

சுமன்
பரபரப்பான வழக்கு விசாரணைகளில் சிக்கும் அப்பாவிகள் குறித்த மற்றுமொரு உண்மைக் கதை, ‘ரிச்சர்ட் ஜூவல்’ என்ற திரைப்படமாக வெளியாகிறது.
1996, அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளின் மத்தியில், தீவிரவாதிகளின் தொடர் வெடிகுண்டு முயற்சி தடுக்கப்பட்டது. இருவர் பலியாகவும் நூற்றுக்கும் மேலானோர் காயமடையவும் காரணமான முதல் குண்டு வெடிப்பு தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு பலரைக் கைதுசெய்து விசாரித்தது. ஒரு சில அவசரக் குடுக்கை ஊடகங்கள் சுமத்திய பழியால், அப்பாவி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவர், குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது பாதுகாப்புப் பணியிலிருந்த ரிச்சர்ட் ஜூவல் என்ற காவலாளி. அட்லாண்டா நூற்றாண்டு பூங்காவிலிருந்த வெடிகுண்டு பற்றி எச்சரிக்கை விடுத்த ரிச்சர்ட் மீதே ஊடகங்கள் சந்தேக சேற்றை வாரி இறைத்தன.
அதில் எஃப்.பி.ஐ அவரையும் கைது செய்தது. மிகுந்த மன உளைச்சலில் தவித்த ரிச்சர்ட், தனது வழக்கறிஞரின் உதவியுடன் சிறையிலிருந்து மீண்ட கதை பின்னர் கட்டுரைகளாக வெளியாகின. அப்படியான கட்டுரைகளில் ஒன்றை அடிப்படையாக வைத்து ‘ரிச்சர்ட் ஜூவல்’ திரைப்படம் உருவாகி உள்ளது.
ட்ரூ க்ரைம், மிஸ்டிக் ரிவர், சல்லி உட்பட, அப்பாவிகள் சந்தேகத்துக்கு இரையாகும் கதைக்களன்களைத் திரைப்படமாக்கிய மூத்த திரைக்கலைஞரான க்ளின்ட் ஈஸ்ட்வுட், ‘ரிச்சர்ட் ஜூவல்’ படத்தையும் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
லியனார்டோ டிகாப்ரியோ தயாரிப்பில் இணைந்துள்ளார். ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் பால் வால்டர் நடிக்க, அவருக்கு உதவும் வழக்கறிஞராக, திரைக்கதைக்கு அடிப்படையான கட்டுரையை எழுதிய மேரி பிரன்னர் தோன்றுகிறார். சாம் ராக்வெல், கேதி பேட்ஸ், ஒலிவியா வைல்ட் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். ரிச்சர்ட் ஜூவல் திரைப்படம் பல்வேறு நாடுகளிலும் டிசம்பர் 13 அன்று வெளியாகிறது.