ஹாலிவுட் ஜன்னல்: பட்டாம்பூச்சியும் பட்டாக் கத்தியும்!

ஹாலிவுட் ஜன்னல்: பட்டாம்பூச்சியும் பட்டாக் கத்தியும்!
Updated on
1 min read

முற்றும் முரணான உலகங்களில் சஞ்சரிக்கும் இருவேறு நபர்கள், இணைந்து நடைபோடும் நகைச்சுவைக் கதைகளின் வரிசையில் வருகிறது, ‘மை ஸ்பை’ திரைப்படம்.

சதா வெட்டுக்குத்து, ஆக்‌ஷன் அழித்தொழிப்பு என உளவாளியாக வலம்வருபவர் ஜேஜே. ஒன்பது வயதுக் குழந்தைக்கு உரிய துறுதுறுப்பு, எதையும் துழாவும் ஆர்வம் எனப் பட்டாம் பூச்சியாகச் சிறகடிக்கும் சிறுமி ஷோஃபி. உளவு பார்க்கச் சென்ற இடத்தில் ஷோஃபியுடன் ஓர் உடன்படிக்கையில் சிக்குகிறார் உளவாளி. அதன்படி தனது உளவு உலாவில் சிறுமியையும் சேர்த்துக்கொள்கிறார்.

தொடக்கத்தில் சுலபமாகத் தோன்றினாலும், ஒரு கட்டத்தில் எதிரிகளிடம் மோதுவதைவிடச் சிறுமியைச் சமாளிப்பதே பெரும் சவாலாகித் தடுமாறுகிறார் உளவாளி. ஒரு பக்கம் எதிரிகளிடம் அதிரடி செய்தாலும், மறுபக்கம் சிறுமியிடம் நயந்து போக வேண்டியதாகிறது.

முரட்டு மனிதனின் புரட்டு உலகமும், வளரும் சிறுமியின் மலர்ச்சியான உலகமும் ஒன்றோடொன்று ஊடறுக்கையில், இருவருக்கும் பொதுவான புதிய சவால்கள் எழுகின்றன. ஆக்‌ஷனும் நகைச்சுவையும் கலந்த காட்சிகளில் வழியே இருவருக்குமான சவால்களை எதிர்கொள்வதே ‘மை ஸ்பை’ திரைப்படம்.

முன்னாள் மல்யுத்த வீரரான டேவ் பட்டிஸ்டா, கன்னக் கதுப்பில் கொடூர வடு உடன் உளவாளியாக வருகிறார். இயக்குநர் பீட்டர் சேகலுடன் படத்தயாரிப்பிலும் இணைந்துள்ளார் டேவ். சிறுமி ஷோஃபியாக க்ளோ கோல்மன் நடித்துள்ளார்.‘மை ஸ்பை’ திரைப்படம் அமெரிக்கத் திரையரங்குகளில் ஜனவரி 10 அன்று வெளியாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in