Published : 11 Oct 2019 12:08 PM
Last Updated : 11 Oct 2019 12:08 PM

திரைப் பார்வை: கோமாளியின் கொடூரச் சிரிப்பு

ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஒருவரது சிரிப்பு, இன்னொருவருக்குச் சிரிப்பாக இல்லாது போகும் நிலை, வலியை உருவாக்குவது. ஒருவரின் சிரிப்பை இன்னொருவர் பகிர இயலாத ஏற்றத்தாழ்வுகள் பெருகத் தொடங்கும்போது, சிரிப்பு ஒரு நோய்க்கூறாக மாற்றம் அடைகிறது.

எல்லாவிதமான அழுத்தங்கள், பிறழ்வுகள், பாகுபாடுகளுக்கு மத்தியிலும் மக்களைச் சிரிக்க வைக்க வேண்டிய பொறுப்புள்ள கோமாளி, இப்படிப்பட்டச் சூழ்நிலையை எதிர்கொள்கையில் குழப்பமடைகிறான். அவனது சிரிக்கும் முகமூடிக்குப் பின்னால் உள்ள கோமாளியின் துயர உடல் புழுங்கிக் கனக்கத் தொடங்குகிறது; அப்போது அவன் சிரிப்பு கொடூரமாகிறது. அமெரிக்காவில் காத்தம் என்னும் கற்பனை நகரமே கலவரத் தீயில் எரிவதற்குக் காரணமாகும் ஒரு கோமாளியின் அவதாரக் கதைதான் ‘ஜோக்கர்’.

டிசி காமிக்ஸ் நாயகனான பேட்மேனின் வில்லனான ஜோக்கர், எத்தகைய சூழ்நிலையில் தீமையின் உருவம் ஆனான்?
ஏற்கெனவே 1989-ல் வெளிவந்த ‘பேட்மேன்’, 2008-ல் வெளிவந்த ‘தி டார்க் நைட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும், ஜேக் நிக்கல்சனும் ஹீத் லெட்ஜரும் ஜோக்கர் என்ற வில்லனை அதிகபட்சம் அச்சம் கொள்ளக்கூடிய, அதேவேளையில் கற்பனையும் படைப்பாற்றலும் கவர்ச்சியும் கொண்ட சாகசக்காரனாக ஆக்கினார்கள். ஆனால், இத்திரைப்படத்தில் ஜோக்கர் தான் நாயகன்; அவனே வில்லன். இப்படைப்பை ஒரு நடிகனின் திருவிழா என்றுணர்ந்தே கோரங்களின் களிநடனத்தை ஆர்தர் ப்ளெக் என்ற முதன்மைக் கதாபாத்திரத்தின் மூலம் ஆடியுள்ளார் நடிகர் ஹாக்கின் பீனிக்ஸ்.

நியூயார்க்கை ஞாபகப்படுத்தும் காத்தம் நகரத்தில், கீழ் மத்தியத் தர வர்க்கத்தினர் வாழும் சிதிலமான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆர்தர் ப்ளெக் தனது நோயுற்ற அம்மாவுடன் வசித்து வருகிறான். நகைச்சுவை நடிகனாக ஆகும் லட்சியம் கொண்ட ஆர்தர் ப்ளெக், கடைகள், குழந்தைகள் மருத்துவமனை போன்ற இடங்களில் கோமாளி வேடமிட்டுச் சம்பாதிப்பவராக தன் வாழ்க்கையை நடத்துகிறார். பிறந்ததிலிருந்து முப்பது வயது வரை துயரங்கள், புறக்கணிப்பு ஆகியவற்றையே அனுபவித்து வந்த ஆர்தர், தீவிர மன அழுத்தத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறான்.

அதேவேளையில் காத்தம் நகரம், பொருளாதார மந்தநிலை, பிரமாண்ட எலிகளால் பெருகும் சுகாதாரமற்ற நிலையால் அல்லாடுகிறது. அரசு அளித்துவரும் இலவச மனநல ஆலோசனையும் இலவச மருந்துகளும் ஆர்தர் ப்ளெக்குக்கு திடீரென்று நிறுத்தப்படுகின்றன. அம்மாவின் பிரியப்படி, இந்தப் பூமிக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் தர நினைத்த அந்தக் கோமாளி, இரவலாகக் கிடைக்கும் ஒரு துப்பாக்கியால் நகர நிர்வாகத்தையே பீதியடைய வைக்கிறான். அந்த ஜோக்கர் ஒரு மக்கள் கூட்டத்துக்கே உந்துதலாக மாறுகிறான்.

