Published : 22 Nov 2019 12:46 PM
Last Updated : 22 Nov 2019 12:46 PM

‘பல்ப் ஃபிக்சன்’ 25 ஆண்டுகள்: இது ‘மலிவான’படமல்ல!

திரைபாரதி

“ஒவ்வொரு முறையும் நாம் திரையரங்குக்குச் செல்வது என்பது, தாயின் கருவறைக்குள் செல்வதைப் போன்றது. இருட்டில் அமர்ந்துகொண்டு, திரையில் விரியும் வாழ்க்கைக்காகக் காத்திருப்பது கருவறைக்குள் இருக்கும் குழந்தையின் தியான நிலை போன்றது”- இப்படிக் கூறியவர் இத்தாலியத் திரைப்பட மேதை, இயக்குநர் ஃபெடரிகோ ஃபெலினி.

ஆனால், எல்லாத் திரைப்படங் களும் திரையரங்கைக் கருவறை போல் உணர வைப்பதில்லை. சில படங்களை நாம் வாய்விட்டுச் சிரித்து, ரசித்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் மறந்துவிடுகிறோம். இன்னும் சில படங்களில் சிரிக்கும் தருணங்கள் வந்தாலும் மனதுக்குள் சிரித்துக்கொண்டே கதாபாத்திரங்களைப் பின் தொடர்கிறோம். அவை ஓடும் ஓட்டத்தில் அவற்றுக்கு நல்லது நடக்க வேண்டும் என பதறுகிறோம் அல்லது பிரார்த்திக்கிறோம்.

வேறு சில படங்களைப் பார்த்து விட்டு, திரையரங்கை விட்டு வெளியே வருகையில் அதுவரையிலான நமது சில எண்ணங்கள், முன்முடிவுகள் தலைகீழாக மாறிவிடுகின்றன. அவை கலைப் படங்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அத்தகைய படங்களின் உருவாக்கத்தில் இருக்கும் கலையம்சங்களை முன்னிறுத்தி, நாம் உரையாடத் தொடங்குகிறோம். மற்ற படங்களிலிருந்து தரம் பிரித்துப் பார்க்கக் கற்றுத்தரும் நமது ‘சினிமா ரசனை’யை மேம்படுத்தும் முயற்சிகளாக அவை இருக்கின்றன. அது போன்ற படங்களே ‘திரை அனுபவ’மாகவும் அமைகின்றன.

கால் நூற்றாண்டு கடந்து...

1994, அக்டோபரில் வெளியான ‘பல்ப் ஃபிக்சன்’ (Pulp Fiction) படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பார்வையாளர்கள் பலரும், மீண்டும் பிறந்ததைப் போல் உணர்ந்தார்கள். பலருக்கு முதல் பார்வையில் அந்தப் படம் புரிந்தும் புரியாத அவஸ்தையைத் தர, மீண்டும் இரண்டாம், மூன்றாம் நான்காம் முறை பார்த்து, வியப்பும் பெருமிதமும் பொங்க வெளியே வந்தார்கள்.

இன்னும் பலர் படத்தின் தலைப்பைக் கொண்டே அதைப் புறந்தள்ளினார்கள். காரணம், ‘குற்றங்கள் மலிந்த, பாலியல் விளைவைத் தூண்டும் பரபரப்பான கதையம்சம் கொண்ட, வெகுஜன நாவல்களை, ‘சாணி பேப்பர்’ என்று நாம் வருணிக்கும் தரம் குறைந்த காகிதத்தில் அச்சிட்டு, மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் எழுத்து வகைதான் ‘பல்ப் ஃபிக்சன்’.

‘மலிவான கதை’ என்ற அர்த்தம் தொனிக்கும் தலைப்பைச் சூட்டிவிட்டு, அதற்குள் மறைபொருளாகப் பெரும் ஆன்மிக உரையாடல்களை நிகழ்த்திக் காட்டினார் ‘பல்ப் ஃபிக்சன்’ படத்தின் இயக்குநர் குவெண்டின் டாரண்டினோ. படம் வெளியாகிக் கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட தற்காலத்திலும் அந்தப் படத்தை வயது வேறுபாடு இன்றி இணையத்தில் பார்க்கும் பார்வையாளர்களும், பார்த்தவர்களே திரும்பத் திரும்பப் பார்ப்பதும் குறையவே இல்லை.

