

திரை பாரதி
பாக்யராஜின் கதை விவாதக் குழுவில் முக்கிய இடம்பெற்றிருந்தவர், பாரதிராஜாவின் இணை இயக்குநர், ஏ.ஆர்.ரஹ்மானின் நண்பர், டிஜிட்டல் திரைப்படப் பள்ளி ஒன்றின் முதல்வர், ‘திரைப்படத் தமிழ்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பல திரைப்படக் கல்லூரிகளில் கௌரவப் பேராசிரியர் என வலுவான அடையாளங்கள் கொண்டவர் இயக்குநர் வி.ஜெயப்பிரகாஷ். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின், ‘நாடோடிகள்’ படப் புகழ் தரணி நாயகனாக நடித்துவரும் ‘குச்சி ஐஸ்’ படத்தை இயக்கி வருகிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…
உங்களைப் பற்றி கொஞ்சம்..
முதுகலை தமிழ் இலக்கியம் முடித்துவிட்டு, சினிமா கனவுடன் சென்னை வந்து பத்திரிகையாளர் ஆனேன். எதைச் செய்தாலும் அதை கிரியேட்டிவாகச் செய்யவேண்டும் என்று நினைப்பேன். அதைக் கண்டுகொண்ட பாக்யராஜ் சார், அவரது ‘பாக்யா’ பத்திரிகையில் என்னை பணியில் சேரும்படி அழைத்தார்.
பத்திரிகை பணி என்பதுடன் தேங்கிவிடாமல், அவரது கதை விவாதம், திரைப்பட உருவாக்கம், அரசியல் பணிகள் என எல்லாவற்றிலுமே ஈடுபட்டிருந்தேன். எனக்கு நடிப்பிலும் ஆர்வம் உண்டு என்பதைத் தெரிந்துகொண்ட பாக்யராஜ் சார், ‘ஆராரோ ஆரிரரோ’ படத்தில் என்னை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினார். அவருக்கு அடுத்த இடத்தை எனக்குக் கொடுத்திருந்தார். பிறகு பாக்யராஜ் சாரின் குருவான பாரதிராஜா சாரிடம் ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன்.
‘கருத்தம்மா’, ‘கிழக்குச் சீமையிலே’ படங்களில் இணை இயக்குநராக உயர்ந்தேன். அவரிடம் பணிபுரிந்த ஐந்து ஆண்டுகளும் திரைத்துறை குறித்த பரந்துபட்ட அனுபவம் எனக்குக் கிடைத்தது. தேசிய விருது பெற்றக் கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியை ‘நாடோடித் தென்றல்’ படத்துக்கு அமர்த்தும்படி அவரிடம் அழைத்துச் சென்றேன்.
எழுத்தாளர் சுஜாதாவை பாரதிராஜாவுடன் இணைத்தேன். அதேபோல, ‘திலீப்’ என்று அழைத்துப் பழகும் அளவுக்கு எனக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தொடக்கம் முதலே நட்பும் இருந்தது. அதனால் ‘கருத்தம்மா’, ‘கிழக்குச் சீமையிலே’ படங்களுக்கு பணிபுரிய ரஹ்மானை பாரதிராஜாவுடன் இணைத்ததும் நான்தான். பின்னர் பாரதிராஜாவின் ஆசீர்வாதத்துடன் வெளியே வந்ததும் ‘சாதி சனம்’ படத்தை எடுத்தேன்.
1997-ல் வெளியான உங்கள் முதல் படமான ‘சாதி சனம்’ மாநில அரசின் வரி விலக்கையும், சிறந்த படத்துக்கான விருதையும் பெற்றது அல்லவா?
ஆமாம்! ‘மண் வாசனை’ படத்துக்குப்பின் வரி விலக்கு பெற்ற படம். திரையரங்கில் படம் வெளியானபோது, டிக்கெட் கவுண்டரில் 50 ரூபாய் டிக்கெட் விலை 13 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ‘டிக்கெட் விலை இவ்வளவு குறைவா? அப்படியென்றால் இது டாக்குமெண்டரி படமோ?’ என்று ‘மவுத் டாக்’ வந்து படத்தின் வசூலை பாதித்தது. இருந்தாலும் வரிவிலக்கு அந்தப் படத்தைக் காப்பாற்றியது.
