Published : 15 Nov 2019 02:17 PM
Last Updated : 15 Nov 2019 02:17 PM

அஞ்சலி: நடந்தாய் வாழி அருண்மொழி

ஓவியம்: ஜீவா

உலக சினிமா பாஸ்கரன்

‘முதல் சந்திப்பிலேயே முப்பது முறை சந்தித்த உணர்வை ஏற்படுத்துவார் அருண்மொழி’

- திரைக்கதையாளர் விஸ்வாமித்ரன்.

அருண்மொழியின் பலம் நண்பர்கள். எனவேதான் ஆயிரக்கணக்கான நண்பர்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தார்கள். பெசன்ட் நகர் மின் மயானம் கூட்டத்தால் திணறியது. சமூக இணைய தளங்கள் முழுக்க கண்ணீர் பதிவுகள் நிறைந்தன. ‘சாகுற வயசா...’ என அவருடைய நண்பர்கள் அனைவரையும் அலறவைத்து மறைந்திருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல தளங்களில் இயங்கியவர். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் வேட்கை கொண்டு பயணித்து இருக்கிறார். சென்னை, திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலரும் வணிக சினிமாவை நோக்கிச் சென்றபோது, அருண்மொழி மட்டும் ‘மாற்று சினிமா’வை மணந்துகொண்டு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

தற்சார்புத் திரைப்படக் கலைஞராக வாழ்நாள் முழுக்கப் பயணித்து இரண்டு சிறந்த திரைப்படங்களையும் பல முக்கிய ஆவணப் படங்களையும் தந்தவர். ‘அவள் அப்படித்தான்’, ‘ஏழாவது மனிதன்’ போன்ற தமிழின் தலைசிறந்த இரு படைப்புகளில் உதவி இயக்குநராகத் தனது பங்களிப்பைச் செலுத்தியவர் என்பது பலரும் அறியாத ஒன்று. ‘ஏர் முனை’, ‘காணி நிலம்’ என அவர் இயக்கிய இரண்டு தற்சார்புத் திரைப்படங்கள் காவிரிப் படுகை விவசாயக் குடிகளின் விளிம்பு வாழ்வைப் பேசியவை. வெகுஜன வணிக சினிமாவை முற்றாகப் புறந்தள்ளிய அருண்மொழி, டிஜிட்டல் யுகம் தொடங்கும் முன்பே ஆவணப்படங்களைக் கையிலெடுத்தவர். கேமராவைச் சுமந்தபடி தமிழகம் முழுவதும் அருண்மொழி நடக்காத ஊர்களே இல்லை.

பதிவுடன் கூடிய செயல்பாடு

கவச குண்டலம்போல் படப்பதிவுக் கருவியை எப்போதும் தன்னுடன் வைத்திருந்த அருண்மொழி, ஆளுமைகளையும் பிரச்சினைகளையும் நிகழ்ச்சிகளையும் படமாக்கியபடியே இருந்தார். அவரை முன்மாதிரியாகக் கொண்டே இன்றைய சமூகக் காணொலித் தளத்தில் பல சேனல்கள் பிறந்தன. தான் வாழ்ந்த இறுதிநாள்வரை தனது கேமராவை இயக்கிக்கொண்டே இருந்த அருண்மொழி, அவற்றைக் கோவையாகத் தொகுத்துவைப்பதிலும் படைப்பு ஒழுங்கைக் கடைப்பிடித்தவர். தனது ஆவணப் படங்களுக்கான களங்களில், ஒரு தீவிர சமூகச் செயற்பாட்டாளராகவும் களப்பணியில் இணைந்துகொள்ள ஓடிக்கொண்டும் கால்கள் தேய நடந்துகொண்டும் இருந்தவர்.

ஒரு தற்சார்புத் திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதை ஆவணப்படுத்தும் நோக்குடன், நான் இயக்கி முடித்திருக்கும் ‘இன்ஷா அல்லாஹ்’ தற்சார்புத் திரைப்படத்தின் உருவாக்கத்தை 80 மணி நேரம் வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். அவற்றைத் தொகுத்து “மதுரை சர்வதேச ஆவணப்பட விழாவில் திரையிடப்போகிறேன்” என என்னிடம் கூறினார். சொன்னது போலவே அவர் அதைத் தொகுத்து வைத்திருப்பதை அவரது படத்தொகுப்பாளர் என்னிடம் சொன்னார். இந்த இடத்தில் அருண்மொழி பற்றி சாவித்திரி கண்ணன் கூறியது மனத்தை அழுத்துகிறது, “யாரிடம் என்ன திறமை உண்டு, தகுதி உண்டு என்று தேடித் தேடி பதிவுசெய்து விளம்பர வெளிச்சம் தந்தவர். தன் திறமை, தகுதியை மற்றவர்களிடம் பறையறிந்து வெளிப்படுத்த அவர் ஒரு போதும் முயன்றதில்லை. அவரை முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும் என்று நமக்கும் தோன்றவில்லையே...!”

தோழர்களுடன் தொடர்பு

உண்மைதான்… பொக்கிஷமான கலைஞர்கள் மறைந்த பிறகே அவர்களைக் குறித்துத் தேடத் தொடங்குகிறோம். அருண்மொழியுடன் திரைப்படக் கல்லூரியிலிருந்து பயணத்தைத் தொடங்கி, பின் அந்தக் கல்லூரியின் முதல்வராக உயர்ந்த டி.தரின் பதிவைப் படித்துவிட்டு அவரை அழைத்துப் பேசினேன். அவர் தன் நினைவுகளை உயிர்ப்பித்தார்.

