

சுமன்
ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களையும், அவர்களுக்கு மத்தியிலான உறவுகளையும் ஆட்டுவிக்கும் பலவிதமான உணர்வலைகளைப் படம் பிடித்துக் காட்ட வருகிறது ‘வேவ்ஸ்’ என்ற திரைப்படம்.
ஆப்பிரிக்க அமெரிக்க குடும்பம் ஒன்றை மையமாக் கொண்டு கதை சுழல்கிறது. டைலர் வில்லியம்ஸ் என்ற துடிப்பான இளைஞன் படிப்புடன் மல்யுத்த விளையாட்டிலும் ஆர்வமாக இருக்கிறான். கண்டிப்பான தந்தை, உற்ற தங்கை ஆகியோருடன் வளர்ப்பு தாயும் அவன் மீது பாசத்தை கொட்டுகிறாள். தனக்கு வந்த உடல் பாதிப்பை குடும்பத்தினரிடமிருந்து மறைப்பதுடன், மல்யுத்தப் பயிற்சிகளையும் தொடர்கிறான்.
வலி நிவாரணியாக முறையற்ற உபாயங்களை உபயோகித்ததில், அவனுக்கு பெரியளவில் பாதிப்பு உண்டாக்குகிறது. இதற்கிடையே காதலிக்கும் அவனுக்கும் இடையே ஓர் அந்தரங்கப் பிரச்சினை எழுகிறது. இந்தச் சூழலில் எதிர்பாராவிதமாக நிகழும் ஒரு மரணம் அவனைச் சிறையில் தள்ளுகிறது.
சிற்றலையாய் சிலிர்ப் பூட்டுவதும் பேரலையாய் அடித்து நொறுக்குவதுமாய் உணர்வுகளின் ஓயா அலையடிப்புக்கு அந்தக் குடும்பத்தினர் ஆளாகின்றனர். பின்னர் மனித இனத்துக்கேஉரிய கருணை ஊறிய நேசம், ஆத்மார்த்த மன்னிப்பு ஆகிய உன்னத உணர்வுகளால் மீண்டு வருகிறார்கள். இயல்பான நதியின் ஓட்டமாக நகரும் கதைக்குத் தோதாக, தெற்கு ஃபுளோரிடாவின் கவின்மிகு இயற்கையை காட்சிகளின் பின்னணியில் படமாக்கி உள்ளனர். இசைக்காகவும் பேசப்படும் ‘வேவ்ஸ்’ திரைப்படம், பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றுப் பல விருதுகளைப் பெற்றுள்ளது.
எழுதி இயக்கி இருப்பதுடன், தயாரிப்பு, படத்தொகுப்பில் இணைந்திருக்கிறார் எட்வர்ட் ஸல்ட்ஸ். கெல்வின் ஹாரிசன், லுகாஸ் ஹெட்ஜஸ், டெய்லர் ரஸ்ஸல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘வேவ்ஸ்’ திரைப்படம் நவம்பர் 15 அன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகிறது.