பாம்பே வெல்வட் 11: போலிக் கனவுகளின் ‘பொற்காலம்’

பாம்பே வெல்வட் 11: போலிக் கனவுகளின் ‘பொற்காலம்’
Updated on
3 min read

எஸ்.எஸ்.லெனின்

அறுபதுகளின் மத்தியில் இந்தி சினிமாவில் கோலோச்சினார் ராஜேஷ் கன்னா. ரத்தம் தொட்டுக் கடிதம் எழுதியும், அவரது ஒளிப்படத்தை மணந்துகொண்டும் தங்களது கண்மூடித்தனமான ரசனையைக் காட்டியப் பெண் ரசிகைகளின் கூட்டம் அவருக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் ரசிகையரிடமிருந்து தப்பிக்க, போலீஸ் உதவியை நாடிய முதல் நடிகரானார் ராஜேஷ் கன்னா. அறுபதுகளின் சினிமா, தடாலடியாய் ஜிகினாக்களை சிங்காரித்துக் கொண்டதன் வழியே, மிகை உணர்ச்சிகளும், மீறல்களும் இயல்பின்மையும் அறுபதுகளின் இந்திய சினிமாவில் இருந்தே வேகமெடுத்தன.

போலிக் கனவுகளின் உற்பத்தி

தேசத்து மக்கள் தங்களது பரிபூரண விடுதலையை அனுபவிக்கத் தொடங்கிய காலம் அது. நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகள், பொருளாதார மேம்பாடு எனப் பொன்னுலகை நோக்கிய கனவுகளுடன் இந்தியர்கள் நடைபோடத் தொடங்கியிருந்தார்கள். நாட்டில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடுமென்ற நப்பாசை எல்லோருக்கும் இருந்தது.

திரைத்துறையிலும் அரசு தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விட்டது. தத்தளித்த சினிமா உலகம் பாய்ச்சல் கண்டதும், சுபிட்ச உலகை நோக்கி நடைபோடும் மக்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல தோதான, போலிக் கனவுகளை சிருஷ்டித்துக் காட்டும் திரைப்படங்கள் அறுபதுகளில் உருவாகின.

திரைக்கதைகளில் இளமை ஊஞ்சலாடியது. என்றும் பதினாறான திரைப்படங்கள் அறுபதுகளின் அடையாளமாக வெளிவந்தன. கதாநாயகிகள் இழுத்துமூடிய ஆடைகளுக்கு விடை கொடுத்தனர். உடலின் வடிவத்தை அம்பலப்படுத்தும் உடைகளும், மூத்தத் தலைமுறையினரை பதறவைத்த நீச்சலுடையுமாக கதாநாயகிகள் துணிச்சலாக வலம் வந்தனர்.

ரசிகர்களைச் செலுத்திய போக்கு

செழிப்பான நாகரிகத்தின் மீது, நிஜவாழ்வின் மோகம் அப்பட்டமாய் திரையிலும் வெளிப்பட்டது. நாயகியரின் ரவிக்கைகள் கைகளை இழந்தன. நாயகர்கள் சட்டைப் பொத்தான்களைத் தெறிக்க விட்டனர். காதல் காட்சிகள் இளம் வயதினரின் இதயத்துடிப்பை எகிறவைத்தன.

வித்தியாசமாக மை எழுதிய கண்ணழகு, உயர்த்தி போடப்பட்ட கொண்டைச் சிகையலங்காரம், கைக்கெட்டாது காற்றில் படபடக்கும் முந்தானை என நாயகியரின் புதிய தோற்றம் பார்த்து நாட்டுப் பெண்கள் தங்கள் வடிவைத் திருத்தத் தொடங்கினர். திரைப்படங்கள் அறிமுகப்படுத்திய குட்டையான ஆடைகள், வண்ணமயமான சேலைகள், படங்களின் பெயரால் சந்தைக்கு வந்த வர்த்தக வியூகம் அறிமுகமானது.

பெண்கள் பெரிதும் விரும்புவதாகக் கருதப்படும் கவர்ச்சி நிறங்களில் ஆண்கள் உடுத்த, ஆண்களின் பட்டன் வைத்த இறுக்கச் சட்டைகளைப் பெண்கள் அணிந்து வந்தனர். ‘சினிமாவில் நடிப்பதா, அச்சச்சோ.. குடும்பக் கவுரவம் என்னாவது..’ எனக் கன்னத்தில் போட்டுக்கொண்ட இந்தியப் பெற்றோரின் மனநிலை மாறியது. ஆசீர்வாதத்துடன் தங்கள் பெண் பிள்ளைகளை திரையுலகுக்கு அனுப்பி வைத்தார்கள்.

வெளிநாட்டு மோகம்

இந்தக் காலத்தில்தான் இந்திய சினிமா ஸ்டுடியோவிலிருந்து வெளியேறிப் பெருமூச்சு விட்டது. பனிமலைகள், கடற்கரைகள், அயல் தேசத்து டூயட்கள் ஆகியவை திரைப்படங்களை ஆக்கிரமித்தன. இசையில் ஒரு குதூகலம் ஒட்டிக்கொண்டது. இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் ஆடை வடிவமைப்பாளர்களும் மேற்குலகத் திரைப்படங்கள் மீது தணியாத மோகம்கொண்டிருந்தனர்.

