Published : 13 Dec 2019 11:20 am

Updated : 13 Dec 2019 11:20 am

 

Published : 13 Dec 2019 11:20 AM
Last Updated : 13 Dec 2019 11:20 AM

திரைப் பார்வை: துருவேறிய துப்பாக்கிகளின் கதை (தி ஐரிஷ்மேன் - ஆங்கிலம்) 

thiraipaarvai

ஷங்கர்

‘காட்பாதர்’ படத்தின் மூலம் கப்போலோவும், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் வெஸ்ட்’ படத்தின் மூலம் செர்ஜியோ லியோனும் நிழலுலகை மையப்படுத்திய திரைப்பட வகையைச் செம்மையாக்கி உலகளவில் தாக்கம் ஏற்படுத்திய இயக்குநர்கள். ‘காசினோ’, ‘குட்பெல்லாஸ்’, ‘தி டிபார்ட்டட்’ திரைப்படங்களால் அந்த வகைமைக்குச் செழுமை சேர்த்தவர் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி.

அதன் தொடர்ச்சிதான் ‘தி ஐரிஷ்மேன்’. தொலைவிலிருந்து பார்க்கும்போது வசீகரமாகத் தெரியும் துப்பாக்கிகள், சண்டைகள், ரத்தம் தெறிக்கும் கொலைகளின் மறுபக்கத்தைத் தனது 77-ம் வயதில் சாவதானமாகவும் கூர்மையாகவும் ஒரு காவியம்போல் மார்ட்டின் ஸ்கார்செஸி எழுதியிருக்கும் திரைப்படைப்புதான் ‘தி ஐரிஷ்மேன்’.

வன்முறையைக் கையிலெடுப்பவரின் அகத்திலும் புறத்திலும் நிகழும் சிதைவை, மாபியா அடியாளாக இருந்து மரணத்துக்காக மட்டுமே காத்திருக்கும் பிராங்க் ஷீரன் பிரதிபலிக்கிறார். நட்பு, காதல், அரசியல் என்று ஒரு குவிமையம் இந்தப் படத்தில் இல்லை.

ஒரு ஐம்பது ஆண்டு கால ஓட்டத்தில் சரித்திரத்தையே கலங்கடித்த மனிதர்கள் எப்படித் துருவேறித் துரும்புகளாக எஞ்சுகிறார்கள் என்பதை வெகு தொலைவிலிருந்து, மூன்றரை மணிநேரத்தில் மிக நிதானமாகச் சொல்லியிருக்கிறார் ஸ்கார்செஸி. மார்ட்டின் ஸ்கார்செஸியின் திரைப்படங்களில் பறவைக் கோணத்தில் தென்படும் ஏசுவும் மரியன்னையும் சிலைகளாக ஒரு முதியோர் இல்லத்தின் வரவேற்பறை மேஜையில் இந்தப்படத்தின் தொடக்கக் காட்சியில் நின்றுகொண்டிருக்கின்றனர்.

அனைத்து மனித நாடகங்களையும் அமைதியாக அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, அந்த முதியோர் இல்லத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதியவராக பிராங்க் ஷீரன் அறிமுகமாகிறார். அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் ராபர்ட் டீ நீரோ.

மாபியா தலைவன் ரஸ்ஸல், தொழிற்சங்கத் தலைவன் ஹோபா, அடியாள் பிராங் ஷீரன் ஆகியோருக்கிடையிலான நட்பையும் குடும்ப உறவுகளையும் நெருங்கிக் காட்டும் ‘தி ஐரிஷ்மேன்’-ல் பின்னணியாக அமெரிக்காவின் ஐம்பது ஆண்டுகால சமூக, அரசியல், வரலாற்று நிகழ்ச்சிகளையும் இயக்குநர், ஒரு சிம்பொனியைப் போல் நேர்த்தியாகக் கோத்துள்ளார்.

சென்ற நூற்றாண்டில் புகழ்பெற்ற மாஃபியா திரைப்படங்களின் நாயகர்களாக நடித்துப் புகழ்பெற்று, தற்போது வயோதிகத்துக்குள் நுழைந்திருக்கும் நடிகர்கள் ராபர்ட் டீ நீரோ, அல்பாசினோ, ஜோ பெஸ்கி ஆகிய மூவரும் இப்படத்தின் நாயகர்கள். இந்தக் காவிய நாயகர்கள் வழியாகத்தானே ஒரு புகழஞ்சலியை, ஒரு வழியனுப்பும் பாடலை அந்த வகைமைக்கு ஓர் இயக்குநர் எழுத முடியும்.

