Published : 15 Nov 2019 14:09 pm

Updated : 15 Nov 2019 14:09 pm

 

Published : 15 Nov 2019 02:09 PM
Last Updated : 15 Nov 2019 02:09 PM

ஒரு நடிகனின் தசாவதாரம்

dasavataram-of-an-actor
டிஜிட்டல் ஓவியங்கள்: ஏ.பி.ஸ்ரீதர்

ஷங்கர்

மனிதனைப் போலவே நடிகனும் தனக்கென்று சொந்தமான ஆளுமை, கதாபாத்திரம், சுயம் என்ற ஒன்றைப் பெற்றவன். ஆனால், அவனோ தன் உடலை மேடையாக்குபவன். அங்கே, தான் அல்லாத பல்வேறு ஆளுமைகளையும் கதாபாத்திரங்களையும் சுயங்களையும் நடிப்பதற்கும் பாவிப்பதற்கும் அனுமதிக்கிறான்.


அதிகமான பாவனைகளை அவன் உபசரித்துப் பிரதிபலிக்கும்போது அவன் சிறந்த நடிகன் ஆகிறான். யதார்த்தத்தில் பார்க்கும் மனிதர்களின் நடை, உடை, பாவனைகளைத் தனது கதாபாத்திரத்துக்குள் வெற்றிகரமாக உலவவிட்டு அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுப்பவர்கள் மெத்தட் ஆக்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள். இந்தியாவின் சிறந்த ‘மெத்தட்’ ஆக்டர்களில் ஒருவர் கமல்ஹாசன்.

சிவாஜி கணேசன், திலீப்குமார், அமிதாப் பச்சன், நசீருதின் ஷா, ஓம்பூரி, அமீர்கான், மம்மூட்டி, நவாஸுத்தின் சித்திக்கி ஆகியோரை இந்த முறை நடிப்புக்கு உதாரணமாகச் சொல்கிறார்கள். கமலிடம் சாப்ளின் உண்டா? ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்புவில் இருக்கிறார். தடுமாற்றம் நேரும்போதெல்லாம் கமலிடம் சாப்ளின் வெளிப்படுவார். மார்லன் பிராண்டோ இருக்கிறாரா? வேலு நாயக்கராக இருக்கிறார்.

அல்பாசினோவும் ராபர்ட் டி நீரோவும் இருக்கிறார்களா? வேலு நாயக்கரின் இளம்பருவத்தில் இருக்கிறார்கள். ஜே. கிருஷ்ணமூர்த்தி இருக்கிறாரா? ‘இந்தியன்’ சேதுபதியில் இருக்கிறார். நெருங்கிப் பார்க்கும்போது விகடன் பாலசுப்ரமணியனும் சேதுபதிக்குள்ளேயே இருக்கிறார். விவியன் ரிச்சர்ட்ஸ் இருக்கிறாரா? ‘சத்யா’வில் இருக்கிறார். நசீருதீன் ஷா இருக்கிறாரா? ‘உன்னைப் போல் ஒருவ’னாக இருக்கிறார். கமல்ஹாசன் என்ற நடிகனின் உடலுக்குள் விசுவரூபம் எடுத்த பத்து கதாபாத்திரங்கள்:

நந்து: தீமையின் ஆற்றல்

* ஆளவந்தான்

மனப்பிறழ்வு, தீமை, அராஜகத்தைச் சுதந்திரமாகக் கட்டவிழ்த்துவிடும் கடவுள் மிருகம் நந்து. கமல்ஹாசன் என்ற நடிகனின் உச்சபட்ச ஆற்றல் வெளிப்பட்ட கதாபாத்திரம் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் உலாவந்த நந்தகுமாரன்தான். நல்லவன், தீயவன் ஆவதென்பது - காலமும் சந்தர்ப்பமும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டுத் தேர்ந்தெடுப்பதுதான் நன்மையும் தீமையும்; சிறையின் அந்தப் பகுதியிலிருந்து நந்து, தன் தம்பி விஜயிடம் இதைச் சாதாரணமாகச் சொல்லும்போது அவனது ஒட்டுமொத்த உருவாக்கத்துக்கும் ஒரு பின்னணி கிடைத்துவிடுகிறது. ‘நந்தகுமாரா..’ என்ற கமல்ஹாசனின் அந்தக் கட்டைக் குரல் எப்போதைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

குழந்தைமையும் முரட்டுத்தனமும்

* குணா

‘பராசக்தி’யில் நாயகனின் பெயர் குணசேகரன். இன்னும் அகலாத குழந்தையின் களங்கமின்மையையும் முரட்டுத்தனத்தையும் சேர்த்து வெளிப்படுத்துபவன் குணா. அவனைப் பொறுத்தவரை திருமணம் என்பது உண்மையிலேயே வானகத்தில் நடப்பது.

