

சுமன்
‘டெர்மினேட்டர்’ திரைப்பட வரிசையின் நிறைவுத் தவணையாக வெளியாக இருக்கிறது ‘டெர்மி னேட்டர்: டார்க் ஃபேட்’. அறிவியல் புனைவு ஆக்ஷன் திரைப்படங்களில் புதுவிதமாய் 1984-ல் வெளியாகி உலகமெங்கும் ரசிகர்களை கவர்ந்த முதல் படம் ‘தி டெர்மினேட்டர்’. தற்போது ஆறாவது பாகமாக வெளிவரவிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை எழுதி தயாரித்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். ‘டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே’ படத்தின் கதையை தொடர்ந்து தற்போதைய ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ கதை நகர்கிறது.
சிறுமி ஒருத்தியைக் கொல்வதற்காக புதிய ரகத்திலான திரவ உலோக டெர்மினேட்டர் ஒன்றினை ’ஸ்கைநெட்’ எதிர்காலத்திலிருந்து அனுப்பி வைக்கிறது. சிறுமியைக் காப்பாற்றப் போராடும் சைப்ராக் மனிதன், சாரா கானர் குழுவினரின் கோரிக்கைக்கு இணங்கி ஒரிஜினல் டெர்மினேட்டரான அர்னால்ட் களமிறங்குகிறார். இப்படத்துக்காக 28 ஆண்டுகள் இடைவெளியில் அர்னால்டுடன் கேமரூன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார்.
டிம் மில்லர் இயக்கி உள்ள இத்திரைப்படத்தில் லிண்டா ஹேமில்டன், நடாலியா ரெயிஸ், கேப்ரியல் லுனா உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். இந்திய திரையரங்குகளில் ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ திரைப்படம் நவம்பர் முதல் நாளன்று வெளியாக உள்ளது.