

‘கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழாவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது சென்னை நேரு ஸ்டேடியம். விழாவுக்கான அழைப்பிதழே விழா குறித்த எதிர்பார்ப்பை எகிறவைத்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் திரையுலகினர். ‘கமல் 60’ விழா அழைப்பிதழ்... கமலோவியம்.
“புதுசுபுதுசா ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கறது கமல் சார் ஸ்பெஷல். அப்படி புது கெட் அப் போட்டதுமே அவரை ரசிச்சு ரசிச்சு வரையறது என்னோட ஆசை’’ என்று சொல்லும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதருக்கு சொந்த ஊர் காரைக்குடி அருகில் உள்ள நேமத்தான்பட்டி.
இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா, பார்த்திபன், உலக அறிஞர்கள், தலைவர்கள் எனப் பலரையும் வரைந்துகொண்டே இருப்பதுதான் ஏ.பி.தருக்குப் பொழுதுபோக்கு, தொழில், ஆர்வம், லட்சியம் எல்லாமே.
“ஏற்கெனவே கமல் 50 விழாவின்போது, ஐம்பது விதமான கமல் ஓவியங்களை வரைந்து அவரிடம் கொடுத்தேன். அவர் மட்டும் அல்ல... திரைத்துறையினர் பலரும் வியந்துபோனார்கள். பிறகு பல பத்திரிகைகளில் அந்த ஓவியங்கள்தான் கமல் குறித்து எழுதப்படும் கட்டுரைகளை அலங்கரித்தன.
‘களத்தூர் கண்ணம்மா’ படம் வெளியான, 60 - ம் ஆண்டு இது என்று தெரிந்ததில் இருந்தே மீண்டும் கமலை வரையத் தொடங்கிவிட்டேன். அறுபது விதமான கமலின் ஓவியங்கள். நடுவே நடுநாயகமாக ‘இந்தியன்’ தாத்தா கமல். அருகில் ரஜினி. அதேபோல், அறுபது கமல், நடுவில் ‘இந்தியன்’ தாத்தா கமல். அருகில் அஜித், அதேபோல் விஜய், இப்படி இளையராஜா, இயக்குநர் ஷங்கர் என்று ஒவ்வொரு அறுபது ஓவியங்களுக்கு நடுவிலும் கமலுடன் இன்னொரு பிரபலத்தையும் வரைந்தேன்.
கமல் சாரிடம் காட்டியதும்... ஓவியங்களை ரொம்பநேரம் பார்த்தபடியே இருந்தார். ‘சீக்கிரமா வரைஞ்சு கொடுங்க. இதுதான் இன்விடேஷன்’ என்றார். எனக்கு வியப்பாகவும் அதேநேரம் ஆனந்த அதிர்ச்சியாகவும் இருந்தது.
அதாவது ஒவ்வோர் அழைப்பும், நாலரை அடி அளவில் இருக்கும். சட்டமிடப்பட்ட இந்த அழைப்பை, சுவரில் மாட்டி வைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கான்செப்ட், ஓர் அழைப்பிதழாகவே வரும் என்றெல்லாம் தெரியாது எனக்கு.
இப்படித்தான் திடீர் திடீரென ஏதாவது தோன்றும். அவையெல்லாம் கமலோவியமாகத் தூரிகை வழியே வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால், ஓவியன் என்பதையெல்லாம் விடுங்கள். நான்... கமல் ரசிகன்! கமல் 75, கமல் 100 என்றெல்லாம் வரைய வேண்டிய கடமைகள் காத்துக்கொண்டிருக்கின்றன’’ என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.