Published : 08 Nov 2019 11:58 am

Updated : 08 Nov 2019 11:58 am

 

Published : 08 Nov 2019 11:58 AM
Last Updated : 08 Nov 2019 11:58 AM

சிவந்த மண் 50 ஆண்டுகள்: சிவாஜிக்கு ஒரு பிரம்மாண்டம்!

sivandha-mann

முரளி ஸ்ரீநிவாஸ்

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நடிகரும் புதுமை இயக்குநரும் ஆக்‌ஷன் திரைப்படம் ஒன்றில் ஒன்றாக இணைந்தனர். அவர்கள் இருவருமே அதிகம் பயணப்பட்டிராத பாதையில் கைகோத்தபோது தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்தது ஓர் கேளிக்கைக் காவியம். 1969 நவம்பர் 9-ல் வெளியாகி 50 வருடங்களை நிறைவு செய்து பொன்விழா காணும் அந்தப் படம் ‘சிவந்த மண்’. நடிகர் திலகம் சிவாஜிக்கு ஆக் ஷன் பாதையை பாலாஜி திறந்து வைக்க, ராமண்ணா இன்னும் கொஞ்சம் செப்பனிட்டார். அதை ‘சிவந்த மண்’ மூலமாக ராஜபாட்டையாக விரிவாக்கம் செய்தார் இயக்குநர் ஸ்ரீதர்,

உடைப்பெடுத்த ஆறு

சமூகப் படங்களில் பிரம்மாண்டம் என்பது ‘சிவந்த மண்’ணிலிருந்து தொடங்கியது. படத்தின் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட, எஞ்சிய காட்சிகளைப் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைத்துப் படமாக்கினார்கள். எகிப்தின் பிரமிடை மிகப் பெரிய அளவில் வடிவமைத்து ‘பட்டத்து ராணி’ பாடலுக்கான அரங்கம் அமைக்கப்பட்டது.

போர்த்துக்கீசிய கப்பலின் உள்வடிவம், மதுபானக் கடைக்குப் பின்புறமாகப் புரட்சிக்காரர்கள் தங்கும் பாழடைந்த மண்டபம், மதுபானக் கடையையும் மண்டபத்தையும் இணைக்கும் ஆறு, மன்னரின் அரண்மனை, உயர் காவல் அதிகாரியின் வீடு எனப் பிரம்மாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டன. மிக முக்கியமாக, வாஹினி ஸ்டுடியோவில் ஆறு செட்டுக்காக பிரம்மாண்டத் தொட்டிகள் கட்டப்பட்டுத் தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில் தொட்டியில் உடைப்பெடுத்தது.

தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த இரண்டு லட்சம் கேலன் தண்ணீர் ஸ்டுடியோ முழுக்கப் பரவி, வடபழனி சாலை முழுவதும் ஓடியது. மீண்டும் இரவு பகலாகத் தண்ணீர் நிரப்பி செயற்கை ஆறு உருவாக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடந்தது அன்றைய நாளிதழ்களில் செய்தியானது.

திருப்பங்களிலும் பிரம்மாண்டம்

காட்சியமைப்பில் மட்டுமல்ல; திரைக்கதையில் காட்சிக்குக் காட்சி விரவிக் கிடந்த திருப்பங்களைக் கண்டும் பிரம்மாண்ட உணர்வில் திளைத்தார்கள் ரசிகர்கள். கடலில் நீந்திச் சென்று போர்ச்சுக்கீசிய கப்பலுக்கு வெடிகுண்டு வைக்கும் காட்சி பரபரப்பின் உச்சம். ரயிலுக்கு குண்டு வைக்க பாலத்தின் இரும்புத் தூண்களின் மேல் நடக்கும்போது கால் தவறுகையில் தலைக்கேறும் பதற்றம்.

‘பட்டத்து ராணி’ பாடலில் பதினைந்து சவுக்கடிகளுக்குப் பிறகு வில்லனைச் சுடுவது என்ற திட்டத்துக்கும் அதே நேரத்தில் அரபி வேடத்தில் இருப்பவர் புரட்சி வீரன் பாரத் என்று தெரிந்து திவான் அவரைச் சுடத் தயாராகும்போதும் ரசிகர்கள் கிறுகிறுத்துப் போனார்கள். கிளைமாக்ஸில் பறக்கும் பலூனில் நடக்கும் சண்டைக்காட்சியில் கத்தியால் குத்துப்பட்டவர் யார் என்ற தவிப்பையும் உருவாக்கி ரசிகர்களை இருக்கையின் நுனிக்குச் கொண்டுவந்தார்கள்.

புரட்சி வீரர்கள் மலையின் முகட்டில் கூடியிருக்கும்போது ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் அவர்களை அழிக்க முயற்சி நடக்கும் காட்சியில் ரசிகர்கள் உறைந்தே போனார்கள். ஹெலிகாப்டர் வழியான தாக்குதலிலிருந்து தப்பிக்க நாயகன், நாயகி இருவரும் குழியில் குதிக்கும் காட்சியில் பதைபதைத்துப்போனார்கள்.

