

இந்து தமிழ் திசை நாளிதழுடன் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில், கடந்த 35 வாரங்களாக நீங்கள் எழுதி வந்த ‘தரைக்கு வந்த தாரகை’ தொடரைத் தொடர்ந்து வாசித்து மகிழ்ந்த வாசகர்களில் நானும் ஒருவன்.
பின்னணிப் பாடகர்களும், பின்னணி பேசும் கலைஞர்கள் அதிகமாகிவிட்ட காலகட்டத்தில் திரையில் நுழைந்து, தனது சொந்தக் குரலில் பாடியும் பேசியும் நடித்தும் எழுதியும் இயக்கியும் தயாரித்தும் திரையில் ஒளிர்ந்தவர் பானுமதி. அவரது வாழ்வின் அறியப்படாத பக்கங்களிலிருந்து சமூகத்துக்கு நலம்பயக்கும் அர்த்தபூர்வமான அம்சங்களை எடுத்துக்காட்டிய உங்களின் எழுத்து போற்றுதலுக்கு உரியது. ஒவ்வொரு வாரமும் ஒரு உயரிய கருத்தைத் தொடரில் கையாண்டது எனக்குப் பிடித்தது. குறிப்பாக, கடைசித் தொடரின் அத்தியாயத்தில் கைம்பெண்ணாக நடித்தபோது, தனது காலில் அணிந்திருந்த மெட்டியை அவர் கழற்றிவிட்டு நடித்ததையும் அதன் பின்னர் அதை அவர் அணிய முடியாமல் போனதையும் கூறிய இடம், ஒரு சிறந்த திரைக்கலைஞர் வாழ்வில் எதிர்கொண்ட பெரும் சோகத்தைச் சுட்டாமல் சுட்டி வாசித்த அனைவரையும் நெகிழவைத்த பாங்கு ஓர் தேர்ந்த எழுத்தாளருக்கே உரியது.
எழுத்தாற்றல் படைத்த பானுமதியே இத்தொடரை எழுதியிருந்தால் இத்தனை கைகூடி வந்திருக்காது என எண்ணுகிறேன். இக்கட்டுரைத் தொடர், அர்த்தம் கூடிய சுவையான திரை இலக்கியமாகத் திகழும் என்பதில் எனக்கு ஐயமில்லை. எனது பாராட்டும் வாழ்த்தும் தஞ்சாவூர்க் கவிராயருக்கு உரியனவாகுக.
- பழ.நெடுமாறன், தலைவர் – உலகத் தமிழர் பேரமைப்பு
இந்து டாக்கீஸ் இணைப்பிதழின் தொடர் வாசகன் நான். அதில் ‘தரைக்கு வந்த தாரகை’ தொடர், தொடர்ந்து வியப்பூட்டியது. அஷ்டாவதானி பானுமதியின் இடத்தை எந்த நடிகையும் நெருங்க முடியாது. அவரைப் பற்றிய அறியாத தகவல்களை அருகிருந்து பெற்று, கால வெள்ளத்திடம் அவற்றைக் கொடுத்துவிடாமல் பத்திரமாக வாசகக் கடலின் கரையில் சேர்த்திருக்கிறீர்கள். எனது மனம் கனிந்த பாராட்டுகள்.
- சிவகுமார், திரைப்படக் கலைஞர்
நிஜமாகவே ஒரு தாரகையைத் தரைக்கு அழைத்து வந்த உங்களின் எழுத்து. உங்களது விவரிப்பும் மொழியும் அதில் வழிந்தோடிய உணர்வும் நெகிழவைத்துவிட்டன. தன் சொந்தத் தயாரிப்பில் ‘கானல் நீர்’ என்ற படத்தைத் தமிழ் ரசிகர்களுக்குத் தந்தார் பானுமதி. அது புரட்சிகரமான வங்காளக் கதை. என் மதிப்பீட்டில் இன்றளவும் அதுதான் சிறந்த தமிழ்ப் படம் என்பேன்.
- பேராசிரியர் தங்க ஜெயராமன்
பானுமதி எனும் தனிப்பெரும் கடலை, அதன் ஆர்ப்பரிப்போடும் அழகோடும் நம்முன் கொண்டுவந்த தஞ்சாவூர்க் கவிராயரைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. ‘பானுமதி அம்மையாரின் முன்னால் ஒற்றை ரசிகனாய் அமர்ந்து, கைதட்ட மறந்து, கண்கள் திரளக் கரைந்துகொண்டிருந்தேன் நான்’ என்று எழுதியிருந்தீர்கள். வாசகர்களாகிய நாங்களும் உங்கள் எழுத்தின் முன் மயங்கி, கலங்கி, நெகிழ்ந்து, கைதட்ட மறந்துபோய் வாசித்து முடித்தோம்.
- பா.உஷாராணி, பரமக்குடி
பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய ஒரு தொடரைத் தந்து, உங்களின் நிரந்தர வாசகன் ஆக்கிவிட்டீர்கள். உங்கள் சிறுகதைகளைத் தொடர்ந்து கட்டுரைகளையும் தேடத் தொடங்கிவிட்டேன். பானுமதியைப் போல சாதனை படைத்தவர்கள் சிலர்தான் எனினும் அடுத்து ‘கன்னடத்துப் பைங்கிளி’ சரோஜாதேவி அம்மையாரைச் சந்தித்து அவரது வாழ்வின் சிறந்த தருணங்களைப் பதிவுசெய்தால் இந்து டாக்கீஸ் வாசகர்களாக மகிழ்ச்சி அடைவோம்.
- முகமது கமால், கடையநல்லூர்
தரைக்கு வந்த தாரகை, தொடரைத் தொடர்ந்து படித்துவந்தேன். சினிமாவில் பன்முகத் திறமையை வெளிப்படுத்திய பானுமதி குறித்து அறியாத செய்திகள் பலவற்றை வாசித்ததில் மகிழ்ச்சி கொண்டேன். ரசிகர்கள் இணைந்து ஜெமினி கணேசனுக்கு 96-ம் வருடம் பொன்விழா நடத்தினோம். அப்போது ஜெமினி சொன்னார் “என்னை மேடையில் அமர்ந்து பாராட்ட வேண்டும் என்றால் திரையுலகில் இருவருக்குத்தான் அதிக உரிமையுண்டு. ஒருவர் நம்பியார், மற்றொருவர் பானுமதி அம்மா. ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைப் பெயர் சொல்லி அழைத்தவர் ஆயிற்றே. அந்த ஆளுமையை அருமையாக வெளிக்கொண்டு வந்தது உங்கள் தொடர்.
- ஜெமினி ஸ்ரீதர், நங்கநல்லூர்