயாராகி, அது தணிக்கை சான்று பெற்று திரையரங்கம் எனும் சந்தைக்கு வரும்போது, அதிலிருந்து போட்ட பணத்தை மீட்கும் ‘டிஸ்ட்ரிப்யூசன் அண்ட் எக்ஸிபிஷன்’ ஆகிய இரண்டும்தான் ஒரு படத்தின் வியாபாரத் தலைவிதியை நிர்ணயிக்கப்படும் ‘ஸ்தலங்கள்’ என்பதைத் தெரிந்துகொண்டார். இந்த இரண்டு இடங்களிலும் தேவைப்படும் ஒழுங்கு, சீர்திருத்தம் இரண்டையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால், அதற்கான நபரைத் தேடி அலைவதைவிட, ஏன் நாமே அந்த நபராக மாறிவிடக் கூடாது என்று அவர் எண்ணினார். அந்தத் தருணம்தான் ‘கேயார்’ எனும் திரையரங்க உரிமையாளர், விநியோகஸ்தர் உருவாகக் காரணமாக அமைந்தது.
முதல் திரையரங்கும் முதல் விநியோகமும்
சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தனது மனைவி இந்திராவின் பெயரில் திரையரங்கம் கட்டினார். அடுத்து, கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ல் வெளிவந்த ‘தில்லுமுல்லு’ படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு விநியோக மாவட்டத்தின் (என்.எஸ்.சி ஏரியா) வெளியீட்டு உரிமையை வாங்கி ‘டிஸ்ட்ரிப்யூட்டரா’க முதல் அடியை வைத்தார். அதன்பின்னர் வரிசையாக ரஜினி, கமல் நடித்த படங்கள், தேவர் பிலிம்ஸின் படங்கள் என வெளியிட்டு தயாரிப்பாளர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
விநியோக நிறுவனங்களின் அலுவலகங்கள் நிறைந்திருந்த மீரான் சாகிப் தெருவில் கம்பீரமாக நடந்தார் கேயார். ஒரு திரைப்படத்தின் என்.எஸ்.சி பகுதி வெளியீட்டு உரிமையை வாங்கியபின் அதை முழுவதும் தானே வைத்துக்கொள்ளாமல் அதையும் பலருக்குப் பிரித்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்.
இதனால் சிறிய விநியோகஸ்தர்கள் பலர் உருவானார்கள். விநியோகத் தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை, ஒழுங்கு ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாகத் தன்னை மாற்றிக்கொண்ட கேயாரை, 1985-ல் சென்னை, செங்கை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்குத் தலைவராக்கினார்கள்.
போட்டியில் வென்ற கேயார்
1984-ல் மலையாளப் படவுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரும் நவோதயா ஸ்டுடியோவின் நிறுவனருமான ‘நவோதயா’ அப்பச்சன் தயாரிப்பில் அவரது மகன் ஜிஜோ இயக்கத்தில் 1984 ஆகஸ்ட் மாதம் வெளியானது ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ மலையாளப் பதிப்பு.
அதன் தமிழ் மொழிமாற்றுக்கான தமிழக விநியோக உரிமையைப் பெறுவதில் கடும் போட்டி. அந்தப் படத்துக்கு இசையமைத்த இளையராஜா, ஏவி.எம் சரவணன், நடிகர் கே.பாலாஜி உட்படப் பல பெரிய நிறுவனங்கள் போட்டிப் போட்டன. 31 வயதே ஆன கேயார் அந்தப் போட்டியில் எப்படி வென்றார்? அதை அவரே சொல்கிறார்.
“தரமணி திரைப்படக் கல்லூரியில் 3டி தொழில்நுட்பம் பற்றி நன்கு கற்றுக்கொண்டிருந்தேன். அதனால் இந்தியாவின் முதல் 3டி படம் என்றதும் எனக்கு ஆவல் அதிகமானது. ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தின் விற்பனைக்காக சென்னை தி.நகரில் செயல்பட்ட நவோதயா அலுவலகத்துக்கு அப்பச்சன் வந்திருந்தார். அதைக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கச் சென்றேன்.
அப்பச்சனின் அருகில் அவரது மகனும் படத்தின் இயக்குநருமான ஜிஜோ அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததுமே அப்பச்சன், ‘இவர் இத்தனைச் சின்னப் பையனாக இருக்கிறாரே.. இவரிடம் இத்தனை பெரிய படத்தை எப்படிக் கொடுப்பது, இவருக்கு டிஸ்ட்ரிப்யூஷன் தெரியுமா?’ என்று மகன் ஜிஜோவைப் பார்த்து மலையாளத்தில் கேட்டார்.