வரிக்கு வரி வசனங்களில் ஆங்கிலத்தை அதிகம் திணித்தார்கள். மேற்கத்திய இசைக்குக் கால்களைப் பரப்பி ஆடத் தொடங்கினர். காதலில் சிருங்காரத்தின் காரம் அதிகரித்தது. மக்களின் வாங்கும் திறன் அதிகரித்ததும் நுகர்பொருள் சந்தை புதிய உச்சத்தைத் தொட, பொருளாதார மாற்றங்களுக்கு அடிகோலிய சக்திகளில் சினிமா புகட்டிய படாடோபமும் ஒன்றானது.

வண்ணம் சேர்த்த படங்கள்

ஷம்மி கபூர், சாய்ரா பானு நடித்த ‘ஜங்க்ளி’(1961), ராஜ்குமார், சசி கபூர், சாதனா, ஷர்மிளா தாகூர் இணைந்த ‘வக்த்’(1965), ஷம்மி கபூர், ஆஷா பரேக் நடித்த ‘தீஸ்ரி மன்சில்’(1966) ஆகியவை புதிய தலைமுறைக்கான நட்சத்திரங்களையும் ரசிக அலையையும் உருவாக்கின.

செழிப்பான பின்னணியிலான நாயகனும் நாயகியும், நவநாகரிக ஆடை அணிகலன்களுடன் வெளிநாட்டு கார்களில் பறந்து, இளம் ரசிகர்களை ஏங்க வைத்தனர். வண்ணத் திரைப்படங்களின் அழுக்குகள், ஈஸ்ட்மென் கலர் எனும் தொழில்நுட்பத்தால் சலவை செய்யப்பட்டன.

வெளிப்புறப் படப்பிடிப்புகள் தரும் வியப்பைச் சரியாகக் கையாண்டதில் ‘புரஃபசர்’(1962), ‘காஷ்மீர் கி காளி’(1964) போன்ற படங்கள் ‘ஈஸ்ட்மென்’ அறிவிப்புடன் ரசிகர்களைப் பேச வைத்தன. ‘ஜங்க்ளி’ திரைப்படம், காஷ்மீர் பனி மலையில் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற போக்கைத் தொடங்கி வைக்க, ‘லவ் இன் டோக்யோ’(1966), ‘ஆன் ஈவ்னிங் இன் பாரிஸ்’(1967) ஆகிய படங்கள் வெளிநாட்டுத் தலங்களுக்குத் தாவும் போக்கினைத் தொடங்கி வைத்தன.

வழக்கமான காதல் தோய்ந்த படங்களுடன், திரில்லர் படங்களும் வெற்றி பெற்றன. ‘பீஸ் சால் பாத்’ (1962) படம் திரில்லர் அலையைத் தொடங்கி வைக்க, இயக்குநர் ராஜ் கோஸ்லாவின் ‘மேரா சாயா’(1966), ‘அனிதா’(1967), இயக்குநர் விஜய் ஆனந்தின் ‘தீஸ்ரி மன்சில்’, ‘ஜூவல் தீஃப்’(1967) ஆகிய படங்கள் அந்த அலையைப் பரவலாக்கின. ஜேம்ஸ்பாண்ட் 007 என்பது போல் சீக்ரட் ஏஜண்ட் 116 ‘ஃபார்ஸ்’(1967) படத்தின் மூலம் நடிகர் ஜிதேந்திராவுக்கு புகழ் சேர்த்தது.

நீடித்த கொண்டாட்டம்

அறுபதுகளின் நிறைவில் மக்கள் அதுவரை எதிர்பார்த்திருந்தப் பொன்னுலகுக்கான மாற்றங்கள் தள்ளிப்போயின. எழுபதுகளின் வேலையில்லாத் திண்டாட்டம், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக, நாட்டில் நடைமுறையான நெருக்கடிநிலைப் பிரகடனமும், மக்களின் கனவுகளைத் தகர்க்கும் வரை, இவ்வகைப் படங்களே இந்திய சினிமாவின் உச்சத்திலிருந்தன.

படித்தும் வேலை கிடைக்காத இளைய சமுதாயத்தின் சாடும் பிம்பமாக அமிதாப் பச்சன், நஸ்ருதின் ஷா, தர்மேந்திரா போன்றோர்கள் ‘கோபக்கார இளைஞர்களி’ன் கதாபாத்திரங்களைக் கைக்கொண்டனர். அவர்கள் வந்து ஆக்கிரமிக்கும்வரை, சுமார் 12 ஆண்டுகளுக்கு இப்படித்தான் போலிக் கனவுகளின் உற்பத்திக் கூடமாக இருந்தது. அடுத்து வரும் ஐந்து வாரங்களும் இந்த அறுபதுகளின் இளமைக் கொண்டாட்டமே ‘பாம்பே வெல்வெட்’ பாதையைக் கடக்க இருக்கின்றன.

தொடர்புக்கு:leninsuman4k@gmail.com
படங்கள்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in