திரை நூலகம்: நவீன ஒளிப்படக் கலையின் நுட்பங்கள்

திரை நூலகம்: நவீன ஒளிப்படக் கலையின் நுட்பங்கள்
Updated on
1 min read

ஒளிப்படக் கலையில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய கேமராக்களின் செயல்பாடு மற்றும் ஒளிப்படத் தொழில்நுட்பம் பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறார்களோ அவ்வளவு சிறந்த ஒளிப்படங்களை உருவாக்க முடியும். திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவரும் சி.ஜெ. ராஜ்குமார் ஒளிப்படக் கலை குறித்து விரிவாக எழுதியிருக்கும் புதிய நூல் ‘க்ளிக்’ ஏற்கெனவே டிஜிட்டல் ஒளிப்பதிவு பற்றி ‘அசையும் படம்’ , ‘பிக்சல்’ ஆகிய நூல்களை எழுதிக் கவனம் பெற்றவர்.

இந்த நூலில் டிஜிட்டல் கேமிராவின் தொழில்நுட்பங்களைத் தடங்கல் ஏதுமின்றி வாசிக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான தொழில்நுட்பச் செய்திகளை அவற்றுக்கேற்ற சரியான படங்களுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமான வகையில் சரியான வரிசையில் தொகுத்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

டிஜிட்டல் கேமராவின் தொழில்நுட்பத்தில் தொடங்கி, அவற்றின் வகைகள், செயல்பாடுகளை விவரித்து, காட்சிப் பதிவின் செயல்முறையை விரிவாகக் கூறிச் செல்கிறது நூல். குறிப்பாக ஒளிப்படக் கலையில் இயற்கை ஒளி மற்றும் செயற்கை ஒளி (ஃப்ளாஷ்), எக்ஸ்போஷர், நிறம், ஒளிப்படக் கலைக்குப் பயன்படும் மென்பொருட்கள் என அடைப்படையான தகவல்கள் விடுபடாமல் இருக்கின்றன.

ஒளிப்பட வகைகள், உலக அளவில் நடக்கும் முக்கியமான ஒளிப்படப் போட்டிகள், ஒளிப்படச் சுற்றுப்பயணம், ஒளிப்படம் எடுக்கச் சிறந்த இடங்கள் போன்ற வழிகாட்டல்கள் புதியவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஒட்டுமொத்தமாக நவீன ஒளிப்படக் கலையை எளிதாகப் புரிந்துகொண்டு செயல்பட ஏற்ற தெரிவாக இந்தப் புத்தகத்தைக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in