இத்திரைப்படத்தின் இயக்குநர் டோட் பிலிப்ஸும் ஒளிப்பதிவாளர் லாரன்ஸ் ஷெரும் ஒரு கைவிடப்பட்ட, நம்பிக்கை வற்றிப்போன ஓர் உலகத்தை காத்தம் நகரமாக இருள்நீலத்தில் சித்திரித்து விடுகின்றனர். அவமதிப்பு, எதிர்பாராத தாக்குதல்கள், விதவிதமான புறக்கணிப்புகளை அனுபவிக்கும் ஆர்தர், இப்படிச் சொல்கிறான், “இனியும் நான் பரிதாபமாக என்னைக் கருதிக் கொள்வதற்கு விரும்பவில்லை”. அதிலிருந்து கோமாளியின் அதகளம் தொடங்குகிறது. ஆர்தர், தன் தாயுடன் தனிமையில் வீட்டில் இருக்கும்போது, சட்டையில்லாமல் தோன்றும் காட்சிகளில் கடவுளாக மாற நினைக்கும் ஒரு விலங்கின் முயற்சியையும் இயலாமையின் கழிவிரக்கத்தையும் காவியச் சாயலில் வெளிப்படுத்துகிறான். தோள்பட்டை வரை நடிக்கிறது.

அவன் ஈடுபடும் கொலைகளிலும் கொடூரங்களிலும் கோமாளியின் நகைச்சுவையையும் கையறு நிலையையும் பலவீனத்தையும் சேர்ந்தே வெளிப்படுத்துகிறார் நடிகர் ஹாக்கின் பீனிக்ஸ். தனக்குத் துப்பாக்கியைத் தந்த சக கோமாளியைக் கொன்றபிறகு, தனக்குப் பிரியமான குள்ளனை வீட்டைத் திறந்து வெளியே விடும் காட்சி அத்தனை குரூரத்துக்கிடையிலும் சிரிப்பை வரவழைக்கிறது. அயர்ந்து போய் கேமராவைப் பார்க்கும் ஆர்தரின் உதடுகளைச் சுற்றியிருக்கும் கோமாளிச் சிவப்பு ரத்தப் புள்ளிகளால் ஆனது. ஆர்தரின் தாய், காதலியாக வரும் பெண் என சில கதாபாத்திரங்கள் அழுத்தமாக இருப்பினும் ஹாக்கின் பீனிக்ஸின் முகமும் உடலும் தான் இந்தப் படைப்பின் மையக் களமாக உள்ளன.

1970-களில் அமெரிக்காவிலிருந்த பொருளாதார மந்தநிலையில் நடந்த வன்முறைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘டாக்சி டிரைவர்’ படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்கும் படைப்பு இது. டாக்சி ஓட்டுநரின் நாயகனான ராபர்ட் டி நீரோ, நகைச்சுவை டாக் ஷோ நடத்துபவராக வந்து ஜோக்கரால் சுடப்பட்டு இறந்துபோகிறார். நாயகன் ஆர்தர் ப்ளெக்கின் தாக்கம் பெற்று, நகரமே ஜோக்கர்களால் தாக்கப்படத் தொடங்க, காவல்துறையினரால் கைது செய்யப்படும் ஜோக்கரை, கோமாளி முகமூடி அணிந்த மக்கள் விடுவிக்கிறார்கள். எரியும் நகரத் தெருவின் பின்னணியில் ஜோக்கரை ஒரு காரின் பானெட்டை மேடையாக்கி நடனமாடச் சொல்கின்றனர்.

ஜோக்கர் கைகளை விரித்து நடனத்தைப் பாவிக்கத் தொடங்கும்போது அங்கே கிறிஸ்து உருப்பெறுகிறார். ஹில்துர் க்வானதேட்டிரின் இசை திரைப்படத்தை மாபெரும் இசைநாடக அனுபவமாக்குகிறது.
தனது இருப்பையே ஒரு பொருட்டாக பிறரொருவரும் நினைக்காத ஒரு நிலையில், துப்பாக்கியைத் தூக்கிய ஜோக்கரின் துயரமும், கோமாளியின் ஒப்பனையை முகமூடியாகக் கொண்ட அவனது பக்தர்களின் துயரமும் ஒன்றா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x