

தமிழ் சினிமா பேசத் தொடங்கிய பிறகு, அதைத் தாலாட்டி, சீராட்டி, அதற்கு உருவம் கொடுத்த சிற்பிகள் பலர். அவர்களில் எம்.ஜி.ஆரால் “முதலாளி” என வாஞ்சையுடன் அழைக்கப்பட்டவர் புகழ்பெற்ற விஜயா வாஹினி ஸ்டூடியோவின் ஸ்தாபகர், மறைந்த பி. நாகிரெட்டியார். அவரது வெற்றிக் கதையை, திருப்பங்கள் நிறைந்த ஒரு நாவலைப் போல விறுவிறுப்பாகப் பேசுகிறது இந்த நூல்.
இந்த நூலின் முதல் ஆச்சரியம் நூலாசிரியர் விஸ்வம். இவர் நாகிரெட்டியாரின் மகன் என்பது முதல் தகுதியென்றால்; அத்தனை பெரிய நிறுவனத்தின் நிர்வாகத்தில் தந்தையின் வலக்கரமாக இருந்து அதன் பிரம்மாண்ட வளர்ச்சியில் அருகிலிருந்து பங்குகொண்ட நிர்வாகி என்பது கூடுதல் தகுதி. ஒரு மாபெரும் வெற்றியாளரின் வாழ்க்கையில் நேரடியாக, சாட்சியாக உடன் பயணித்தவர்கள் அதை வாழ்க்கை வரலாற்று நூலாகப் படைப்பது அபூர்வமானது. அந்த அபூர்வம் உண்மைகளின் படையலாக இருக்கும்.
அப்படியொரு அர்த்தமுள்ள படையலாக சிந்தாமல் சிதறாமல் சரியான வரிசையில் தொகுக்கப்பட்டிருப்பது இந்நூலை விறுவிறுப்பான வாசிப்பு வகைமையில் சேர்த்துவிடுகிறது.
14 வயதுச் சிறுவனாக ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள போட்டிப்பாடு என்ற அவரது சொந்த கிராமத்திலிருந்து பெற்றோரால் உயர் கல்விக்காகச் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார் நாகிரெட்டியார். தமிழகம் அவருக்குத் தாய்வீடுபோல் ஆகிவிடுகிறது. இங்கே வந்தபிறகு தனது இறுதிமூச்சுவரை ஒரு தமிழராகவே வாழ்ந்து மறைந்தார். அந்த அளவுக்கு அவர் தமிழகத்தையும் தமிழ்க் கலைஞர்களையும் தமிழ் சினிமாவையும் நேசித்தார்.
ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் தலைமையகமாக இருந்த கோடம்பாக்கம், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தமிழ் சினிமாவுக்கான தொழிற்சாலையாகச் சுருங்கியது. தெலுங்குப் பட நிறுவனங்கள் ஹைதராபாத்துக்கு கொத்தாக இடம்பெயர்ந்தபோதும் “ நான் இறுதிவரை இங்கேதான் இருப்பேன்” என்று நாகிரெட்டியார் பிடிவாதமாக இருந்தவர்.
தனது வருமானம் எதையும் ஆந்திராவுக்கு எடுத்துச் செல்ல விரும்பாத இவர், தன்னை வளர்த்து தனக்கு உயர்ந்த முகவரியை அளித்த தமிழகத்துக்கு நன்றி செலுத்தும் விதமாக, விஜயா - வாஹினி ஸ்டூடியோ புகழ்பெற்று விளங்கிய அதே இடத்தில் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையை நிறுவி மருத்துவ சேவை அளிக்க ஆவனசெய்தவர்.
கோலிவுட் என்று தமிழ் சினிமாவைக் கம்பீரமாக இன்று அழைக்கக் காரணமாக இருக்கும் இடம் இன்றைய வடபழனி. அன்று மாட்டு வண்டிகள் மட்டுமே செல்லும் ஒன்றிரண்டு மண்சாலைகள் மட்டுமே இருந்த வடபழனியில் துணிச்சலாகத் தனது சினிமா ஸ்டூடியோவை அமைத்து அது திரைப்பட நகரமாக வளரும் என்று நம்பியவர். அவரது நம்பிக்கையும் தீர்க்க தரிசனமும் பொய்க்கவில்லை. அடுத்த பத்தே ஆண்டுகளில் 13 ஸ்டூடியோக்கள் அமையப்பெற்ற திரைப்பட நகரமாக வடபழனி வளர்ச்சியடைந்து நின்றது.
ஸ்டண்ட் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சின்னப்பா தேவர், சினிமா தயாரிப்பாளராக மாறி படங்களைத் தயாரித்து நஷ்டப்பட்டு, இனி சினிமா வேண்டாம் என்று முடிவு செய்தபோது அவரது நாணயத்தையும் நடத்தையும் கண்டு அவருக்குத் தொடர்ந்து நிதியுதவி செய்து தேவர் வெற்றிகரமான தயாரிப்பாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கைகொடுத்தவர்.
எம்.ஜி.ஆர் தனது நாடோடி மன்னன் படத்தை எடுத்து முடிக்க முடியாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டபோது அந்தப் படத்தை எடுத்து வெளியிடக் கைகொடுத்தவர். இறுதிவரை தன்னை “முதலாளி “ என்று அழைத்த எம்.ஜி. ஆரை வைத்து பத்தே நாட்களில் ’ நம் நாடு’ என்ற அரசியல் படத்தை எடுத்து முடித்து வெளியிட்ட அதிசயத்தை நிகழ்த்தியவர். இப்படி நாகிரெட்டியாரின் வாழ்க்கைப் பயணத்தில் உள்ளும் புறமும் நிகழ்ந்த நூற்றுக்கணக்கான சம்பவங்களை நிகழ்ந்தது நிகழ்ந்தபடி உயிரோட்டத்துடன் சித்தரித்திருப்பதன் மூலம் அவரது வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்துகொள்ள ஒரே புத்தகமாய் உதவுகிறது இந்நூல்.
இத்தனை பெரிய சாதனையாளரின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தை ஒளிவு மறைவு இன்றி அங்கங்கே சொல்லிச்செல்வது திரையில் சாதிக்கத் துடிக்கும் புதிய தலைமுறைக்கு ஊட்டச்சத்து. இவையெல்லா வற்றையும்விட தமிழ் சினிமாவின் வரலாற்றைத் தேடிப் பயிலவும் ஆராய்ச்சி செய்யவும் விரும்பும் அனைவருக்கும் ஒரு வரலாற்று ஆவணமாகவும் மாறிவிடுவது இந்நூலின் சிறப்பு.
தினமணி நாளிதழில் தொடராக வெளிவந்து வரவேற்பைப் பெற்று தற்போது நூல் வடிவம் பெற்றிருக்கும் இந்நூலை விஜயா பதிப்பகமே வெளியிட்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர் மதித்த முதலாளி
நூலாசிரியர்: விஸ்வம், விலை: 100 ரூபாய்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
317.என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை -27
தொடர்புக்கு 044 - 23652007