

‘மகாமுனி’ படத்துக்குப் பின் ஆர்யாவின் நடிப்பு தாகத்துக்குத் தீனி கொடுக்கும் வகையில் ‘டெடி’ என்ற தலைப்பில் ஆக் ஷன் த்ரில்லர் கதையை இயக்கி வருகிறார் ‘டிக் டிக் டிக்’ புகழ் சக்தி சவுந்தரராஜன். இதில் ஆர்யாவின் மனைவியான சாயிஷாவே முதன்மைக் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ ‘தடம்’ ஆகிய படங்களின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு இதில் வில்லன் வேடம். தற்போது இரண்டாவது நாயகியாக இப்படத்தில் இணைந்திருக்கிறார் ‘90 எம்.எல்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த மாசூம் சங்கர்.
‘ஒத்த செருப்பு’ சத்யா!
‘எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் அறிமுகமாகி ‘மினி இளையராஜா’ என ரசிகர்களின் பாராட்டை அள்ளியவர் இசையமைப்பாளர் சி.சத்யா. அறிமுகப் படத்துக்குப்பின் 'நெடுஞ்சாலை', 'தீயா வேலை செய்யணும் குமாரு' படங்களின் மூலம் தனது இருப்பை உறுதிசெய்துகொண்டார். தற்போது இவருக்கு பிரேக் கொடுத்திருக்கிறது பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’. ‘உலகத் தரத்திலான படம்’ என விமர்சகர்களால் பாராட்டப்பட்டிருக்கும் ‘ஒத்த செருப்’பின் இசையையும் ஒலி வடிவமைப்பையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்கள்.
“இந்தப் படத்துக்கு இசையமைக்கும் முன் இசையும் லைவ் ஆர்கெஸ்ட்ராவும் எப்படி அமையவேண்டும் என பார்த்திபன் சாருடன் 25 நாட்கள் விவாதித்து இசையை வடிவமைத்தேன். லைவ் வாத்திய ஒலிப்பதிவுக்கு மாசிடோனியா ஆர்கெஸ்ட்ராவைப் பயன்படுத்தினோம்.” எனும் சத்யாவை, தற்போது ‘ஒத்த செருப்பு’ சத்யா என நெட்டிசன்கள் குறிப்பிடுவதாக நெகிழ்கிறார். அவரது இசையமைப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள்', ‘ஜாஸ்மின்',‘அலேக்கா', ‘ராங்கி’ என வரிசையாகப் படங்கள் வெளிவர இருக்கின்றன.
பாபி சிம்ஹாவின் நாயகி!
‘மிஷன் மங்கள்’ இந்திப் படத்தில் அன்யா சிண்டே என்ற கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர் காஷ்மீரா பர்தேசி. ‘நர்த்தனசாலா’ என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான காஷ்மீரா, விளம்பரங்களின் வழியே சினிமாவுக்குள் நுழைந்தவர். புனேவில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழிலும் அறிமுகமாகிறார். எஸ்.ஆர்.டி. எண்டெர்டெயின்மெண்ட், முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்க, ரமணன் புருஷோத்தமா இயக்கும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. ராஜேஷ் முருகேசன் என்ற அறிமுக இசையமைப்பாளரின் இசையில் உருவாகவிருக்கும் காதல் த்ரில்லர் படம் இது.
விரைவில் இசை!
‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் இணைந்து நடித்து வரும் படம் ‘அக்னிச் சிறகுகள்’. “ரஷ்யாவின் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், கஜகஸ்தானின் அல்மாட்டி நகரங்களில் இப்படித்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். சேஸிங் காட்சிகள் மிகவும் பேசப்படும்” என்கிறார் இயக்குநர். தாம் நடிக்கும் படங்களுக்கு இசையமைப்பதை வழக்கமாக வைத்திருந்த விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரனை இசையமைப்பாளராகப் பணிபுரிய ஒப்புக்கொண்டிருக்கிறார். “விரைவில் இசை, ட்ரைலரை வெளியிட இருக்கிறோம்” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா.
அமலா பாலுக்கு இடமில்லை
மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்றிருந்த நட்சத்திரங்களில் அமலா பாலும் ஒருவர். ஆனால் படத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இயக்குநர் வட்டாரத்தில் விசாரித்தபோது ‘ பிறந்தநாளைக் கொண்டாட வெளிநாடு சென்ற அமலா பால், பல நாடுகளுக்குத் தனது சுற்றுலாப் பயணத்தை நீட்டித்தபடியே இருந்தார். அவர் ஏற்க இருக்கும் கதாபாத்திரத்துக்கு வாள், குதிரையேற்றப் பயிற்சிகள் மிக அவசியம். அதற்குக் குறைந்தது 45 நாட்களாவது தேவை. படத்தின் பணிகள் முழு வீச்சில் நடந்துவருவதால் நாங்கள் காத்திருக்க முடியாது’ என்று காதைக் கடித்தார்கள். ‘ஆடை’யில் கிடைத்த நல்ல பெயருக்கு இப்படியொரு இடி.