

‘மைனா’, ‘சாட்டை’ படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ் தயாரிக்கும் புதிய படத்துக்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். நடிகர் ஸ்ரீகாந்தும் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் மூலம் எளிய நாயகனாக ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் நடன இயக்குநர் தினேஷும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகிய இரு கதாநாயகிகள் இவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். “மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒருவன், சூழ்நிலையால் மனசாட்சியைத் தூக்கிவீசிய ஒருவன் என எதிரெதிர் குணாதிசயங்களைக் கொண்ட இருவர், ஒரு விசித்திரமான சம்பவப் புள்ளியில் சந்திக்கும் விளைவுகளே கதை” என்கிறார் அறிமுக இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்.
இறுதிக் கட்டத்தில் ‘லாபம்’
விஜய் சேதுபதி படங்கள் அடிக்கடி வெளியானாலும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். அவரது நடிப்பில் உருவான ‘சங்கத்தமிழன்’ தீபாவளிக்கு வெளியாக இருந்து தள்ளிப்போய்விட்டது. தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதில் விஜய்சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துவருகிறார்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “ படத்தின் தலைப்பு ‘லாபம்’ என்று இருக்கிறதே என்று பலரும் ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். இந்தப் படம் யாருக்கு லாபம், எது லாபம் என்பதைப் பற்றிப் பேசும். இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி விவசாய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. விவசாயத்தில் மிகப் பெரிய வளர்ச்சி கொண்ட நம் நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி அடிக்கடி வருவது எதனால் என்பதை என்னுடைய ஸ்டைலில் சொல்லி இருக்கிறேன்” என்கிறார் இயக்குநர்.
‘கைதி’யின் வில்லன்!
“நடிகர் கார்த்தி முப்பது நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும், ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துவிடுவேன்” என்று கூறியிருந்தார் அந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தீபாவளிக்கு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றிருக்கும் அப்படத்தில், ஹரீஷ் உத்தமன்தான் வில்லன் என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவரைப் படம் முழுவதும் ஒரு லாக்-அப்பில் அடைத்துவிட்டார் இயக்குநர். வில்லனுக்கான இடத்தை எடுத்துக்கொண்டு மிரட்டியவர் ஹரீஷ் உத்தமனின் தம்பியாக மிரட்டல் நடிப்பைக் கொடுத்திருந்த அர்ஜுன் தாஸ்.
‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகியிருக்கும் இவர், கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர். ‘கைதி’ படம் வெளிவரும் முன்பே, பிரபுசாலமன் இயக்கும் ‘கும்கி 2’, விக்னராஜன் இயக்கும் ‘அந்தகாரம்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். சினிமா கனவுக்காக, துபாயில் பார்த்து வந்த வங்கிப் பணியை உதறிவிட்டு சென்னை வந்தவர், நடிப்பு பயிற்சி எடுத்தும் சினிமா வாய்ப்புக் கிடைக்காமல் பிரபலப் பண்பலை வானொலி ஒன்றில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். அந்த வானொலி நிலையத்துக்கு பேட்டி கொடுக்கச் சென்றபோது அர்ஜுன் தாஸுக்குள் இருந்த நடிகரைக் கண்டுபிடித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
நீங்கள் இயக்காதீர்கள்!
தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான், சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் வரிசையில் இயக்குநர் விக்ரமனின் மகன் கனிஷ்கா விக்ரமனும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். பாசமும் நேசமும் இழையோடும் இசைச் சித்திரங்களைத் தந்து தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர்களின் வரிசையில் விக்ரமனின் பங்களிப்பை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை மற்ற சங்கங்களுக்கு முன்மாதிரியாக நடத்திகாட்டிய விக்ரமன், சங்கப் பொறுப்புகளில் இருந்து விலகி அமைதியாக இருந்தார். தன் மகனை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தும்விதமாக அவரது ஒளிப்படங்களைத் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார் விக்ரமன். “ டியர் விக்ரமன் சார்... உங்கள் படங்களின் சிறந்த தன்மையை உணர்ந்துகொள்ளும் அளவுக்கான பக்குவம் தற்போதைய பார்வையாளர்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன்; எனவே உங்கள் மகன் நடிக்கப்போகும் படத்தை நீங்கள் இயக்காதீர்கள். அவர் நன்றாக வருவார்.” என்று ஒரு ரசிகர் எதிர்வினை புரிந்திருக்கிறார்.
காக்கியில் கலக்கும் நந்திதா!
‘அட்டகத்தி’ படத்தில் தொடங்கி தனக்கென ஒரு நிரந்தர இடத்தைத் தக்கவைத்திருப்பவர் நந்திதா ஸ்வேதா. இவரும் பெண் மையப் படங்களில் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டார். தற்போது ‘ஐ.பி.சி.376’ என்ற படத்தில் காக்கி அணிந்து காவல் அதிகாரியாக நடித்துவரும் நந்திதா ஸ்வேதாவுக்கு, இப்படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள். டூப் இல்லாமலேயே எல்லாச் சண்டைக் காட்சிகளிலும் நடித்தாராம்.
இதனால் இருமுறை ரத்தக்காயம் பட, அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறது சண்டைக் காட்சிகளை வடிவமைத்த சூப்பர் சுப்பராயன் தரப்பு. கதை, திரைக்கதை எழுதி இந்தப் படத்தை இயக்கி வருபவர் ராம்குமார் சுப்பாராமன். “பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சஸ்பென்ஸ், ஆக்ஷன் திரில்லராக இதை உருவாக்கி வருகிறோம்” என்கிறார் இயக்குநர்.