

சுபாஷ்
தன்னைத்தானே தாழிட்டுக்கொண்டு வீட்டுக்குள் தனியே வசிக்கிறான் ஒருவன். அவனது கூட்டை உடைத்து சிறகு விரிக்கச் செய்யும் காதலின் முயற்சியைச் சொல்கிறது ‘ஹவுஸ் அரஸ்ட்’ திரைப்படம். நெட்ஃபிளிக்ஸின் பிரத்யேகத் திரைப்படங்களின் வரிசையில் நவம்பர் 15 அன்று ‘ஹவுஸ் அரஸ்ட்’ வெளியாகி இருக்கிறது.
டெல்லி மாநகரத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் கரண் என்ற இளைஞனின் வீட்டுக்குள் சுழல்கிறது கதை.
சுமார் ஆறு மாதமாக வீட்டுக்கு வெளியே படி தாண்டாத வித்தியாச விரதத்துடன் வாழ்ந்து வருகிறான் கரண். சகல வசதிகளும் கூடிய அந்த விசாலமான வீட்டில் அவனுக்கான நவீனங்கள் அனைத்தும் இருக்கின்றன. பங்குச்சந்தை ஆலோசகராக வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கவும் செய்கிறான். சுயமாகச் சமைத்து, தானே வீட்டை ஒழுங்கு செய்து, தனது ரசனைக்கேற்ப வீட்டை அலங்கரித்து நான்கு சுவருக்குள் வலம் வருகிறான்.
படியைத் தாண்டி அவனும் வெளியே செல்வதில்லை; எவரையும் உள்ளே விடுவதுமில்லை. 20 வருட சிநேகிதனுடனும் தொலைபேசியிலேயே உறவாடுகிறான். எந்தக் குறையுமின்றி, எவரோடும் புகாருமின்றி மர்ம மகிழ்ச்சியுடன் வாழும் அவன் வீட்டுக்குள் இரு இளம்பெண்கள் அத்துமீறி அடுத்தடுத்து நுழைகிறார்கள்.
ஒரு பெண் அதே அடுக்ககத்தில் வசிக்கும் பிங்கி. தாதாவின் மகள் என்ற அறிமுகத்துடன், எட்டடி உயரப் பாதுகாவலனுடன் அவ்வப்போது கரணை இம்சித்துச் செல்கிறாள். ஒரு நாள் மர்ம லக்கேஜ் ஒன்றைப் பத்திரமாக வைத்திருக்கும்படி அவனை மிரட்டி அந்த வீட்டுக்குள் வைத்துச் செல்கிறாள்.
அதே நாளில் பொது நண்பன் வாயிலாக கரணை அறிந்துகொள்ளும் பெண் பத்திரிகையாளர் சாய்ரா, பேட்டியெடுக்கிறேன் என்று விடாப்பிடியாய் அவன் கதவைத் தட்டுகிறாள். அவள் வருகையை ரசிக்காத கரணின் இறுக்கத்தை, பேசிப்பேசி மெல்ல விடுவிக்கிறாள்.
சமூகத்திலிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டு தனித்தீவுகளாய் ஜீவிக்கும் ஜப்பானிய இளைஞர்களைக் குறிக்கும் ‘ஹிகிகோமோரி’ குறித்து விளக்குகிறாள். அவளது வருகையும், ஊடாடலும் அவனுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. இதற்கிடையே பிங்கி ஒப்படைத்துப் போன லக்கேஜினுள் இருந்து வெளிப்படும் மர்ம நபரை ‘பஞ்சதந்திர’ உத்திகளைப் பயன்படுத்தி சாய்ராவிடமிருந்து மறைக்கவும் போராடுகிறான்.
கரணைக் கரைக்கும் முயற்சியில் தான் கரைவதையும் சாய்ரா உணர்கிறாள். ஆறு மாதமாய் வெளியுலகிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டதன் பின்னணி, தனது கடந்த காலம் பற்றி கரண் மனம் திறக்கிறான். சாய்ரா தனது கடந்த காலம் வெளிப்படாதிருக்கத் தடுமாறுகிறாள். இருவருமே நெருங்கி, உருகி தத்தளிக்கும் சூழலில் அந்தச் சிறை வீட்டுக்குள் எதிர்பாரா சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி என்ன நடந்தது? அவர்களின் காதல் என்னவானது? கரண் தனது சிறையிலிருந்து வெளியே வந்தானா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அடுத்து வரும் காட்சிகள் பதில் சொல்கின்றன.
இயல்புக்கும் பிறழ்வுக்கும் இடையே ஊசலாடும் சற்றுப் புதிரான கதாபாத்திரத்தில் கரணாக வரும் அலி பாஸல் தேறுகிறார். கரணின் தவிப்புகள், சைக்கோ கொலைகாரனோ என்ற சாய்ராவின் சந்தேகத்தை எதிர்கொள்வது, மஞ்சள் கோடு தாண்டி வரும் பெண்ணிடம் தடுமாறுவது என அலி பாஸல் கவர்கிறார்.
பத்திரிக்கையாளராக வரும் சாய்ராவின் பாத்திரம் குழப்பினாலும், காதலும் கொஞ்சலுமாகச் சின்னச் சின்ன முகபாவனைகளால் சமாளித்து விடுகிறார் ஷ்ரையா. பிங்கியாக பர்கா சிங், நண்பனாக ஜிம்சார்ப் உள்ளிட்டோர் வந்து போகிறார்கள். ஷஷாங் கோஷ், சமித் பாசு இணைந்து இயக்கி உள்ளனர்.
நகைச்சுவைக் கலந்த காதல் கதையை நான்கு சுவருக்குள் சுழலும் கேமரா அலுப்புத் தட்டாது பதிவுசெய்கிறது. அடிக்கடி வரும் தொலைபேசி உரையாடல்களின் இருமுனைகளையும் அறைக்குள்ளாகவே இடம்பெறச் செய்யும் வெர்சுவல் காட்சிகள், வீட்டின் வித்தியாசமான உள்ளலங்காரம் போன்றவை கதைக்குப் பொருந்திப்போகின்றன.
நவீனங்களால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கினாலும், பிசிறும் மனவெளிகளால் தமக்குள் தனித் தீவாகத் துண்டாடப்படும் மனிதர்களை அந்த நவீனங்களால் காப்பாற்ற முடிவதில்லை. அங்கே ஆதி அனுபவமான காதல்தான் கைகொடுக்கிறது என்பதை அழுத்தமற்ற கதை வழியே சொல்கிறது ‘ஹவுஸ் அரஸ்ட்’.