

யுகன்
கர்னாடக இசை மேடைகளில் மோர்சிங் வாசிக்கும் பெண் கலைஞர் பாக்யலஷ்மி கிருஷ்ணா. புகழ்பெற்ற லய மேதையும் மோர்சிங் கலைஞருமான பீமாச்சாரின் மகள். தன்னுடைய மகன்கள் துருவராஜ், ராஜசேகர் ஆகிய இருக்கும் பயிற்சியளித்தது போலவே தன்னுடைய மகள் பாக்யலஷ்மிக்கும் பயிற்சியளித்தார் பீமாச்சார்.
ராமாச்சாரின் சிந்தனையில் உருவான குழு ‘கர்நாடக மகிளா லய மாதுரி’. மிருதங்கம், கஞ்சிரா, கடம், தவில், கொன்னக்கோல் வாசிக்கும் பெண் கலைஞர்கள் தயாராக இருந்த நிலையில், ராமாச்சாரின் தனிப்பட்ட கவனத்துடன் பயிற்சியளிக்கப்பட்டு மோர்ஸிங் வாசிக்கும் கலைஞராக மேடையில் அமர்ந்தபோது பாக்யலஷ்மிக்கு வயது 11.
பாரம்பரியமான புதுக்கோட்டை பாணியிலான மோர்சிங் வாசிப்பை தந்தை பீமாச்சாரிடம் இருந்து கற்ற பாக்யலஷ்மி, மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இந்தியாவின் கலாச்சாரப் பண்பாட்டு மையத்தின் ஆதரவுடன், கர்நாடக மகிளா லய மாதுரி குழுவில் இடம்பெற்று, எகிப்து, அல்ஜீரியா, துனிசியா ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.
கடம் வாத்திய மேதை சுகன்யா ராம்கோபாலின் `ஸ்த்ரீ தாள தரங்’ அமைப்பின் சார்பாக உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அரிதான வாத்தியமான மோர்சிங்கை வாசித்திருக்கும் அற்புதமான கலைஞர் பாக்யலஷ்மி. தனது தந்தை பீமாச்சார், சகோதரர்கள் துருவராஜ், ராஜசேகர் ஆகியோருடன் இணைந்து பாக்யலஷ்மி மோர்சிங் தரங் நிகழ்ச்சியை ஆம்ஸ்டர்டாமில் நடந்த சர்வதேச ஜுவிஸ் ஹார்ப் திருவிழாவில் வழங்கி இருக்கிறார்.
நாமுழவு, முகச்சங்கு என அழைக்கப்படும் மோர்சிங், ஒரு தனித் தன்மையான தாளவாத்தியம். பக்கவாத்தியக் கலைஞர்களுக்கும் பாடுபவருக்கும் ஒருங்கே பக்கபலமாக இருக்கும் வாத்தியம். மிருதங்கத்தை நிழலாகத் தொடரும் மோர்சிங்கின் ரீங்காரம், கச்சேரியின் இனிமையைக் கூட்டவல்லது.
அதேநேரத்தில் லாகவமாக இந்த வாத்தியத்தைக் கையாளாவிட்டால், நாக்கில் காயம்படும் அபாயமும் உண்டு. அப்படிப்பட்ட வாத்தியத்தில் முத்திரை பதித்துவரும் பாக்யலஷ்மிக்கு இந்திரா சிவசைலம் அறக்கொடை விருதையும் இந்த ஆண்டு கொடுத்து கௌரவித்திருக்கிறார் தமிழகத்தின் முக்கியப் பெண் தொழில்முனைவோரான மல்லிகா சீனிவாசன்.