டிஜிட்டல் மேடை: கொலைக் கதையில் திருக்குறள்! 

டிஜிட்டல் மேடை: கொலைக் கதையில் திருக்குறள்! 
Updated on
2 min read

சு.சுபாஷ்

செப்டம்பர் இறுதியில், ‘சோனி லைவ்’ செயலியில் வெளியாகி இருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘இரு துருவம்’. கிரைம் திரில்லரான இத்தொடரின் கதைக் களம் சென்னை சாஸ்திரி நகர். அங்கே நள்ளிரவில் ஒரு கொலை நடக்கிறது. விசாரணையில் இறங்கும் காவல் அதிகாரி நந்தா, அந்தக் கொலையைச் செய்தது ஒரு ‘சைக்கோபாத்’ என்கிற கோணத்தில் துப்பறிதலைத் தொடர்கிறார்.

கொலைகாரன் ஏற்கெனவே சில கொலைகளை செய்திருப்பதாகவும், மேலும் சில கொலைகள் தொடரும் எனவும் விசாரணையின் பாதை வழிகாட்டுகிறது. அதுவரை அரங்கேறிய கொலைகளுக்கு இடையிலான தொடர்புகளைக் கண்டறிந்து, அடுத்து நடக்கவிருக்கும் கொலைகளைத் தடுக்க முயற்சிக்கிறார் நந்தா. அவரது முயற்சிகள் வெற்றி பெற்றனவா, நந்தாவின் சொந்த வாழ்க்கையுடன் வழக்கு எவ்வாறு ஊடுருவிக் கடக்கிறது ஆகிய இரு கோணங்களில் பயணிக்கிறது இத்தொடர்.

ஒரு க்ரைம் திரில்லரில் திருக்குறளைப் புகுத்தியதில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். குற்றச் செயல்கள் அரங்கேறும் இடங்களில் எல்லாம், கொலையாளி ஒரு குறளை எழுதி வைத்துச் செல்கிறான். மேலும் ‘அந்நியன்’ பாணியில் குற்றத்தை நிறைவேற்றுவதில் ஐம்புலன்களில் ஒன்றைக் குறிவைத்தே கணக்கைத் தீர்க்கிறான். வேறெந்த தடயமும் இன்றி வெகு தீர்க்கமாக திட்டமிட்டு முன்னேறுகிறான்.

இந்த இரண்டு தடயங்களில் இருந்தே சாமர்த்தியமாக வழக்கை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகிறார் விசாரணை அதிகாரி. ஒரு குற்றச்செயலின் மையம், குற்ற நிகழ்விடத்தின் சூழல், அவற்றை தடயவியல் அதிகாரிகள், காவல்துறையினர் அணுகும் முறைகள், துப்புத் துலக்கலின் படிநிலைகள் ஆகியவற்றைத் தொடரில் விவரமாக அலசுகிறார்கள்.

ஆனால், அடிப்படையான கதை சொல்லலில் அநியாயத்துக்கு அலைக்கழித்திருக்கிறார்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளுடனான உரசல் மட்டுமன்றி சக போலீஸாரால் கண்காணிக்கப்படும் அளவுக்கு சொந்த வாழ்வில் சந்தேகத்துக்கிடமான மர்மத்துடன் வளையவருகிறார் காவல் அதிகாரி. அவரை ஒரு கொலைவழக்கு விசாரணைக்கு மேலிடமே வற்புறுத்திப் பணிக்கிறது.

அவரும் முட்டிமோதி முன்-பின்னாக நடந்த, நடக்கவிருக்கும் குற்றங்களை சற்றுத் தாமதமாகவே அம்பலப்படுத்துகிறார். இடையே வேறெந்த தடயமும் இன்றி நம்மோடு சேர்ந்து தவிக்கிறார். விசாரணை அதிகாரிக்குத் தெரியாமல் நமக்கு மட்டும் ஒரு மர்ம நபரை ஓரிரு முறை காட்டி பின்னர் பல அத்தியாயங்களுக்கு மறக்கடித்துவிடுகிறார்கள்.

இணையத்தொடரின் இலக்கணத்துக்கு உட்பட்டு ஓர் அத்தியாயத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் இடத்தில் அதனைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் பொய்க்கும்போது விறுவிறுப்புக்கான அடுத்தடுத்த காட்சிகள் அலுப்புத்தட்டுகின்றன. மர்ம நபரின் பிளாஷ்பேக்காக விரியும் காட்சியிலும் புதிதாக எதையோ சொல்ல முயற்சித்துத் தோற்கிறார்கள்.

வண்ணத்துப் பூச்சிகளை பிய்த்துப்போடவும் ஒரு சில கெட்ட வார்த்தைகளை உதிர்க்கவும் எக்கச்சக்கமாய் ரத்தம் தெறிக்க விடவும் மட்டுமே இணையவெளிக்கான சுதந்திரம் உதவி இருக்கிறது. மனநலம் சிதையத் தொடங்கியவரின் கையில் திருக்குறள் தட்டுப்படுகிறது. அதனை ஆர்வமாய் புரட்டிப் படித்து உள்வாங்கும் அவரை அத்தனை குறளில் ஒன்றுகூட பண்படுத்தாதது நம்பமுடியாத ஆச்சரியம்! தொழில்நுட்பம் உட்பட தொடருக்காக உழைத்து நிறைய தரவுகளை சேகரித்திருப்பது புரிகிறது.

அந்த உழைப்பை வீணாக்காது, அவசியமற்ற காட்சிகளிலும் அவற்றை மொத்தமாக கொட்டியிருப்பதுதான் இழுவைக்குக் காரணமாகிறது. குற்றவாளியை வளைத்த பிறகும் அவனை மடக்காது சுற்றிச் சுற்றி வருவதெல்லாம் இதில் சேர்த்தி. ஐம்புலன்களை குறிவைத்து கொலையாளி தாண்டவமாடுவதாக காட்டுவதில், மூக்கறுபட்டதால் இறப்பு நேர்வதாக சித்தரிப்பதெல்லாம் ரொம்பவே அபத்தம். இதுபோல தொடர் முழுக்க ஏகமாய் வியாபித்திருக்கின்றன. ஆனபோதும் தத்தித் தவழும் தமிழுக்கான இணையவெளியில், இம்மாதிரியான முயற்சிகளை அதன் சிறப்பம்சங்களுக்காக வரவேற்கலாம்.

நந்தா தன்னைப் பின்தொடரும் சக போலீஸாரைக் கொண்டே தனது வழக்கின் விசாரணையை முன் நகர்த்துவது, தொட்ட இடத்திலெல்லாம் வழுக்கினாலும் சளைக்காது முன்னேறும் காவல் அதிகாரியின் புத்தியை அசலாய் நந்தா பிரதிபலிப்பது, கடைசி காட்சியில் சற்றும் எதிர்பார்க்காத சஸ்பென்ஸ் பட்டாசுகளை வெடிக்கவிட்டு அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்புகளை உண்டுபண்ணுவது என நம்பிக்கை சேர்த்திருக்கிறார் இயக்குநர் எம்.குமரன். உதவி ஆய்வாளராக வரும் அப்துல், நந்தா மனைவியாக வரும் அபிராமி உள்ளிட்டோர் ஆறுதல் தருகிறார்கள்

முன்னோட்டத்தைக் காண கைபேசியில் ஸ்கேன் செய்யுங்கள்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in