

அரண்மனை படத்தில் ஹன்சிகாவின் பேய் அவதாரத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது மீண்டும் ‘அரண்மனை 2’ படத்திலும் அவரை பேயாக்கிவிட்டார் இயக்குநர் சுந்தர்.சி. இந்தப் படத்தில் புதிதாக பேய் வேடம் போட வந்திருப்பவர் த்ரிஷா. படத்தின் முதல் பாதியில் ஹன்சிகாவுக்கும், இரண்டாம் பாதியில் த்ரிஷாவுக்கும் இடம்கொடுத்திருக்கிறாராம் இயக்குநர். ஆனால் ஹன்சிகாவைவிட த்ரிஷாவுக்குத்தான் படத்தில் அதிக முக்கியத்துவம் என்கிறது சுந்தர்.சி வட்டாரம்.
அரண்மனை படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த ராய் லட்சுமி மட்டும்தான் பேய் வேஷம் போடாமல் இருந்தார். தற்போது அவரையும் அழகான பேய்களின் பட்டியலில் கொண்டுவந்துவிட்டார் அறிமுக இயக்குநர் வடிவுடையான். ஸ்ரீ காந்த் ராய் லட்சுமி நடிக்கும் ‘சவுகார்பேட்டை’ படத்தில் லட்சுமி ராயைக் கண்டு ரசிகர்கள் மிரளப்போவது உறுதி என்கிறார் இயக்குநர். காரணம் தனது காதலியின் உடம்பில் புகுந்த பேயை வைத்து எதிரிகளைப் பழிவாங்குகிறாராம் நாயகன். இதனால் ஸ்ரீ காந்தையும் இதில் புதிய கோணத்தில் பார்க்கலாம் என்கிறார்.
இதுவொரு பக்கம் இருக்க, குறைந்த பட்ஜெட்டில் மிரட்டலான ஒரு பேய்ப் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறாராம் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் நாயகி ஹன்சிகா. கதையைக் கேட்டு மிரண்டுபோய் தனது சம்பளத்தை பாதியாகக் குறைத்துக்கொண்டு நடித்துவருகிறாராம் இந்தப் படத்தில்.