

சுமன்
விலங்குகளுடன் சரளமாக உரையாடும் ‘டாக்டர் டுலிட்டில்’ திரைப்படங்களின் வரிசையில் புதிய வரவாக, ‘டுலிட்டில்’ திரைப்படம் வெளியாக உள்ளது. டாக்டர் டுலிட்டில் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்ட குழந்தைகளுக்கான கதைகள் 1920-களில் தொடங்கிப் பிரபலமடைந்தவை. பின்னர் அவை திரைப்படங்களாகவும் உருவெடுத்துள்ளன. ‘டாக்டர் டுலிட்டில்’ என்ற தலைப்பில், இரு பாகங்களாக (1998, 2001) எடி மர்பி நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களை அப்போதைய குழந்தைகளால் மறக்க முடியாது.
தற்போதைய ‘டுலிட்டில்’ கதையில், தனது பிரியத்துக்குரிய விலங்குகளுடன் வாழும் டாக்டர் டுலிட்டிலிடம் புதிய பணி ஒப்படைக்கப்படுகிறது. உடல் நலம் குன்றிய விக்டோரியா மகாராணிக்காக, நிவாரணம் தேடி மாயத்தீவு ஒன்றுக்குச் சாகசப் பயணம் மேற்கொள்கிறார் டுவிட்டில். கடல்வழிப் பயணத்தில் குறுக்கிடும் பிராணிகளும், வேறு பல இடர்களுமாக டாக்டர் டுலிட்டிலின் சாகசம் வெற்றியடைந்ததா என்பதைக் கதை சொல்கிறது. குழந்தைகள் விரும்பும் வகையிலான நகைச்சுவை, கிராஃபிக்ஸ் துணையுடன் உருவாக்கப்பட்ட சாகசக் காட்சிகள், ‘டுலிட்டில்’ திரைப்படத்தில் நிறைந்துள்ளன.
‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, ‘அயன் மேன்’ தோற்றங்களில் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட ராபர்ட் டௌனி ஜுனியர், இந்தப்படத்தில் டாக்டர் ஜான் டுலிட்டிலாகத் தோன்றுகிறார். அன்டோனியோ பான்ட்ரியாஸ், மைக்கேல் ஷீன் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். லைவ் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை ஸ்டீபன் ககன் இயக்கி உள்ளார். டாம் ஹோலண்ட், செலினா கோம்ஸ், எம்மா தாம்ஸன் உள்ளிட்டோர் விலங்கினங்களுக்குப் பின்னணிக் குரல் தந்துள்ளனர்.
‘ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்’, ‘மெலஃபிசியன்ட்’ திரைப்படங்களைத் தயாரித்தவர்களின் அடுத்த வெளியீடு என்பதால் இந்தத் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஜனவரி 17 அன்று ‘டுலிட்டில்’ திரைப்படம் வெளியாக உள்ளது.