

சுமன்
அழகும் அதிரடியுமாக மூன்று தேவதைகள் வசீகரிக்கும் 'சார்லிஸ் ஏஞ்சல்ஸ்' பட வரிசையின் மூன்றாம் திரைப்படம் அதே பெயரிலேயே வெளியாகிறது.
எழுபதுகளின் மத்தியில் அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சித் தொடர் ‘சார்லிஸ் ஏஞ்சல்ஸ்’. சார்லி என்ற பணக்காரப் புதிராளி, தனது குரல், உதவியாளன் மூலமே ஒரு புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருவார். சார்லி காட்டும் வழியில் மூன்று தேவதைப் பெண்கள் அதிரடிகளை மேற்கொண்டு காரியத்தை நிறைவேற்றுவார்கள். ஆக்ஷனும் காமெடியும் கலந்த, முழுமையான இப்பொழுதுபோக்குத் தொடரை அடிப்படையாக வைத்து, ‘சார்லிஸ் ஏஞ்சல்ஸ்’ முதல் திரைப்படம் 2000-ல் வெளியானது. 2003-ல் அதன் இரண்டாம் திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து ‘சார்லிஸ் ஏஞ்சல்ஸ்’ பின்னணியில் புதிய தொலைக்காட்சி தொடர், அனிமேஷன் தொடர், வீடியோ கேம், காமிக்ஸ் போன்றவை பிரபலமாயின. தமிழில் ஜோதிகா, லைலாவுடன் ரம்பா தயாரித்து நடித்த ‘த்ரீ ரோஸஸ்’ வரை ‘சார்லிஸ் ஏஞ்சல்ஸ்’ படத்தின் பாதிப்பு இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘சார்லிஸ் ஏஞ்சல்’ஸின் மூன்றாம் திரைப்படம் தற்போது வெளியாக உள்ளது. முதலிரண்டு படங்களின் தேவதையருக்கு வயதாகிவிட்டதால் நவோமி ஸ்காட், கிறிஸ்டன் ஸ்டூவர்ட், எலா பலின்ஸ்கா ஆகியோர் புதிய தேவதைகளாகத் தோன்றுகின்றனர். திரைக்கதை அமைத்து தயாரிப்பில் இணைந்திருக்கும் எலிசபெத் பேங்க்ஸ், திரைப்படத்தை இயக்கி இருப்பதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
சார்லியின் நிறுவனம் தற்போது தனது எல்லைகளை விரித்துக்கொண்டு உலகமெங்கும் சேவையைத் தொடங்குகிறது. இதற்காகத் துடிப்பு மிகுந்த புதிய தேவதைகள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். கணினி நுட்பத்தில் உலகை அச்சுறுத்தும் பெரும் ஆபத்தைக் களைவதற்காகப் புதிய தேவதைகள் களமிறங்குவதே மூன்றாம் சார்லிஸ் ஏஞ்சல்ஸின் கதை. புதிய சார்லிஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படம், இந்தியாவில் நவம்பர் 15 அன்று வெளியாக உள்ளது.