

பால்வெளியைக் கதைக் களனாக்கிய முன்னோடி அறிவியல் புனைவு திரைப்பட வரிசையில் ‘ஸ்டார் வார்’ஸுக்கு தனிப்பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படத்தின் முதன்மை முத்தொகுப்பு வரிசையின் நிறைவாக வெளியாகிறது ‘ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’ (Star Wars: The Rise Of Skywalker) திரைப்படம். இத்துடன் ஒன்பது திரைப்படங் களைக் கொண்ட ஸ்கைவாக்கர் சகாப்தம் நிறைவடைகிறது.
‘தி லாஸ்ட் ஜேடி’ படத்தின் கதை நிறைவடைந்ததி லிருந்து ஒரு வருடம் கழித்து புதிய படத்தின் கதை தொடங்குகிறது. உதிரிகளாகச் சிதறிக்கிடந்த இருள் சக்தியினரின் ‘ஃபர்ஸ்ட் ஆர்டர்’ படையினர் மீண்டும் முழு பலத்துடன் ஒன்று சேர்கின்றனர். புதிய மோதலில் பன்னெடுங்காலமாய் தொடரும் ‘ஜேடி’, ‘சித்’ இடையிலான நன்மைக்கும் தீமைக்குமான போர், அதன் இறுதிக் கட்டத்தை எட்டுவதே ‘தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’ படத்தின் கதை.
டெய்சி ரிட்லி, மார்க் ஹேமில், ஆஸ்கர் ஐசக் உட்பட ஸ்டார் வார்ஸின் மாபெரும் நடிகர் பட்டாளம் தோன்றும் இப்படம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில், டிசம்பர் 20 அன்று வெளியாகிறது.
- சுமன்