Published : 15 Nov 2019 02:11 PM
Last Updated : 15 Nov 2019 02:11 PM

கலை வாழ்வில் கமல் 60: கமலின் மற்றுமொரு புதுமை

கோபால்

திரையுலகில் கமல் ஹாசன் நிகழ்த்திய புதுமைகள் ஏராளம். கடந்த வாரம் தனது 65-ம் பிறந்தநாள் கொண்டாட்டங்களினூடே இன்னொரு புதுமையை நிகழ்த்தினார். தான் நடித்து, இயக்கி, தயாரித்து இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ‘ஹேராம்’ படத்தை இன்றைய தலைமுறையினருக்காக திரையிட்டார்.

இந்தத் திரையிடலுக்கு ஊடகப் பிரதிநிதிகள், கமலின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள், மக்கள் நீதி மையம் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் நற்பணி மன்றங்களைச் சேர்ந்த ரசிகர்களும் திரளாக வந்திருந்தனர். இவர்களில் பலர் படம் வெளியான ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள். இன்றைய பார்வையாளர்கள் இரண்டரை மணி நேரத்தைத் தாண்டாத படங்களைப் பார்த்துப் பழகியவர்கள். ‘ஹே ராம்’ மூன்றரை மணி நேரம் ஓடக்கூடியது. இவ்வளவு நீளமான படத்தை ஒரே நேரத்தில் அமர்ந்து பார்ப்பதும் பலருக்கு முதல் அனுபவமாக இருந்திருக்கும். ஆனால், திரையரங்கில் எந்தத் தருணத்திலும் பார்வையாளர்களின் ஆர்வம் தொய்வடைந்ததை உணர முடியவில்லை. தொடக்கம் முதல் இறுதிவரை பல இடங்களில் கைதட்டல் ஒலி உரக்க ஒலித்ததே இதற்குச் சான்று.

திரையிடப்பட்ட பிரதி, பழைய படம் பார்ப்பதைப் போன்ற உணர்வை அளிக்காத தரத்துடன் இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் ஒளியையும் ஒலியையும் வண்ணங்களையும் துல்லியமாகக் கவனித்து ரசிக்க முடிந்தது. குறிப்பாக, கொல்கத்தாவில் கமலுக்கும் ராணி முகர்ஜிக்குமான காதல் காட்சி, சூரியன் முற்றிலும் மறைந்துவிடாத பின்மாலை நேரத்தில் நடப்பதை அவ்வளவு கச்சிதமாக உணர முடிந்தது. கமல் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் திரு, நடிகர்கள் நசீருதீன் ஷா, ஹேம மாலினி, கிரீஷ் கர்னாட ஆகிய பெருங்கலைஞர்களின் மேன்மையையும் இந்தத் திரையிடல் இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்தியது.

படம் முடிந்த பின் நிகழ்ந்த ஊடகச் சந்திப்பில் ஊடகர்களும் படத்தைப் பார்த்துப் பிரமிப்படைந்திருந்ததைக் காண முடிந்தது. அதையும் தாண்டிய விமர்சனபூர்வமான கேள்விகள் சிலவற்றுக்கு கமல் தன் வழக்கமான சாதுர்ய பதில்களை அளித்தார். “மீண்டும் இப்படி ஒரு படம் எடுப்பீர்களா?” என்று கேள்விக்கு “எடுத்துக்காட்டுங்கள் என்று யாராவது சவால் விட்டால், நிச்சயமாக எடுத்துக்காட்டிவிடுவேன்” என்று சொன்னபோது கமலுக்குள் இருக்கும் கலை உத்வேகம் என்றும் அழியாது என்பதை உணர முடிந்தது.

நவம்பர் 8 முதல் அமேசான் பிரைம் இணையதளத்தில் ‘ஹே ராம்’ படத்தைக் காண முடியும் என்ற அறிவிப்பு இந்தத் திரையிடலைக் காண வாய்ப்பு கிடைக்காத ரசிகர்களுக்கான ஆறுதல். இருந்தாலும், அனைத்து ரசிகர்களுக்கும் திரையரங்கில் காணும் வாய்ப்பை வழங்கும் விதமாக ‘ஹே ராம்’ மறு வெளியீடு நிகழ வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிபார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x