அதைத் திட்டமிட்டுக்கொண்டு, முகச்சவரம் செய்வதற்காக அவன் போகும் சலூனில் திருமணம் என்ற ஏற்பாட்டையே கேலிசெய்யும் சந்திரபாபுவின் பாடல் ரேடியோவில் ஒலிக்கிறது. கல்யாணம் என்று தொடங்கும் அந்தப் பாடல் சந்திரபாபுவின் த்வனியிலேயே கல்யாணத்தை முழுக்கவும் கேலி செய்துவிடுகிறது. அப்போது கமல்ஹாசனின் முகத்தில் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி விரல்களால் செய்யும் நர்த்தனத்தில் கமல்ஹாசனின் குழந்தைமை வெவ்வேறு விதமாக வெளிப்படும்.

தோற்ற கலைஞன்

* சலங்கை ஒலி

ஏழைக் குடும்பத்தில் பிறந்த, குச்சிப்புடி, கதக், பரதநாட்டியம் மூன்றிலும் தேர்ச்சிகொண்ட கலைஞன் பாலகிருஷ்ணன். சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் வெற்றியைத் தொலைத்து புகழின்மையின், புறக்கணிப்பின் இருட்டில் போதையின் மடியில் சரணடைந்து மரணமடையும் கதாபாத்திரம்.

‘சலங்கை ஒலி’ படத்தின் தொடக்கத்தில் இளம் நாட்டியக் கலைஞர் சைலஜாவிடம், எப்படி நடனமாட வேண்டுமென்று ரௌத்திரம் கொண்டு ஆடி நிகழ்த்திக் காண்பிப்பது, தோற்ற கலைஞனின் அத்தனை நிராசை உணர்வுகளையும் மீறி அவனுடைய கம்பீரத்தைக் காண்பிக்கும் காட்சி.

சமூகப் போராளி

* சத்யா

சூழ்நிலைகளின் அழுத்தம் தாளாமல் நாயகன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் கேங்க்ஸ்டர் வகைப்படங்களில் இந்திய அளவிலேயே முன்னோடிக் கதாபாத்திரம் ‘சத்யா’ படத்தில் வரும் சத்யமூர்த்தி. வீட்டுக்கு வெளியே அநீதிகளைக் கண்டு பதைபதைத்து, களத்தில் இறங்கிப் போராடுபவனாக இருந்தாலும் வீட்டில் சித்தியின் வசைகளைக் கேட்டுக் கூனிக்குறுகும் இரண்டு மனநிலைகளையும் இந்தப் படத்தில் சத்யமூர்த்தி அநாயாசமாகச் சாதித்திருப்பார்.

வேலையின்மை, இந்திய, தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் 80-களின் இறுதியில் மிஞ்சியிருந்த சமூகக் கோபத்தின் இளமைப் பிரதிநிதி சத்யா. அக்காலகட்டத்தில் இந்தியாவில் அதிகப் பயணம் செய்து கிரிக்கெட் ரசிகர்களிடையே புகழ்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திரமான விவியன் ரிச்சர்ட்ஸ், சத்யமூர்த்தியின் சற்றே முடிவளர்ந்த மொட்டைத் தலையில் இருக்கிறார்.

காவியத்தலைவன்

* நாயகன்

கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் அநாயாசமாகச் சாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் வேலு நாயக்கர். இளம்பருவம் தொடங்கி முதுமை வரை, தமிழ் நினைவில் இன்னும் பலகாலம் வாழப்போகும் கதாபாத்திரம். தன்னையும் தன் நண்பரும் ஊழியருமான டெல்லி கணேஷையும் கேலிசெய்யும் குழந்தைகளைச் செல்லமாகத் துண்டால் துரத்திய அதே இடத்தில் வளர்ந்த மகள், உலகமே பயம்கொள்ளும் தன் தந்தையை அவமானப்படுத்துகிறாள்.

அவருடைய நண்பரையும் அவமானப்படுத்துகிறாள். அவரது குற்றப் பின்னணியை விமர்சிக்கிறாள். அப்போதும் தன் கண்ணுக்கு முன்னர் கைக்கெட்டிய தூரத்தில் அருமையாக விளையாடிக்கொண்டிருக்கும் பேரனைக் கூடக் கொஞ்ச முடியாமல் தன் அன்பையும் வெளிப்படுத்த முடியாமல் மகள் வீட்டிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு இந்திய, தமிழ் தந்தையைப் பிரமாதமாக வெளிப்படுத்திவிடுவார் வேலு நாயக்கர்.

ஆதித் தமிழன்

* விருமாண்டி

பேத்தியாள் வளர்த்த முரட்டுச் செல்லப் பிள்ளையாக, தமிழ்க் கிராமத்தின் சகல புழுதிகளிலிருந்தும் எழுந்த கதாபாத்திரம் விருமாண்டி. அன்பு, குரோதம், வன்மம் அத்தனையையும் நாகரிகமாக வெளிப்படுத்தாத தமிழ் குலதெய்வங்களின் சாயல் கொண்டவன்.

