

மறக்க முடியவில்லை
‘மசான்’ திரைப்படத்துக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. படத்தில், கதாநாயகி ரிச்சா சட்டாவின் தேவி கதாபாத்திரம் வலிமையானதாக அமைந்திருந்தது. “படம் வெளியான பிறகும் இன்னும் தேவி கதாபாத்திரத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை” என ரிச்சா சட்டா தன் வலைப்பூவில் ‘மசான்’ அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“மசான் என் வாழ்நாள் முழுவதற்குமான நினைவுகளை வழங்கியிருக்கிறது. கங்கை படித்துறைகளின் தனிமை, பிளாஸ்டிக் பைகளில் எடுத்துச் செல்லப்படும் சாப்பாட்டு டப்பாக்கள், சிறு நகரத்தின் கனவுகள் எனப் படத்தின் காட்சிகள் மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓடுகின்றன. தேவி கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர நினைக்கும்போதெல்லாம் ஒரு கற்பனையான தோழியை இழக்கும் வலியை உணர்கிறேன். ரிச்சா மறைந்துவிடலாம். ஆனால், தேவி எப்போதும் உயிருடன் இருப்பாள்” என்று தன் கதாபாத்திரத்தின் வீரியத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ரிச்சா.
‘அவரது இடத்தை அடைய முடியாது’
மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் இடத்தை யாராலும் அடைய முடியாது, என்கிறார் மகன் அபிஷேக் பச்சன். நாற்பது ஆண்டுகாலத் திரை வாழ்க்கையில் அமிதாப் பச்சன் பல வலிமையான கதாபாத்திரங்களை வழங்கியிருக்கிறார்.
“அப்பாவின் இடத்தை அடைவதற்கு நான் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. வேறு யார் ஆசைப்பட்டாலும் அதை அடைய முடியாது. அவர் ஒரு வாழ்நாள் நிகழ்வு” என்று சொல்லியிருக்கிறார் அபிஷேக்.
அபிஷேக் பச்சன் திரையுலகில் நுழைந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. “இந்த பதினைந்து ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். சூப்பர் ஸ்டாரின் மகன் என்னும் அடையாளம் மட்டும் பாலிவுட்டில் நிலைக்கப் போதாது” என்கிறார் அபிஷேக். ‘பிக்கு’வுக்குப் பிறகு அமிதாப் பச்சனின் ‘வஜீர்’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது.
எந்திரன் 2வில் தீபிகா?
எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு இயக்குநர் ஷங்கர் தீபிகாவை அணுகியிருப்பதாகத் தெரிவிக்கிறது பாலிவுட் வட்டாரம். ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோன் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த்துடன் இணைந்து நடித்திருந்தார்.
தென்னந்தியாவின் அதிகமாக வசூல் ஈட்டிய படமாக ‘எந்திரன்’ இருந்தது. சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் அந்த சாதனையை முறியடித்தது. ‘எந்திரன்’ முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஆனால், தொடர் வெற்றிகளுக்குப் பிறகு தீபிகா தன் சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டதாகத் தெரிகிறது. அத்துடன், படங்களின் தேர்வையும் மிகவும் கவனமாக செய்துவருகிறார். இதனால், எந்திரன் 2வில் நடிப்பாரா என்ற சந்தேகமும் இருக்கின்றது. தற்போது தீபிகா, சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்திலும், இம்தியாஸ் அலியின் ‘தமாஷா’ படத்திலும் நடித்துவருகிறார்.
- தொகுப்பு: கனி