கோடம்பாக்கம் சந்திப்பு: வில்லியாகும் ரெஜினா!

கோடம்பாக்கம் சந்திப்பு: வில்லியாகும் ரெஜினா!
Updated on
3 min read

‘தர்பார்’ படத்துடன் விஷால் நடித்துவரும் புதிய படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கிவரும் இந்தப் படத்தில் விஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். விஷால் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு முதலில் ‘இரும்புத்திரை 2’ எனப் பெயரிட்டார்கள். இப்போது வேறு பெயர் வைக்க பரிசீலனை செய்துவருகிறார்கள். தமிழில் முதன்முறையாக இந்தப் படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்துவருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் நிலையான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

எனக்குத் திருமணமா?

தமிழில் ‘பெட்ரோமாக்ஸ்’, ‘ஆக்‌ஷன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் தமன்னா. இதனிடையே சில நாட்களாகவே மும்பைத் தொழிலதிபருடன் தமன்னாவுக்குத் திருமணம் நடக்கப் போவதாகச் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. மேலும், திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன. இந்தச் செய்திக்கு, “யார் இப்படி வதந்திகளைக் கிளப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. இப்போதைக்குத் திருமணமும் இல்லை, திரையுலகை விட்டு விலகும் எண்ணமும் இல்லை. யாரோ திட்டமிட்டே வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்று கொந்தளித்துவிட்டார் தமன்னா.

விஜய் மாணவராக சாந்தனு!

‘பிகில்’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். முதன்மை வில்லனாக விஜய் சேதுபதி, அடுத்த வில்லனாக ஆண்டனி வர்கீஸ், முக்கியக் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார் விஜய். கல்லூரி மாணவராக விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு நடிக்க உள்ளார். 2020 கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்க அருண்ராஜா காமராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இணையும் குடும்பம்

சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மூவரும் இணைந்து முதன்முறையாக ‘பிறந்தாள் பராசக்தி’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர். முழுக்க மதுரை மண் சார்ந்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது. படத்தை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ஓம் விஜய் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

மீண்டும் அனுஷ்கா?

‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் எந்தவொரு படத்தையும் அனுஷ்கா ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க அவரிடம் பேசியுள்ளனர். அவரோ உடம்பைக் குறைக்கும் பணியில் இருப்பதால், ‘எப்போது படப்பிடிப்பு என்று சொல்லுங்கள். அப்புறமாகச் சொல்கிறேன்’ எனக் கூறியுள்ளாராம்.
இதுபோக, படத்தில் நடிக்கவுள்ள அனைத்து நாயகர்களையும் பெரிதாக முடியை வளர்க்கச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் ராஜராஜசோழனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக மோகன் பாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர். டிசம்பரில் தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஷாருக்கானுடன் அட்லீ

‘பிகில்’ படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகத் தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அட்லீ தரப்பில் விசாரித்தபோது,“ ‘மெர்சல்’ முடிந்தவுடன் தெலுங்கில் படம் பண்ணலாம் என்று பேசியது உண்மைதான். ஆனால், ராஜமவுலி படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஒப்பந்தமாகிவிட்டார். அதனால், இந்தக் கூட்டணிக்கு இப்போது வாய்ப்பில்லை. ‘பிகில்’ படத்துக்குப் பிறகு ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ” என்று பதில் வருகிறது. ஆக, இந்தி சினிமாவில் அட்லீ நுழைவது உறுதியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in