

சு.சுபாஷ்
கணவனைத் தனது நிழலாக எண்ணுவது இல்லற வாழ்வில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் இந்தியப் பெண்களின் அடித்தளம். ஆனால், அந்த நிழல், திசைமாறி விழுந்தால்! நம்பிக்கை துரோகம் செய்யும் கணவனை எதிர்த்து நிற்பதா, மன்னித்து மறப்பதா அல்லது அறுத்துவிடுவதா என்ற ஒரு மனைவியின் ஊசலாட்டத்தை எந்தவொரு பாவனையுமின்றி முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறது, ‘அவுட் ஆஃப் லவ்’ வலைத்தொடர். பிபிசி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இத்தொடரை நவம்பர் 22 முதல் தனது ‘ஒரிஜினல் சீரீஸ்’வரிசையில் சேர்த்துள்ளது ஹாட்ஸ்டார்.
பெண் மருத்துவரான மீரா தன் கணவன், மகன், மாமியார் என அன்பான குடும்பத்துடன் குன்னூரில் மகிழ்ச்சியாக வாழ்கிறார். ஊரைப் போலவே அவரது வாழ்விலும் இனிமையும் குளுமையும் சேர்ந்திருக்கின்றன. அவை அப்படியே தொடர வேண்டும் எனவும் ஆசைப்படுகிறாள். ஆனால், விதி வலிது. 14 வருட தாம்பத்திய வாழ்க்கையில் கணவனை முதல் முறையாக அவள் சந்தேகிக்க நேரிடுகிறது.
கணவனின் ஆடையில் இன்னொரு பெண்ணின் கேச இழையைக் கண்டெடுக்கும் மீராவுக்கு, சாமானிய மனைவியாகச் சந்தேக நெருப்பு பற்றிக்கொள்கிறது. கூடவே தனது சந்தேகம் குறித்துக் குற்ற உணர்வும் கொள்கிறாள். அண்டை வீடு, கணவன் அலுவலகம் என சகலப் பெண்கள் மத்தியிலும் அந்த ஒற்றை மயிரிழைக்கு உரியவளைத் தேடுகிறாள். கணவனைப் பின்தொடர்ந்து தவிப்புடன் ஒற்றறியவும் செய்கிறாள். ஒரு கட்டத்தில் தனது சந்தேக உறுத்தலைக் கணவனிடமே வெளிப்படையாக விசாரிக்கவும் செய்கிறாள். அவன் மறுத்துவிட, மனத்தின் சஞ்சலத்தைத் துடைத்துப் போட்டுவிட்டுக் கணவரின் 40-ம் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்குத் தயாராகிறாள்.
பிறந்தநாள் பரிசாக அவளது சந்தேகம் உரிய ஆதாரத்துடன் நிரூபணம் ஆகிறது. இத்தனை காலமும் அவள் கட்டிக்காத்த இல்லறக் கோட்டையில் படிந்திருக்கும் ஓட்டைகள் புலப்படத் தொடங்குகின்றன. திருமணத்துக்கு வெளியே தாவும் கணவனின் திருட்டுத்தனத்தை, தனது உறவுகள், நட்புகளுக்கு அப்பால் கடைசியாகவே தான் அறிய நேர்வது அவளுக்கு அடுத்த அதிர்ச்சியாகிறது. அவனிடமிருந்து விலகுவதும் அத்தனை எளிதல்ல என்பதை உணர்கிறாள். தனிப்பட்ட பொருளாதாரம், பணியிடம், சுய மரியாதை, கௌரவம் என மீரா சம்பாதித்த அனைத்துமே தற்போது ஊசலாடுகின்றன. வாழ்வின் விளிம்புக்குச் சென்று மகனுக்காக மீள்கிறாள்.
அடியற்ற மரமாய் வீழ்ந்தவள் மீண்டும் எப்படித் துளிர்த்து எழுகிறாள், தனது இருப்பைக் காத்துக்கொண்டு, வாழத் தலைப்படுகிறாள் என்பதைப் பாவனையற்ற காட்சிகளில் சொல்கிறது ‘அவுட் ஆஃப் லவ்’ வலைத்தொடர். ‘டாக்டர் ஃபோஸ்டர்’ என்ற விருது பெற்ற பிபிசி தொடரை இந்தியில் பதிப்பித்திருக்கிறார்கள். திருமண வாழ்வின் இருட்டுப் பக்கங்களைச் சொல்லும் கதை, திரில்லர் பாணியில் செல்வது பொழுதுபோக்கை முழுமையாக்குகிறது.
டாக்டர் மீராவாக வரும் ரசிகா துகல், தொடரின் பெருவாரிக் காட்சிகளில் தனது துடிப்பான நடிப்பால் ஆக்கிரமிக்கிறார். கணவன், மகன், அண்டை வீட்டார், பணிபுரியும் மருத்துவமனையின் சூழல், பரிச்சயமான நோயாளிகள், வாழும் ஊர் என அனைத்தையும் நேசிக்கும் இயல்பான பெண்ணாக வளைய வரும் அவரது கதாபாத்திரம், நிறைவும் அழகும் ததும்பி நிற்கிறது.
வெகு நிதானமாகத் தனக்குக் கசப்பைப் பருகத் தந்தவனை நிர்க்கதியாய் எதிர்கொள்வது, துரோகத்தின் ஆழத்தை அறிய அதன் விபரீதப் பாதைக்கே சென்று மீள்வது, அப்பா மீது பாசம் பொழியும் மகனை நினைத்து உருகுவது, ஒரு துரோகத்தின் நிழலில் தன்னைச் சூழ்ந்த அனைவரும் தனக்கு எதிராக மாறுவது, தேற்றுவதற்கு ஆளின்றி நாற்காலியைக் கட்டிக்கொண்டு விசும்புவது எனப் பல பரிமாணங்களில் ரசிகா பிரமிக்க வைக்கிறார்.
ரசிகாவின் கணவராக பூரப் கோலி நடித்திருக்கிறார். மேலும், சோனி ரஸ்தன், ஹார்ஸ் சாயா உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். டிக்மான்ஷு துலியா - அஜாஸ் கான் இணைந்து இயக்கி உள்ளனர். பல சீஸன்களுக்கு நீண்ட மூலத்தொடரை ஐந்து அத்தியாயங்களில் சுருக்கினாலும், பல சட்டகங்களில் அப்படியே ஒப்பேற்றி இருக்கிறார்கள். மெல்ல நகரும் காட்சிகள், அவற்றுக்கு இடையே அவசரகதியாய் உதிரும் ஓவர்லாப் வசனங்கள் என உறுத்தல்கள் இருந்தாலும், பெண்ணியம் மிளிரும் ‘அவுட் ஆஃப் லவ்’ வலைத்தொடர் ரசிக்கவே வைக்கிறது.