Published : 08 Nov 2019 11:33 am

Updated : 08 Nov 2019 11:33 am

 

Published : 08 Nov 2019 11:33 AM
Last Updated : 08 Nov 2019 11:33 AM

வாழ்வு இனிது: வீடு தேடிவரும் கருப்பட்டி காபி!

karupatti-coffee

என்.சுவாமிநாதன்

குமரி மக்களுக்கும், கருப்பட்டி காபிக்கும் மிக நெருக்கமான தொடர்புண்டு. முந்தைய தலைமுறையின் விடியலில் கருப்பட்டி காபியே பிரதானம். காலவோட்டத்தில் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவோர் படையெடுக்கும் ஆர்கானிக் கடைகளுக்குள் சங்கமித்து, அவர்களுக்கான உணவுப் பொருளாகச் சுருங்கிப்போனது கருப்பட்டி.
இப்படியான சூழலுக்கு மத்தியில் பாரம்பரியமான கருப்பட்டி காபியைக் கையில் எடுத்து கவனிக்க வைக்கின்றனர் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெர்வின் -ஜெனீஸ் சகோதரர்கள்.

பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் இருவரும் சேர்ந்து, கருப்பட்டி காபி கடையை நிர்வகிக்கின்றனர். நாகர்கோவில், செட்டிகுளம் பகுதியில் கீழ்த்தளத்தில் டீக்கடை, மேல்தளத்தில் கட்டிடங்களுக்கு வரைகலை இட்டுத் தரும் ‘சிவில் இன்ஜினீயரிங் கன்சல்டேஷன்’ அலுவலகம் என நிர்வகிக்கும் இவர்களது தேநீர்க் கடையிலிருந்து ஆன்லைன் வழியே வீடு தேடி வருகிறது பிரியமான கருப்பட்டி காபி.

ஸ்விக்கி, சுமோட்டா நிறுவனங்களின் ஊழியர்கள் காத்து நின்று வாங்கிச்செல்ல இவர்களது கருப்பட்டி காபி நாகர்கோவிலில் நகர்வலம் வருகிறது. இதுகுறித்து ஜெர்வினிடம் பேசியபோது, “சின்ன வயசுல, தூங்கி எழுந்து, முகங் கழுவி, வாய் கொப்பளிச்சுட்டு வந்தா, அம்மா ஒரு டம்ளர் நிறைய கருப்பட்டிக் காபி கொடுப்பாங்க. உறவுகள், நண்பர்கள் யார் வந்தாலும் எங்க வீட்ல எப்பவும் கருப்பட்டி காபிதான் முதல் விருந்தோம்பல்.

ஒருகட்டத்தில் அது நின்னுபோச்சு. எனக்கு 25 வயசு ஆகுது. ஆனா, என்கூட இருக்குற நண்பர்களுக்கே கருப்பட்டி காபி குடிச்ச அனுபவம் தெரியல. எதையும் வித்தியாசமா பண்ணணுங்கிறது எனது ஆசை. அதான் கருப்பட்டி காபிக்கு முதல் மரியாதை கொடுத்து டீக்கடை போட்டேன். ‘பொறியியல் படிச்சுட்டு டீக்கடை போட்டிருக்கிறே?’ என்று அதிர்ச்சி ஆனாங்க.

பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது அவை தவிர வாழ்க்கையில் முன்னேற எந்தத் தொழிலும் செய்யலாம். இதோ மாடியிலேயே எங்க டிசைனிங் ஆபீஸ் இருக்கு. டீக்கடைக்கு வர்றவங்க மாடியில் என்ன ஆபீஸ் இருக்குன்னும் கேட்குறாங்க. வேலை இல்லைன்னு புலம்புறதைவிட இப்படி மாத்தி யோசிச்சு அசத்தணும்கிறதுதான் என்னோட கொள்கை.

டீக்கடையாலத்தான் நாங்க படிச்ச படிப்புக்கான ஆபீஸ் மாடியில் இருக்குறதே வெளியே தெரிஞ்சுது. இதோ இப்போ ஸ்விக்கி, சுமோட்டோ ஆன்லைன் செயலி வழியாக எங்க டீக்கடை ரொம்பவே பிரபலமாகிடுச்சு. குமரி மாவட்டத்திலேயே ஆன்லைன் விநியோகத்தில் இருக்கும் ஒரே டீக்கடை இதுதான். ஆன்லைனில் ஆர்டர் பண்ணினான ஆவி பறக்கக் கருப்பட்டி காபி விற்பனை பண்றது அநேகமாக நாங்கதான்னு நம்புறோம்.

இதெல்லாம் ஒருபக்கம் பெருமையா இருந்தாலும், நம்ம பாரம்பரியமான கருப்பட்டி காபிக்கு நிலைமை இப்படி ஆகிருக்கேன்னு வருத்தமாகவும் இருக்கு. மீண்டும் அந்தக் கலாச்சாரத்தைப் பரவலாக்க நிறையப் பேரு அதைக் குடிக்கணும். அது தர்ற கால்சியம் சத்து, சுவாசக் குழாய்க்கு அது தர்ற பாதுகாப்புன்னு அதோட அருமை, பெருமைகளைத் தெரிஞ்சுக் கணும். அதுக்காகவே தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிக்குப் போய் தரமான கருப்பட்டியை வாங்கி வந்துதான் காபி போடுறோம்” என்கிறார்.

வாழ்வு இனிதுகருப்பட்டி காபிKarupatti Coffeeகாபிகுமரி மக்கள்பொறியியல் பட்டதாரிகள்

You May Like

More From This Category

More From this Author