“அருண்மொழி தஞ்சை மாவட்டத்தின் குடவாசல் கிராமத்தில் 1956-ல் பிறந்து, வளர்ந்தவர் அருண்மொழி சிவப்பிரகாசம். அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர்கள். அவருடைய அப்பாவை அந்தப் பகுதி மக்கள் ‘ஒளி வாத்தியார்’ என்று கொண்டாடியிருக்கிறார்கள். 1973-ல், அருண்மொழி, நான் உட்பட 14 பேர், தரமணி அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுப் பிரிவில் சேர்ந்து படித்தோம். காவிரி டெல்டா விவசாயம், விவசாயத் தொழிலாளர்கள், கூலி உயர்வுப் போராட்டம் என்று சிறுவயது முதலே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பாதிப்பில் வளர்ந்த கதையை எங்களிடம் பகிர்ந்திருக்கிறார். இன்ஸ்டிடியூட்டில் கீழ்வெண்மணிப் பாடலைப் பாடிக்காட்டுவார். 1976-ல் ஒளிப்பதிவுப் படிப்பு முடித்ததும் நான், அருண்மொழி, பாபு கான் மூவரும் அமிர்தசரஸ் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் பணியில் சேர்ந்தோம். கடுங்குளிர், இந்தி தெரியாது. ஆனால், அருண்மொழி எந்தத் தயக்கமும் இல்லாமல் தனக்குத் தெரிந்த சில இந்தி வார்த்தைகளை வைத்தே அனைவரிடம் இனிமையாகப் பழகினார். அந்த நேரத்தில் எங்கள் சீனியர் ருத்ரய்யா ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தொடங்கினார். உடனே, தொலைக்காட்சி நிலைய வேலையை உதறிவிட்டு வந்து, அவருக்கு உதவியாளராகச் சேர்ந்துவிட்டார் அருண்மொழி. அவரது பட முயற்சிகளில் உடன் இருந்தார்.

மும்பையில் பிறந்து, வளர்ந்து இந்திய சினிமாவில் சாதனை படைத்த புனே திரைப்படக் கல்லூரி மாணவர் கே.ஹரிஹரன். தமிழ் தெரியாத அவர் சென்னை வந்தபோது, அவருக்கு இங்கே தளம் அமைத்துக் கொடுத்தவர் அருண்மொழிதான். வழக்கறிஞர் பாளை சண்முகம் தயாரித்த ‘ஏழாவது மனிதன்’ படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு வந்தபோது, அதை, ஹரிஹரனுக்கு மடைமாற்றிவிட்ட தயாளன் அவர். அந்தப் படத்துக்கு வசனம் எழுதி, இணைத் தயாரிப்பாளராகவும் இருந்தார். அந்தப் படத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர் ரகுவரனை ஹரிஹரனுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் அருண்மொழிதான். அதேபோல, கம்யூனிஸ்ட் தோழர்களுடனான தொடர்பில், விவசாயிகளிடம் தலா நூறு ரூபாய் வீதம் நன்கொடை பெற்று அருண்மொழி இயக்கிய ‘ஏர் முனை’ படத்தில் நாசரைக் கதாநாயகனாகவும் தங்கர் பச்சானை ஒளிப்பதிவாளராகவும் அறிமுகப்படுத்தியதும் அவர்தான். அந்தப் படம் ரசாயன உரங்களைத் தவிர்க்க வலியுறுத்திய முதல் இயற்கை விவசாயப் படம். 16 எம்.எம். ஃபிலிம் படச்சுருளில் துணிந்து படமாக்கினார் அருண்மொழி. அவரால் பலனடைந்தவர்களின் பட்டியல் பெரியது. ஆனால், யாரிடமும் எந்தப் பலனையும் எதிர்பார்க்காத மழையைப் போன்றவர். அவரது வார்த்தைகளில் எப்போதுமே ஈரம் படர்ந்திருக்கும். இனி அவருடன் பேசவும் முடியாது, பார்க்கவும் முடியாது என்பதை நம்ப முடியவில்லை” என்று குரல் தாழ்த்தினார்.

அருண்மொழி மறைந்துவிட்டார். தான் எப்போதும் விரும்பும் திரையிடலில், மரணித்தவர் அருண்மொழி. எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த வரம்! தனது நடிப்புப் பள்ளி மாணவர்களுக்கு ஓடி ஓடி திரையுலகில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தவர். ‘திரைத்துறையில் எல்லோருக்கும் உதவும் குணமுள்ள ஒரு தலைமுறை, அவருடன் நிறைவடைந்தது’ என இயக்குநர் செழியன் குறிப்பிட்டது சத்தியமான வார்த்தை.

நூறு வணிக சினிமாக்களை உருவாக்கி, கோடிகளைக் குவித்து வைத்து மறைந்து போனவர்களைக் காலம் கணப்பொழுதில் மறந்துவிடும். அருண்மொழி நூறு ஆண்டுகள் கழித்தும் பேசப்படும் படைப்புகளை உருவாக்கும் மாணவர்களை உருவாக்கி இருக்கிறார். இதுதான் அருண்மொழியின் வெற்றி.

கட்டுரையாளர், எழுத்தாளர், திரை விமர்சகர், 'இன்ஷா அல்லாஹ்' திரைப்படத்தின் இயக்குநர்
தொடர்புக்கு: kfs.cinema@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x