

டெஸ்லா கணேஷ்
திண்டுக்கல் இடைத்தேர்தல் (1973) வெற்றி கொடுத்த உற்சாகம் எம்.ஜி.ஆரின் அடுத்தடுத்த படங்களில் வசனங்களாகவும் பாடல்களாகவும் வெளிப்பட்டன. ‘நேற்று இன்று நாளை’ தொடங்கி ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.வி. இசையமைத்த பன்னிரண்டு திரைப்படங்களும் பாடல்களுக்காக இன்றுவரை பேசப்படுகின்றன.
பல திரைக்கலைஞர்களுக்குச் சிறப்பான இசை வழங்கிக் கொண்டிருந்த எம்.எஸ்.வி., அரசியல், திரைப்படம் எனத் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். உடன் பணிபுரிந்த அத்தியாயம் மட்டுமே தனி வரலாறு.அகண்ட காவிரி நதியை ஒப்பிட்டு எம்.ஜி.ஆரை வாழ்த்தி ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்று ‘இதயக்கனி’ திரைப்படத்தில் விருத்தத்துடன் கூடிய நீண்ட பாடலைக் கொடுத்தார் எம்.எஸ்.வி. சிவாஜிக்கோ, ‘பாரத விலாஸ்’ திரைப்படத்தில், பல இந்திய மொழிகளில் இனிமையான சரணங்கள் பொருந்திய ‘இந்திய நாடு என் வீடு’ என்ற நீண்ட தேசிய ஒருமைப்பாட்டுப் பாடலைக் கொடுத்தார்.
‘அவன் தான் மனிதன்’ படத்தில் சுபபந்துவராளி ராகத்தில் ‘ஆட்டுவித்தால் யாரொருவர்’, ‘டாக்டர் சிவா’ படத்தில் கௌரி மனோகரி ராகத்தில் ‘மலரே குறிஞ்சி மலரே’, ‘பாட்டும் பரதமும்’ படத்தில் அமிர்தவர்ஷிணி ராகத்தில் ‘சிவகாமி ஆட வந்தால்’ என சிவாஜியை ராக மழையில் நனையவைத்தார் மெல்லிசை மன்னர். எம்.ஜி.ஆரின் ‘உரிமைக்குரல்’ படத்தில், இந்துஸ்தானி இசையின் இனிய பஹாடி ராகத்தில் ‘விழியே கதை எழுது’, ‘மீனவ நண்பன்’ படத்தில் மிஸ்ர சிவரஞ்சனி ராகத்தில் ‘தங்கத்தில் முகம் எடுத்து’, வலஜி ராகத்தில் ‘பொங்கும் கடலோசை’ என எம்.ஜி.ஆரை ராக அருவியில் நீராட்டினார்.
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்திலோ த்விஜாவந்தி என்ற அபூர்வமான ராகத்தில் ‘அமுதோ தமிழில் எழுதும் கவிதை’ என்ற பாடலுடன் எம்.ஜி.ஆரின் அரசியல் கனவைக் காற்றில் ஒலிக்கவிட்டு, திரையிசையில் எப்படி வேண்டுமானாலும் தன்னால் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்று காட்டியவர்.
1965 முதல் மெல்லிசை மன்னராகத் தனி இசைப் பயணம் செய்த எம்.எஸ்.விஸ்வநாதன் 1978 வரை நடிகர் திலகத்தின் 58 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக முழுநேர அரசியல் வாழ்க்கைக்குச் சென்றபின் 1985 வரை ஏழு வருடங்களில் எம்.ஜி.ஆரின் 27 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
இளையராஜாவின் வரவுக்குப் பிறகு கூடுதல் வலிமையுடன் கமல், ரஜினி போன்ற வளர்ந்துவிட்ட நட்சத்திரங்களுக்கும் பாக்யராஜ், கே.பாலசந்தர் என முத்திரை பதித்த இயக்குநர்களுக்கும் அவரவர் வேகத்துக்கு ஏற்ப இசையமைத்தவர், மிகச் சிறந்த மெலடி ஹிட்டுக்களைக் கொடுக்கத் தவறவில்லை. கர்னாடக இசைப் பாடகர்களான மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலருடன் கணக்கில் அடங்காத பக்தி இசை ஆல்பங்களைப் படைத்த எம்.எஸ்.வி, தேவாரம், திருவாசகத்தையும் மனமுருகவைக்கும் இசையில் தந்தார்.