படத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும்போதே ஜல்லிக்கட்டுக் காளையைப் போல, துள்ளிக்குதித்து அறிமுகமாகும் விருமாண்டி, தன் பாட்டியைப் புதைக்கப் போகும்போது அந்தக் குழியில் விழுந்து அழும்போது தமிழ்க் குணம் ஒன்றை ஏற்றிவிடுகிறான்.

சரித்திரத்தின் ரணம்

* ஹேராம்

நடிகனாக மட்டுமல்ல; ஒரு இயக்குநராக கமலுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவுக்கும் மிக முக்கியமான படைப்பு ‘ஹேராம்’. இந்து-முஸ்லிம் கலவரத்தில் தனது மனைவியை இழந்த தொல்லியல் ஆய்வாளன் சாகேத ராமன், காந்தியைக் கொல்வதற்காக கோட்சேயைப் போலக் கிளம்புகிறான்.

பின்னர் காந்தியின் அகிம்சையைப் புரிந்துகொள்கிறான். மதக் கலவரங்களையும், தேசப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஹேராம்’ல் நண்பன், காதலன், அன்புக் கணவன், பழி தீர்ப்பவன், சமாதானம் அடைபவன் எனப் பலமுகம் காட்டுபவன் சாகேத ராமன்.

அழகிய கிழவி

* அவ்வை சண்முகி

அவ்வை சண்முகி என்ற கதாபாத்திரத்தை, காதல் மன்னன் ஜெமினிக்குச் செய்யப்பட்ட மரியாதை என்றே சொல்லிவிடலாம். அன்பான தாய், மரியாதையான மனுஷி, அத்தனை வயதிலும் கிழவர் ஜெமினி கணேசனை சண்முகி என்று உபாசிக்கத் தூண்டும் காதலி என அவ்வை சண்முகி எடுத்த அவதாரம் அரிதானது. ஜெமினி தொடங்கி மணிவண்ணன் வரைக்கும் கணக்கேயில்லாமல் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் அவர் வெளிப்படுத்தும் அல்லலும் தவிர்ப்பதற்குச் செய்யும் சாமர்த்தியங்களும் சிரிக்கவைத்துக் கொண்டேயிருக்கும்.

கைவிடப்பட்ட கோமாளி

* அபூர்வ சகோதரர்கள்

சாப்ளினின் ‘சர்க்கஸ்’, ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படங்களைப் பார்க்கும்போதுதான், கோமாளியின் வலி என்னவென்பது புரியும். எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துபவன்; ஆனால், அந்த மகிழ்ச்சிக்காக நினைவு கூரப்படாதவன் தான் கோமாளி என்பதை சாப்ளின் உணர்த்தியிருப்பார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், சர்க்கஸ் குள்ளனான அப்புவிடம் வெளிப்படும் சோகம் கோமாளி யுடையதுதான்.

மௌனச் சித்தன்

* பேசும் படம்

இந்திய சினிமாவில் மௌனப்பட யுகம் முடிவடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட உரையாடலே இல்லாத முதல் முழுநீளப் படம் இது. வேலையற்ற வாய்ப்பு வசதிகளற்ற ஓர் ஒண்டுக்குடித்தன பிரம்மசாரி உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். அதுவும் லாட்டரி போலக் கிடைக்கிறது. ஆனால், அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன என்பதை அமைதியாகச் சொல்லும் படம்.

ஒரு கைவிரலுக்குள் நடிகர்களை அடக்கிவிடலாம். பெயரே அற்ற அந்த நாயகன் தினசரி பார்க்கும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு மரணம் நேர, அவன் சேர்த்து வைத்த பணம் பறக்கும் காட்சியில் கமல்ஹாசன் படத்தின் மொத்தச் செய்தியையும் தன் முகத்தில் வெளிப்படுத்திவிடுவார்.

அவன் வாழ்க்கையில் மந்திர ரோஜாவாக வெளிப்படும் காதல் அமலாவுடையது. சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன், இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் சேர்ந்து செய்த இந்த ரசவாதத்தை இந்தத் தலைமுறையினர் பெரும்பாலும் பார்ப்பதற்கு வாய்க்கவேயில்லை.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
டிஜிட்டல் ஓவியங்கள்: ஏ.பி.ஸ்ரீதர்

தசாவதாரம்சொந்தமான ஆளுமைகதாபாத்திரம்சுயம்ஆளவந்தான்குணாசலங்கை ஒலிசத்யாநாயகன்வேலையின்மைஇந்தியதமிழக அரசியல்விருமாண்டிஹேராம்பத்து கதாபாத்திரங்கள்

You May Like

More From This Category

More From this Author