அதனால் ஜிஜோ என்னை அழைத்துக்கொண்டு வேறொரு அறைக்குப்போனார். ‘ஒரு 3டி திரைப்படத்தை எப்படி திரையிடுவது என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்றார். உடனே அவரிடம் ‘ நான் அரசு திரைப்படக் கல்லூரி மாணவன் என்பதைக் கூறி, அவர்கள் எடுத்த 3டி ஃபார்மேட் முறை பற்றிய எனது தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்தினேன். ‘நீங்கள் அனுமதித்தால் சில காட்சிகளையும் 3டியில் படம்பிடித்து தமிழ்ப் பதிப்பில் இணைக்கும் அளவுக்கு எனக்குத் திறமை உண்டு’ என்றேன். வியந்துபோன அவர், ‘ இந்தப் படத்தைப் பிரபலப்படுத்த விளம்பர யோசனைகள் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?’ என்றார்.
படத்தை நான் கைப்பற்றிவிட்டதாக முன்பே நம்பியதால் விளம்பர ஐடியாக்களையும் யோசித்து வைத்திருந்தேன். அதில் ஒன்றைக் கூறியதும் இதை கேரளத்தில் நாங்கள் ஏற்கனவே செய்ய இருக்கிறோம் நீங்களும் செய்யுங்கள்’ என்றவர், தனது தந்தையிடம் சென்று ‘நமது படத்தை பெரிய நிறுவனங்களுக்குக் கொடுப்பதைவிட 3டி பற்றித் தெரிந்த இவருக்குக் கொடுத்தால்தான் மிகப்பெரிய வெற்றிபெறும்’ என்றார். என்னை ஆச்சரியமாகப் பார்த்த அப்பச்சன், நான் போட்டியிலிருந்து விலகிச் சென்றுவிடுவேன் என்று நினைத்து ‘தமிழகத்துக்கான விலை 40 லட்சம்’ என்றார்.
அதைப் புரிந்துகொண்ட நான், அந்தத் தொகையை எடுத்துவிடமுடியுமா என்று உடனடியாக மனக் கணக்குபோட்டுப் பார்த்தேன். பத்து சென்டர்களில் 100 நாள் ஓடினாலே 3டி கண்ணாடி செலவு உட்பட 40 லட்சத்தை எடுத்துவிடலாம் என்ற விடை கிடைக்க, உடனே ஓகே சொன்னேன்.
அன்று ரஜினிக்கு இருந்த மொத்த பிஸ்னெஸ் 36 லட்சம்தான். அதையும் தாண்டிய தொகைக்கு ‘மை டியர் குட்டிச்சாத்தா’னை வாங்கி, 1984 தீபாவளி தினத்தன்று வெளியிட்டு அதை மாபெரும் வெற்றிப் படமாக்கினேன்” என்று நினைவுகளைப் பகிரும் கேயாரிடம் அதன்பிறகு அந்தப் படத்தின் ஆந்திரா மாநில உரிமையையும் கொடுத்தது நவோதாயா நிறுவனம்.
இயக்கமும் சங்கப் பணிகளும்
‘மை டியர் குட்டிச்சாத்தான்’ வெளியாகி சாதனை படைத்து 10 ஆண்டுகள் கடந்தோடியிருந்த நிலையில், மீண்டும் அதை 1995-ல் இரண்டாம் முறையாக வெளியிட்டு வெற்றிகண்டார் கேயார். இதுவரை நூற்றுக்கும் அதிகமான படங்களை வெற்றிகரமாக வெளியிட்டிருக்கும் கேயாரின் விநியோகத்தில், கடந்த 2018-ல் வெளியான ‘கே.ஜி.எஃப்’ தமிழகத்திலும் வசூல் சாதனை படைத்தது. இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ‘ஈரமான ரோஜாவே’ படத்தில் தொடங்கி, சிறந்த படத்துக்கான மாநில அரசின் விருதுபெற்ற ‘குட்டி’ வரை, வணிக ரீதியாக வெற்றிகளைக் குவித்த ஒரு டஜன் படங்களும் அவரது சாதனைப் பட்டியலில் அடங்கும்.
கேயாரின் சங்க நடவடிக்கைகளைப் பொருத்தவரை, தனியார் தொலைக்காட்சிகள் வழியாகத் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தர வருமானம் பெற்றுக்கொடுத்தது, தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் நல அறக்கட்டளை அமைத்து உதவியது, சங்கம் வழியாகத் தயாரிப்பாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு ஏற்படுத்தியது என அதுவும் நீளமான பட்டியல்.
இவற்றுக்கு அப்பால் தேசிய விருதுக்குழுவில் இருமுறை அங்கம் வகித்ததும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் குழுவில் மணிரத்னத்துடன் இடம்பெற்றதும் முக்கியமான பங்கேற்புகள். கடந்த 40 ஆண்டுகளாகத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் தொடரும் கேயார், தற்போது ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற தமிழ்ப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் தமிழகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்.
தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்