‘டீ ஏஜ்’ தொழில்நுட்பம் என்றழைக்கப்படும் வயோதிகர்களை இளமையாகக் காட்டும் தொழில்நுட்பத்தில், பிளாஷ் பேக் காட்சிகளுக்காக மூன்று நாயகர்களும் நாற்பது வயதுகளில் காட்டப்பட்டிருக்கின்றனர். இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்று, இரக்கமேயின்றி நேர்த்தியாகக் கொலை செய்வதற்குப் பயிற்சிபெற்ற பிராங்குக்கு, மாஃபியா தலைவரான ரஸ்ஸலுடன் நட்பு ஏற்படுகிறது.

அந்த நட்பு விசுவாசம் கொண்ட தொழில் உறவாக மாற, ரஸ்ஸலின் நண்பனும் தேசிய அளவில் புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவனுமான ஜிம்மி ஹோபாவுக்கு மெய்க்காவலாகப் பொறுப்பேற்கிறான். காலப்போக்கில் ஒரு பெரிய நன்மைக்காக, நண்பனாகவும் எஜமானனாகவும் குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் நெருக்கமானவனாகவும் இருக்கும் ஜிம்மி ஹோபாவை, பிராங் துரோகக் கொலை செய்ய நேரிடுகிறது.

அமெரிக்க அரசியலில் நிக்சனின் வீழ்ச்சி, கென்னடியின் எழுச்சி, நிகழ்ந்த படுகொலைகள் ஆகியன மாஃபியாக்களின் தொழிலோடும் வாழ்வோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தன்னிடம் மிகவும் பிரியமாக இருந்த ஜிம்மி ஹோபாவை, தன் தந்தை கொலை செய்ததை உணர்ந்த பிராங்கின் மகள், அதன் பிறகு அப்பாவிடமிருந்து பிரிந்துபோகிறாள்.

பிராங்க் தான் செய்த ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் அந்தத் துப்பாக்கியை ஒரு ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் எறிகிறான். அந்த ஆற்றின் அடிப்பரப்பில் ஒரு குட்டி நாட்டுக்குத் தேவையான ஆயுதங்கள் மணலில் மௌனமாகச் சிறிதும் பெரிதுமாகப் பாறைகள் போலக் கிடக்கின்றன.

வீட்டில் சராசரியான கணவனாக, குழந்தைகளின் மீது நேசம் கொண்ட தந்தையாக, ஆனால் அதிகம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத எல்லாவற்றையும் விலகலுடன் பார்க்கும் கதாபாத்திரம் ராபர்ட் டீ நீரோவுடையது. பெஸ்கியின் குணம் மிக அழுத்தமானதும் சாமர்த்தியமும் கொண்டது. யூனியன் தலைவராக வரும் அல் பாசினோ, வாய்க்கொழுப்பு, துடுக்குத்தனம், பிரியம், வெறுப்பை அப்பட்டமாகக் காட்டும் பண்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார். அல்பாசினோவும் ராபர்ட் டீ நீரோவும் இரண்டு எல்லைகளில் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்திருக்கின்றனர்.

பல காலகட்டங்களுக்கு விரியும் திரைப்படத்தில், கதைத் திருப்பங்களை, கால மாற்றங்களை மிகவும் உயிர்ப்புடன் கோவையாக ஒரு பட்டுச்சேலை விரிவதைப் போல் படத்தொகுப்பாளர் தெல்மா ஷூன்மேக்கர் தொகுத்திருக்கிறார். ‘தி ஐரிஷ்மேன்’ படத்துக்குப் பின்னணி இசை அமைத்திருக்கும் ராபி ராபர்ட்சனின் மவுத் ஆர்கன் ஆதிக்கம் செலுத்தும் இசை ஒரு வெஸ்டர்ன் திரைப்படக் காலகட்டத்தை நமது உணர்வில் எழுப்புவதாக உள்ளது.

ஹாலிவுட்டின் சிறந்த மாஸ்டர்களில் ஒருவரான மார்ட்டின் ஸ்கார்செஸி, பெரிய திரையிலிருந்து நகர்ந்து நெட்பிளிக்ஸ் போன்ற சின்னத் திரைக்காக எடுத்திருக்கும் முதல் படம் இது. ஆஸ்கர் விருதுப் போட்டிக்குள் இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் நுழைந்திருக்கிறான் ‘தி ஐரிஷ்மேன்’.


திரைப் பார்வைதுருவேறிய துப்பாக்கிகள்தி ஐரிஷ்மேன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author