Published : 22 Nov 2019 12:56 PM
Last Updated : 22 Nov 2019 12:56 PM

வாழ்வு இனிது: தந்தையின் பாதையில் தரமான பயணம்! 

வா.ரவிக்குமார்

நாடகத் துறையில் பல சாதனைகளைச் செய்தவர் கோமல் சுவாமிநாதன். அவருடைய ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் பின்னாளில் இயக்குநர் பாலசந்தரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. தந்தையின் வழியில் பதினாறு அடி பாயும் சேயாக ஆகியிருக்கிறார் தாரிணி கோமல்.

தொடக்கத்தில் கோமல் தியேட்டர்ஸின் சார்பாகத் தந்தையின் புகழ்பெற்ற நாடகங்களை மேடையேற்றியவர் அதன் பின், ‘இவர்களின் கதைகள் இவர்களின் இயக்கத்தில்’ என்னும் தலைப்பிலும் ‘படைப்பாளிகளைக் கொண்டாடுவோம்’ என்னும் தலைப்பிலும், கல்கி, புதுமைப்பித்தன், சூடாமணி, தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் கதைகளை நாடகமாக்கி அரங்கக் கலைக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சினார்.

இந்த வரிசையில் அண்மையில் சுஜாதாவின் ஐந்து சிறுகதைகளுக்கு நாடக வடிவம் கொடுத்து, இயக்கி ‘சுஜாதா’ என்னும் பெயரிலேயே சென்னை, நாரத கான சபாவின் ஆதரவில் அரங்கேற்றினார் தாரிணி கோமல்.

வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த 1990-களில் சுஜாதா எழுதிய சிறுகதை ‘அனுமதி’. கண்ணியமான அரசு அதிகாரி ராமதுரை. அவருடைய மகன் பாலாஜி வேலையில்லாப் பட்டதாரி. பிரபலமான பாரத் நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்காக அவர்கள் வைக்கும் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் மகன்.

அந்த நிறுவனத்தின் முதலாளி வாங்கியிருக்கும் சொத்து ஒன்றை ஏலத்திலிருந்து மீட்பதற்கு ராமதுரையை அணுகுகிறார் அந்த நிறுவனத்தின் ஊழியர். பதிலுக்கு அவர் பாரத் நிறுவனம் நடத்தும் தேர்வு வினாத்தாளை அளிப்பதாகச் சொல்கிறார். பல உணர்ச்சிப் போராட்டங்களுக்கு இடையில் ராமதுரை இதற்குச் சம்மதிக்கிறார். இறுதியில் யாருமே ஊகிக்க முடியாத திருப்பத்தோடு நாடகம் முடிகிறது.

‘1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி?’ என்னும் நாடகத்தில், 302 வயதான செந்தில்நாதப் புலவரை டாக்டர் ராகவானந்தம் சந்திப்பதில் தொடங்குகிறது. நிமிடத்துக்கு இரண்டே முறைதான் அந்தப் புலவரின் இதயம் துடிக்கிறது. அந்த மருந்தை அருந்தும் டாக்டர் ராகவானந்தம் என்னவாகிறார் என்பது ரசிகர்களுக்கான நகைச்சுவை.

‘எய்தவன்’ நாடகம் தொடங்கும்போதே, வழக்கறிஞர் சுந்தரலிங்கத்தின் மீது ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது. மீண்டுவரும் அவரிடம் விசாரணை நடத்துகிறது காவல் துறை. அடையாள அணிவகுப்பில் தாக்கியவனை அடையாளம் தெரிந்தும் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. அவருடைய மனத்தில் வேறோர் எண்ணம் உருவெடுக்கிறது. நொடிக்கு நொடி திருப்பங்கள் நிறைந்த மர்ம நாடகமாக அது முடிகிறது.

‘நகரம்’ என்னும் நாடகத்தில், மதுரை மாவட்ட கிராமம் ஒன்றிலிருந்து நகரத்து மருத்துவமனைக்குத் தன்னுடைய மகளுக்கு வைத்தியம் பார்க்க வருபவளை மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழிக்கும் அவலம் சொல்லப்படுகிறது.

‘சூரியன்’ எனும் அறிவியல் புனைவு சிறுகதையை 1976-ல் எழுதியிருக்கிறார் சுஜாதா. நாடுகளுக்கு இடையையான போட்டி, பொறாமைகளால் அணு ஆயுதப் போரால் உருக்குலைகிறது உலகம். அணுக்கதிர் வீச்சிலிருந்து தப்பிப் பிழைத்த குறிப்பிட்ட சதவீத மனிதர்களே பூமிக்கு அடியில் வசிக்கின்றனர். நீர், காற்று எல்லாவற்றுக்கும் ரேஷன் முறைதான்.

இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதை இது. சூரியனையே பார்க்காத தலைமுறையைச் சேர்ந்த சிறுவன் சூரியனைப் பற்றிக் கவிதை எழுதுகிறான். சூரியனைப் பார்க்க நினைக்கும் சிறுவனின் ஆவல் நிறைவேறுகிறதா என்பதைப் பரபரப்பான காட்சிகளாக்கியிருக்கிறார்கள்.

தனி மனித உணர்வுகள், நகைச்சுவை, மர்மம், இரக்கம், அறிவியலை அழிவுக்குப் பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் எனப் பல உணர்ச்சிகளையும் ரசிகர்களின் மனத்தில் ஏற்படுத்தின இந்த நாடகங்கள்.

“ஏறக்குறைய சுஜாதாவின் 200 சிறுகதைகளைப் படித்த பின்பே இந்த ஐந்து சிறுகதைகளை நாடகமாக்கத் தேர்ந்தெடுத்தேன்...” என்றார் தாரிணி கோமல். நாடகமாக்கத்திலும் அந்த நேர்மையை ரசிகர்களால் நெருக்கமாக உணர முடிந்தது.தாரிணி கோமல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x