வாழ்வு இனிது: புதிய உலகம்.. புதிய இசை.. புதிய முகம்! 

வாழ்வு இனிது: புதிய உலகம்.. புதிய இசை.. புதிய முகம்! 
Updated on
2 min read

வா.ரவிக்குமார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டு வருகிறது ‘குளோபல் பீஸ் சாங்’ விருதுகள் அமைப்பு. இதனிடமிருந்து உலக அமைதிப் பாடல் விருதினை, `புதிய உலகம் மலரட்டுமே’ என்னும் தனிப்பாடலை இசையமைத்துப் பாடிய எஸ்.ஜே.ஜனனி பெற்றிருக்கிறார். அதனோடு `புராஜக்ட் பீஸ் ஆன் எர்த்’ அமைப்பு, `உலக அமைதி இசைத் தூதுவர்’ மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகவும் எஸ்.ஜே.ஜனனியைத் தேர்தெடுத்திருக்கிறது.

இசையுலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமியை வென்ற கலைஞர்கள், ஹாலிவுட் படங்கள் வழியாக மனிதம் பேசும் புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேசப் பிரபலங்கள் இடம் பெற்றிருக்கும் இந்தக் குழுவில் உறுப்பினராகியிருக்கிறார் தமிழ்ப் பெண்ணான ஜனனி.
தொடக்கத்தில் ஜனனியின் பாடலை நீதிபதிகள் குழு சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தது. உலகம் முழுவதிலிருந்தும் மக்களின் விருப்பமாகவே இவரின் பாடல் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இசையின் பன்முகம்

கர்னாடக இசையை இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவிடமும் மேற்கத்திய இசையை அகஸ்டின் பாலிடமும் ஹிந்துஸ்தானி இசையை குல்தீப் சாகரிடமும் இவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார். மேற்கத்திய இசையில் டிரினிடி இசைத் தேர்வில் தியரி, பிராக்டிகல் இரண்டு பிரிவிலும் எட்டு டிகிரியை முடித்திருப்பவர். முறையான பாடாந்திரத்துடன் தமிழிசைப் பாடல்களையும் தமிழிசை மூவரின் கிருதிகளையும் பாடுபவர். சிறந்த குரல் இசைக்கலைஞருக்கான மத்திய அரசு வழங்கும் விருதைக் குடியரசுத் துணைத் தலைவர் கிருஷண் காந்திடமிருந்து 2001-ம் ஆண்டு பெற்றிருப்பவர்.

தமிழக அரசின் கலை இளமணி விருதையும் பாரத் கலாச்சாரின் யுவ கலா பாரதி விருதையும் பெற்றிருப்பவர். பாரதியாரின் தேச பக்திப் பாடல்கள், தனிப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் எஸ்.ஜே.ஜனனி, இளம் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் `பிலீவ் இன் யூ’ என்னும் ஆங்கிலப் பாடலை எழுதி இசையமைத்துப் பாடி வெளியிட்டிருக்கிறார். `பிரபா’ என்னும் திரைப்படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
அதில் தன்னுடைய மாணவிக்காக ஒரு பாடலையும் பாடிக்கொடுத்து அவரை பெரிய மனதோடு ஆசிர்வதித்திருக்கிறார் எஸ்.ஜே.ஜனனியின் குரு பாலமுரளி கிருஷ்ணா.

அதிரடியான அமைதி

`பூமி சுற்றுகின்ற நீள்வட்டத்தை
அமைதி சக்தி கொண்டு குளிர்விப்போம்....
நாம் குளிர்விப்போம்...
இயற்கையின் நியதியை மதித்திடுவோம்..’

- பிரம்மகுமாரிகள் சங்கம் கடந்த ஆண்டு வெளியிட்ட ‘சிவமகிமை’ எனும் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலை பி.கே.குமார் எழுதியிருக்கிறார். “பாடலின் வரிகளுக்கேற்ப மெட்டு அமைத்தேன். பொதுவாக, அமைதியை வலியுறுத்தும் பாடல் என்றாலே மென்மையான இசையைத்தான் முதன்மைப்படுத்துவார்கள் ஆனால், இந்தப் பாடலில் நான் அதற்கு மாறாக எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அப்படிப்பட்ட துணிச்சல் இருந்தால்தான் நாம் முன்னேற முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைத்தேன்” என்றார் ஜனனி.

ஹம்ஸத்வனி ராகத்தின் அழகை வெளிப்படுத்தும் தனி வயலின் இசையும். மிருதங்கம், தவிலும் இணைந்து வித்தியாசமான தாள அனுபவத்தையும் இந்தப் பாடல் கொடுக்கிறது. `புதிய உலகம் மலரட்டுமே’ என்பது தனிக் குரலாக ஒலிக்காமல் பல குரல்களின் சேர்ந்திசையாக ஒலிப்பதில் எல்லோரும் ஒன்றிணைந்து முயலவேண்டியதன் அவசியத்தைச் சொல்லாமல் சொல்கிறது ஜனனியின் இசை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in