50 நாட்கள் ஓடி வெற்றிபெற்றது. அந்தப் படத்தில் ‘அறிவு வறுமை’ என்பதைக் கதைக் கருவாகப் பயன்படுத்தியிருந்தேன். ‘இந்தியாவில் படித்துவிட்டு அமெரிக்காவில் போய் அறிவை விற்கும்’ தலைமுறையை விமர்சித்து எடுத்தப் படம் அது. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இன்றும் தேவைப்படுகிற படமும் கூட.
அடுத்த படத்துக்கு ஏன் இத்தனை இடைவெளி எடுத்தீர்கள்?
‘சாதி சனம்’ படத்துக்குப் பின், தெலுங்கு சினிமாவின் பாரம்பரியம் மிக்கப் படத் தயாரிப்பு நிறுவனமான உஷா கிரண் மூவீஸின் அழைப்பை ஏற்று அதன் கதைப் பிரிவில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அங்கிருந்து கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை பங்களிப்பு செய்தேன். எல்லா படங்களும் வெற்றி.
இப்படி, நாடு முழுவதும் சுற்றியதில் இந்தியா வெகுஜன சினிமாவின் குறுக்குவெட்டை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. இந்தக் கால இடைவெளியில் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியிருந்தது. இப்போது இன்னும் அதிக சுதந்திரம் கிடைத்திருக்கும் நிலையில் ‘குச்சி ஐஸ்’ மூலம் பட இயக்கத்துக்குத் திரும்பிவிட்டேன்.
‘குச்சி ஐஸ்’ என்ற படமும் சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டதுதானா?
நிச்சயமாக. எனது அப்பா ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. அதனால் சமூகத்தைப் பற்றித்தான் முதலில் பேசுவோம், பிறகுதான் குடும்பம். சினிமாவில் சமூகத்துக்கு என்ன சொல்லப்போகிறோம் என்பதில்தான் எனது முதல் கவனம். அதேநேரம் அதை, பிரசங்கிக்காமல் முழுமையான பொழுதுபோக்குடன் தரவேண்டும் என்பதில் உறுதியான வியாபாரக் கொள்கை கொண்டவன். அந்த வகையில் எடுத்துக்கொண்டிருப்பது சீரியஸ் பிரச்சினை என்றாலும் அதை, கதாபாத்திரங்களின் வாழ்க்கை வழியாக மொத்த சமூகத்துக்கும் உறைக்கிறமாதிரி சொல்லவேண்டும் என்பதுதான் எனது பாணி.
உலக மயமாக்கல் காரணமாக, ஒரே ஒரு பொருளை மட்டும் விற்று வாழ்க்கையை நடத்தும் சாமானிய சிறு, குறு வியாபாரிகள் வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்துபோய்விட்டது என்று தியரியாகச் சொல்கிறோம். அதை மாரியப்பன் என்ற குச்சி ஐஸ் வியாபாரியின் வாழ்க்கை வழியாக இதில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் இது எரியும் ‘குச்சி ஐஸ்!’ இதற்காக ஓராண்டு ஆய்வு செய்தே திரைக்கதை எழுதினேன். தற்போது இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம்.
இதைத் தமிழ் ரசிகர்களுக்குக் கொடுக்கும் அதேநேரம் உலக அரங்கிற்கும் அனுப்பி, தமிழ் சினிமா உலகத் தரமானதுதான் என்பதைக் காட்டிவரும் படங்களின் வரிசையில் ‘குச்சி ஐஸ்’ படத்தை இடம்பெறச் செய்வதும் என் நோக்கம். ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் பயின்ற தோஷ் நந்தா என்ற ஒரிய இளைஞரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன்.