பார்ப்பதோடு நின்றுவிடாமல், அன்றாட அரசியல், சமூக நிகழ்வுகளைக் கிண்டலடிக்கவும் பொதுக்கருத்தை உருவாக்கவும் ‘பல்ப் ஃபிக்சன்’ காட்சிகளையும் புகழ்பெற்ற அதன் வசனங்களையும் மையமாக வைத்து மீம்களை உருவாக்கி வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘பல்ப் பிக்ச’னுக்கான உலகளாவிய ரசிகர்கள் மில்லியன்களில் நூற்றுக்கணக்கான குழுக்களாக இயங்குகிறார்கள். ரசிகர்களைத் தாண்டி, விமர்சகர்கள் இன்னும் ‘பல்ப் ஃபிக்ச’னை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படத்தின் இரு முக்கிய கதாபாத்திராங்களான வின்செண்ட், ஜூல்ஸ் ஆகிய இருவரும் பல கொலைகளைச் செய்து, மீட்டுக் கொண்டுவரும் தாதா வாலஸுக்குச் சொந்தமான அந்த ப்ரீப் கேஸ் பெட்டியில் என்ன இருந்தது என்பதை இயக்குநர் கடைசிவரை காட்டவே இல்லை. அது என்னவாக இருக்கும், இருக்க முடியும் என்பதைப் பற்றித் தங்கள் கற்பனைக்கும் ‘சினிமா ரசனை’க்கும் ஏற்ப, அந்தக் கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

காலத்தைக் கலைப்பதில் வித்தகர்

இவற்றையெல்லாம் தாண்டி, மொழி எனும் எல்லைகளைக் கடந்து, உலகம் முழுவதும் உள்ள திரைப்படப் பள்ளிகள், கல்லூரிகளில் ‘பல்ப் ஃபிக்சன்’ படம், ‘நான் - லீனியர்’ (Non - linear) திரைக்கதை உத்தியைக் கற்றுக்கொடுக்க பாடமாகியிருக்கும் படம். அந்த உத்தியைக் கற்றுக்கொடுக்க மட்டுமல்ல; வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கும் பாடத்தையும் அந்தப் படம் தன்னிடம் வைத்திருப்பதும் தான் அதன் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் குவெண்டின் டாரண்டினோவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைச் சேர்த்துக் கொடுத்திருக்கிறது.

ஒரே நேர்கோட்டில் கதையைச் சொல்லாமல் கதை நிகழும் இடம், காலம் (Time and Space) ஆகிய இரண்டு முக்கியக் கூறுகளை வெட்டித் துண்டாடிச் சிதறடித்துக் கதை சொல்வதில் மாபெரும் மேதையாகவும் வித்தகராகவும் டாரண்டினோவை முன்னிறுத்தியது ‘பல்ப் ஃபிக்சன்’. இன்று ‘டாரண்டினோவின் பாணி’ என்று கொண்டாடப்படும் இந்தக் கால, இட விளையாட்டு மூலம் கதாபாத்திரங்களுக்கு நிகழும் ‘எதிர்பாராத் தன்மை’, பார்வையாளர்களை பெரும் திரை அனுபவத்துக்குள் தள்ளிவிடும் மாயத்தைச் செய்வதில் அவரது எந்தப் படமும் இதுவரை தோற்கவில்லை.

‘நான் லீனியர்’ உத்தியைப் பரபரப்புக்காகவும் சுவாரசியத்துக்காகவும் மட்டுமே டாரண்டினோ பயன்படுத்தவில்லை. அந்த உத்தியைத் தொடர்ந்து கையாள்வதன் மூலம் சாதாரணக் கதைகளை வாழ்க்கைக்கான பெரும் திறப்புகளைக் கொண்டவையாக மாற்ற முடியும் என்று தொடர்ந்து அவர் காட்டி வருகிறார். ஒரு பெரும் வாசகனாகிய டாரண்டினோ, ‘நான் - லீனியர்’ கதை சொல்லலில் குழப்பம் நேராதிருக்க நாவல்களில் இருந்தே ஒரு உத்தியை எடுத்துத் தனது திரைப்படங்களில் கையாண்டு வருகிறார். முதல் முறையாக ‘பல்ப் பிக்ச’னிலும் அதைப் பயன்படுத்தினார்.

