Published : 29 Nov 2019 01:35 PM
Last Updated : 29 Nov 2019 01:35 PM

வாணி ஜெயராம் 75-வது பிறந்த தினம்: ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு வாணி

புகழ்பெற்ற பழைய திரைப்படங்களை மீண்டும் வெளியிடும்போது, அந்தப் படத்தில் ‘ஹிட்டடித்த’ பாடல்களின் பட்டியலை அச்சிட்டு.. ‘இனிய பாடல்கள் நிறைந்த படம்’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.

ஆச்சரியகரமாக.. 1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது.

இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.

1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்னாடக இசையைப் பயின்றுவந்த சிறுமி வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தானும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.

பாலிவுட்டில் அறிமுகம்

சென்னை வந்து ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. திருமணத்துக்குப் பிறகு பணி மாறுதல் வாங்கிக்கொண்டு மும்பையில் வசித்தார். வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் கணவராக ஜெயராம் அமைந்ததால் உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டார். இசை அவருக்கு வானளாவிய தன்னம்பிக்கையைத் தந்தது. வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமூச்சாக இசையில் இறங்கினார்.

திரையிசையில் இயங்கியவர்கள் அவரது குரலையும் பாடும் திறனையும் கேட்டு ‘இன்று போய் நாளை வா’ என்று சொல்ல முடியாமல் தவித்தார்கள். வசந்த் தேசாய் முந்திக்கொண்டார்.

1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும் அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பாதூரியின் (பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஆனார்) குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்ய ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள்.

அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம்பெறச் செய்தது. அதன்பின் ஒரு தமிழ்க் குரல் இந்தியில் கொண்டாடப்படும்போது தமிழில் தவறவிடுவார்களா? அதுவும் திரைப் பாடல்கள் அனைத்தும் கவிதைகளுக்கு இணையான இடத்தில் உயர்ந்து நின்ற இசைப் பொற்காலத்தில், அவை வாணி ஜெயராமின் குரலில், இனிமை கூடி ஒலிக்கும்போது கொண்டாடாமல் இருப்பார்களா?

இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் எழுதி முடிக்க முடியாத சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்திருக்கிறார். மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

தெய்விகத் தன்மையும் சங்கதிகளும்

‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க’, ‘முத்தமிழில் பாடவந்தேன்’ என அவர் பாடிய எந்தப் பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் நயமும் இனிமையும் கைகோத்துக்கொண்டிருக்கும். இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக ஒரு தெய்விகத் தன்மை குரலில் இழைந்தோடும். வாணி பாடும் சிறப்பம்சமே பாடல்களின் இடையில் அவர் வெளிப்படுத்தும் சங்கதிகள் தான். "இந்த இடத்தில் இந்த சங்கதி போடவேண்டும்" என்று தீர்மானித்துக்கொண்டு அவர் பாடமாட்டார். அவர் பாடிக்கொண்டே போவார். சங்கதிகள் தாமாகவே வந்து விழுந்துகொண்டே இருக்கும்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர்.

‘புனித அந்தோனியார்’ படத்தில் ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’, பி. சுசீலாவுடன் இணைந்து ‘பாத பூஜை’ படத்தில் ‘கண்ணாடி அம்மா உன் இதயம்’, ‘அந்தமான் காதலி’யில் ‘நினைவாலே சிலை செய்து’, ‘சினிமாப் பைத்தியம்’ படத்தில் ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘தங்கப்பதக்க’த்தில் ‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, ‘பாலாபிஷேக’த்தில் ‘ஆலமரத்துக் கிளி’ எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

உணர்வு நிலைகளின் ஊர்வலம்

குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் இடம்பெற்ற ‘நானே நானா’, ‘சிறை’ படத்தில் ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதேபோல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் ஆற்றாமையைக்

குரலில் சித்தரிக்கும் ‘சவால்’ படத்தின் ‘நாடினேன்.. நம்பினேன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் ‘கட்டிக் கரும்பே கண்ணா’, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் ‘ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்’, ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’ ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.

தாய்மை அடைந்த பெண்ணின் பல்வேறு உணர்வு நிலைகளை வெளிப்படுத்தியதில் ‘திக்கற்ற பார்வதி’யின் ‘ஆகாயம் மழை பொழிஞ்சா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘மலர்போல் சிரிப்பது பதினாறு’ ‘சாவித்திரி’ படத்தில் ‘வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்’ ஆகிய பாடல்கள் சிறந்த உதாரணங்கள்.

மாற்று இல்லாத பாடகர்!