இந்தக் காட்சியில் டூப் இல்லாமல் நடித்த சிவாஜி நூலிழையில் உயிர் தப்பியது அன்றைய பரபரப்புச் செய்தி. வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளில், பாரிஸ் நகரின் ஈபிள் டவர், இத்தாலியின் ரோம், ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கும் விளையாட்டு, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலை என்று அதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத இடங்கள் காட்சிகளாக விரிந்தபோது அந்த நாடுகளுக்குப் போய்வந்த உணர்வைக் கொடுத்தன.

ஆக்‌ஷனும் நடிப்பும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் லட்சியத்தை வென்றெடுக்கும் புரட்சி வீரனாகத் தனது உடல்மொழியை வடிவமைத்திருப்பார். சண்டைக் காட்சிகளில் சிரத்தை தெரியும். குறிப்பாக, சிறையில் அடைக்கப்படும்போது கால்களால் முன் சுவரை உதைத்துத் திரும்பித் தாக்கும் காட்சிக்குத் திரையரங்கில் ஆரவாரம் அலையாக எழுந்தது நினைவில் இருக்கிறது.

ஆக்‌ஷனில் மட்டுமல்ல; அவரின் நடிப்பை ரசிக்க வரும் ரசிகனையும் திருப்திப்படுத்தி அனுப்பி வைத்தார். போலீஸ் அதிகாரியான தந்தையிடம் "பாராட்டு வார்த்தைகளில் அல்ல... செயல்களில் வேண்டும்" என்று கூறும் காட்சி, தன் திட்டம் தோல்வியடைய, தனது தாய்தான் காரணம் என்று தெரிந்ததும் வார்த்தை வராமல் தடுமாறித் தவிக்கின்ற தருணம், சிறையில் அடைக்கப்பட்ட தந்தையைத் தப்பிச் செல்ல மாறுவேடத்தில் சென்று அவரிடமே அடி வாங்கி, அவர் சென்றவுடன் புன்னகைப்பது, தன்னை அடையாளம் கண்டுபிடிக்க திவான் தன் தாயைக் கொடுமைப்படுத்த, கையறு நிலையில் அதைக் கண்ணீரோடு காணும் தருணம்-இப்படி நடிப்புக்கு வாய்ப்பிருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் தனக்கேயுரிய நடிகர் திலக முத்திரையை நச்சென்று பதித்துவிட்டிருந்தார் சிவாஜி.

சர்வாதிகாரி திவான் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருப்பார் நம்பியார். தான் வரும் ஐந்து காட்சிகளில் அழுத்தமாக மனத்தில் பதிவார் முத்துராமன். ‘சித்ராலயா’ கோபு, சி. வி. ராஜேந்திரன், எடிட்டிங் சங்கர் போன்ற தன் குழுவினரின் முழு ஒத்துழைப்போடு புத்திசாலித்தனமான பரபரப்பான நகர்வுகள் என்று திரைக்கதையை அமைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர். வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் படமாக்கப்பட்ட காட்சிகளைப் பிரம்மாண்டமான முறையில் சித்தரித்துக் காட்சியாக்கியவர் ஒளிப்பதிவாளர் என்.பாலகிருஷ்ணன்.

‘ஒரு ராஜா ராணியிடம்’, ‘பட்டத்து ராணி’, ‘பார்வை யுவராணி கண்ணோவியம்’, ‘ஒரு நாளிலே, சொல்லவோ’ போன்ற தேன் சொட்டும் பாடல்கள், கதையோட்டத்தின் வேகத்தை மேலும் கூட்டிய பின்னணி இசை இரண்டையும் வடிவமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், தர் படங்களின் அடர்த்தியான கதை, பொழுதுபோக்குத் தன்மை ஆகிய இரு அம்சங்களையும் ரசித்து இசையமைத்தது இந்தப் படத்துக்குச் சற்று அதிகமாகவே அமைந்துபோனது.

‘சிவந்த மண்’ படத்தின் வெற்றியைப் பற்றிப் பொதுவெளியில் உலவும் சில தவறான புரிதல்களைச் சரிசெய்ய இது பொருத்தமான தருணம். தமிழகத்தில் வெளியான 32 திரையரங்குகளிலும் 50 நாட்கள் ஓடியது. 9 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ‘சிவந்த மண்’ சென்னையில் அதிகபட்சமாக 21 வாரங்கள் ஓடி நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களின் பட்டியலில் சேர்ந்தது.

‘சிவந்த மண்’ கதைக்கு ‘தர்த்தி' என்று தலைப்பிட்டு, ராஜேந்திரகுமார் - வஹீதா ரெஹ்மான் நடிக்க இந்தியிலும் ஒரே நேரத்தில் படமாக்கினார் இயக்குநர் தர். நம்பியார் கதாபாத்திரத்தில் இந்தி வில்லன் நடிகர் அஜித் நடித்தார். நாயகன் ராஜேந்திரக்குமாரின் நண்பன் ஆனந்த் கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்தார். இசைக்கு
இங்கே எம்.எஸ்.வி என்றால் அங்கே சங்கர் - ஜெய்கிஷன்.

தொடர்புக்கு: t.murali.t@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


சிவாஜிசிவந்த மண் 50 ஆண்டுகள்உடைப்பெடுத்த ஆறுதிருப்பங்கள்ஆக்‌ஷன்சமூகப் படங்கள்சிவந்த மண்பிரம்மாண்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author