நான் -லீனியர் முறையில் எழுதப்படும் நாவல்களில், அத்தியாயங்களுக்குத் தலைப்புகளையும் துணைத் தலைப்புகளையும் கொடுப்பதன் மூலம் கதை நிகழும் கால ஓட்டத்தையும் இடத்தையும் எழுத்தாளர்கள் வாசகர்களுக்கு புரிய வைத்துவிடுவார்கள்.

ஆனால் காட்சி சட்டகங்கள், காட்சித் துணுக்குகளால் ஆன திரைப்படத்தில் காலமும் இடமும் தடம் மாறித் தாவும்போது, பார்வையாளர்கள் திரை அனுபவத்திலிருந்து சட்டென்று துண்டிக்கப்படுகிறார்கள். கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் பொருட்கள், அணிந்திருக்கும் ஆடைகள், பொழுதுகள் எனப் பலவற்றில் நிகழ்ந்துவிடும் தாவலும் தொடர்ச்சி இன்மையும் கதையின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்வதில் பெரும் சவாலாக விளங்குகின்றன.

இந்தச் சவாலைப் பார்வையாளர்கள் கடந்து வருவதற்காக, நாவல்களில் அத்தியாயங்களுக்குச் சூட்டப்படுவதைப் போல் கலைத்துப் போடப்பட்ட தனது திரைக்கதையின் ஒவ்வொரு காட்சித் தொடருக்கும் ( சீக்குவென்ஸ்) ஒரு தலைப்பைக் கொடுத்துவிடும் புத்திசாலித்தனத்தைக் கையாண்டார் டாரண்டினோ. ஒரு தலைப்புடன் தொடங்கும் ஒரு காட்சித் தொடர் முடிந்தோ அல்லது பாதியுடன் வெட்டப்பட்டோ, அடுத்த காட்சித் தொடர் எந்த இடத்திலிருந்து தொடங்கினாலும் அதற்கு ஒரு துணைத் தலைப்பைக் கொடுத்துவிட்டு, கதையை நிகழ்காலத்துக்கோ கடந்த காலத்துக்கோ எடுத்துச் சென்றுவிடும் எளிய உத்தியை அவர் கையாண்டார்.

இரண்டு தொழில்முறைக் கூலிக் கொலைகாரர்கள், அந்த இருவரில் ஒருவன் ‘இந்த உலகின் நிகழ்வுகள் அனைத்துமே தற்செயலானவை’ என நம்புகிறவன், காதல் மனம் கொண்டவன்.

கொலை செய்வதற்கு முன், தெரிந்தோ தெரியாமலோ பைபிள் வாசகம் ஒன்றைக் கொலையாக இருப்பவரிடம் கோடிட்டுக் காட்டும் மற்றொருவன், அவனுடைய நண்பன். தன் உடல்பலத்தைவிட, பாரம்பரியத்தின் மீது மதிப்பு வைத்திருக்கும் ஒரு குத்துச் சண்டை வீரர். அவரது பொறுப்பற்ற மனைவி. துரோகத்தைச் சகித்துக்கொள்ளவே முடியாத தலைக்கனமும் செருக்கும் ரத்த நாளங்களில் புரையோடிய ஒரு தாதா.

அவனது வயதில் பாதி வயதே கொண்ட போதைப்பொருள் பயன்படுத்தும் அவன் இளம் மனைவி, கொள்ளையடித்து சொகுசாக வாழ்வதை விரும்பும் ஒரு ஒழுக்கங்கெட்ட ஆனால் பிரியமான தம்பதி.

வன்முறையைத் தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக்கொண்ட இந்தக் கதாபாத்திரங்கள், வாழ்க்கையின் தேடல்களில் கற்றுக்கொள்ளும் பாடங்களும் அடையும் விடுதலையும்தான் ‘பல்ப் பிக்ச’னின் கதை.

ஒரு மலிவான கதை எனப் பொதுப்புத்தியில் பதிவான கதைக்களன் வழியே நிகழும் வாழ்க்கையின் மிக உயர்ந்த ஆன்மிக உரையாடலைத் தரிசிக்க விரும்பும் யாரையும் ‘பல்ப் பிக்சன்’ கவர்ந்தபடியே இருக்கும். மனிதனிடம் பேராசையும் வன்முறையும் எஞ்சியிருக்கும்வரை அந்தப் படமும் உயிர் வாழும்.

தொடர்புக்கு:
jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x