கடலில் அசைந்தாடும் படகைப் போல உள்ளத்தை அசைக்கும் வாணி ஜெயராமின் பல பாடல்கள் ஒன்று ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொங்கும் கடலோசை’. ‘அவன்தான் மனிதன்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ சரணங்களில் ஏற்ற இறக்கங்களுடன் ஜாலம் புரியும் பாடல். காதலர்களின் தேசிய கீதமாக நீண்ட காலம் ஒலித்த ‘ஒரே நாள் உனை நான்’ என்ற ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படப் பாடலில் காதல் வழிந்தோடுவதைக் கேட்கமுடியும். இவருக்கு மாற்று யாருமில்லை என்று எண்ணத்தக்க வகையில் எல்லாப் பாடல்களிலும் அவர் வெளிப்படுத்தும் சஞ்சாரங்கள் பிரமிக்க வைப்பவை.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். "எல்லா பாஷைகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே" - என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர். 30.11.2019 அன்று தனது 75-ம் வயதில் அடியெடுத்து வைக்கும் வாணி ஜெயராம், பெற்றோர் சூட்டிய பெயருக்கு அர்த்தம் சேர்த்துவிட்ட அபூர்வத் திறமையாளர்.

எப்படி வந்தது பெயர்?

எழுத்தாளர் சிவசங்கரியும் வாணி ஜெயராமும் சகோதரிகளைப்போல தோற்றமளிப்பார்கள். சிவசங்கரியின் எழுத்துக்கு வாணி ஜெயராம் ரசிகையாகவும் வாணி ஜெயராமின் குரலுக்கு சிவசங்கரி ரசிகையாகவும் இருக்க, பொது விழா ஒன்றில் சந்தித்துக்கொண்டபோது அறிமுகமாகிக்கொண்ட இருவரும் இன்றுவரை இணை பிரியா தோழிகள். வாணி ஜெயராம் பற்றி நெகிழ்ந்து எழுதியிருக்கும் சிவசங்கரி, கலைவாணி என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது என்பதைப் பகிர்ந்திருக்கிறார்.

"வாணி அவர் வீட்டில், நிசப்தமான சூழ்நிலையில் ஆர்மோனியம் பின்னணியில் ஒலிக்க பஜன்களும், தும்ரியும் பாடுவதைக் கேட்பது ஓர் அலாதி அனுபவம்.

வாணியிடம் எனக்கு ரொம்பப் பிடித்த சமாசாரம் அவருடைய எளிமையான குணம். ஒரு ஆடம்பரம், ஒரு திமிர் பேச்சு, ஒரு பெருமைப் பீத்தல்? ம்ஹும்..! ஒன்றும் கிடையாது. யாராவது பாடச் சொன்னால் கொஞ்சம்கூட தயங்காமல் உடனேயே வாணி பாடிக் காட்டி நான் பலமுறை பார்த்துவிட்டேன்.

ஒருநாள் பேச்சுவாக்கில் 'கலைவாணி என்று உனக்கு எப்படி இத்தனை பொருத்தமாய் பேர் வைத்தார்கள்?' என்றேன். வாணி ஒரு நிமிஷம் பேசாமல் இருந்தார். அப்புறம் சொன்னார்,

"இது வரைக்கும் நான் யார் கிட்டவும் இதைச் சொன்னதில்லை; ஏன்னா விளம்பரத்துக்காக இல்லாததையும் பொல்லாததையும் சொல்ற மாதிரி சிலருக்குத் தோணலாம். ஆனா நா சொல்லப் போறது ஒரு சத்தியமான சம்பவம். நா எங்கப்பா அம்மாவுக்கு எட்டாவது பெண். நான் பிறந்ததுலே அவர்களுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். அதனால் பதினைஞ்சு நாள் வரைக்கும் புண்ணியாகவசனம் செய்யாமல், பேர்கூட வைக்காம இருந்தாளாம்.

அப்போ வீட்டுக்கு வந்த ஜோஸியர் ஒருத்தர் என் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிச்சுட்டு ‘பூர்வ ஜென்மத்திலே தேனும் பாலுமா பகவானுக்கு அபிஷேகம் பண்ண பலனோட உங்கப் பெண் பிறந்திருக்கா, இவ சரஸ்வதி அம்சம், இவளோட பெருமை உங்களுக்குப் பிற்காலத்துலே புரியும்’னு சொன்னாராம். அதுக்கப்புறம் தான் அம்மா எனக்கு ‘கலைவாணி’னு பேர் வைச்சா’என்றாள். இன்றைக்கும் வாணியின் ஜாதகத்தில் அன்று ஜோஸியர் எழுதின குறிப்புகள் அப்படியே உள்ளன. அதை என் இரண்டு கண்களால் பார்த்தவள் நான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

- பி.ஜி.எஸ். மணியன்,
தொடர்புக்கு: pgs.melody@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x