தமிழ்த் திரைப்படங்கள் ஸ்டுடியோ முதலாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்திலும் இசைப் பணியாற்றியவர் மெல்லிசை மன்னர். பின்னர் இயக்குநர்களின் கட்டுப்பாட்டுக்குள் திரைப்படங்கள் வந்தபிறகு, இயக்குநர்கள் கொண்டாடிய இசை அமைப்பாளராகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அதன் பிறகு திரைப்படங்கள் நடிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது அவர்களுக்கே உரிய தனித்தனி இசை அடையாளங்களுடன் மெட்டு அமைத்து மெருகூட்டிய வெற்றிகரமான இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.
அவ்வகையில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.மகாலிங்கம் கே.ஆர். ராமசாமி தொடங்கி, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் வரை நான்கு தலைமுறைக் கதாநாயகர்களுக்கு இசை நாயகனாகப் பணியாற்றிய இணையில்லா இசை வரலாறு மெல்லிசை மன்னர். நான்கு தலைமுறைப் பாடகர்கள், நான்கு தலைமுறை நடிகர்கள், நான்கு தலைமுறைக் கவிஞர்கள் நான்கு தலைமுறை இயக்குநர்கள், நான்கு முதலமைச்சர்கள் என வெற்றிகரமாகப் பயணித்த எம்.எஸ்.வி. என்ற மூன்றெழுத்தின் சாதனைகள் கணக்கிலடங்காதவை.
மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் மெட்டுக்குப் பொருந்தக்கூடிய, காட்சியின் சூழலையும் கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளையும் வெளிப்படுத்தும் கவித்துவமும் எளிமையும் பொதிந்த வரிகளைத் தேர்வுசெய்வதில் அவருக்கு இருந்த ஆளுமை அபாரமானது. அதேபோல் அவருடைய பாடல்களை மிகத் துல்லியமான உச்சரிப்போடு பாடகர்கள் பாடியிருக்கும் விதம், ஒவ்வொரு பாடல் பதிவின்போதும் அவருடைய ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்தது என்பதைக் காட்டுகிறது.
பாடல் பதிவின்போதே மெட்டுக்களில் புதிய புதிய அழகிய இசை சங்கதிகளைச் சேர்த்துக்கொண்டே செல்லும் அவரது எல்லையற்ற கற்பனையை வியந்து, அனைத்துப் பின்னணிப் பாடகர்களும் வாத்திய இசைக் கலைஞர்களும் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ்த் திரை இசை வரலாற்றின் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழ், திரும்பிய பக்கங்களில் எல்லாம் எதிரொலிக்கும். அவரது இசை, தலைமுறைகள் தாண்டி இசையுலகில் என்றும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.
ஒரே பிறந்தநாள்
கேரள மாநிலம் பாலக்காட்டில் 1928-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிறந்த எம்.எஸ்.வியின் இயற்பெயர் மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன். எம்.எஸ்.வி. தனது 25-வது வயதில், 1953-ல் வெளியான ‘ஜெனோவா’ என்ற படத்துக்கு முதன் முதலாக இசை அமைத்தார். அப்படத்தின் நாயகன், எம்.ஜி.ராமச்சந்திரன். ஆபீஸ் பையனாக இருந்து இசை அமைப்பாளர் ஆன எம்.எஸ்.வி.யை, தான் முன்னணிக் கதாநாயகனாகப் புகழ்பெற்றதும் தனது படங்களின் திரையிசைக்குச் சுவீகரித்துக்கொண்டார். 25 ஆண்டுகாலம் எம்.எஸ்.வியின் உயிர் நண்பராக உலா வந்த கவியரசர் கண்ணதாசனும் ஜூன் 24-ம் தேதி பிறந்தவர்தான்.
(நிறைந்தது)
தொடர்புக்கு: teslaganesh@gmail.com
படங்கள் உதவி: ஞானம்எம்.எஸ்.வி.‘இதயக்கனி’‘பாரத விலாஸ்’