

சென்ற வார கட்டுரையின் இறுதியில், ‘நாயகி கெட்டியாக கைகளைப் பிடித்ததும் நடிகரின் கைகள் நடுங்கின. அந்த நடிகர் யார்?’ என்று ஒரு கேள்வி கேட்டு முடித்திருந்தேன். தமிழ் சினிமாவில் ‘என்றும் 16’ என்று பெயர் வாங்கிய சிறந்த நடிகர் சிவகுமார்தான் அவர். ஆரம்பத்தில் இவர் கொங்கு தமிழில்தான் வசனம் பேசுவார். நாங்கள் எல்லோரும் ‘கொங்குக் காரரே’என்று செல்லமாக கிண்டல் செய்வோம்.
பின்னர் மேஜர் சுந்தரராஜன் நடத்திய நாடகக் குழுவில் நடிகராகச் சேர்ந்து தமிழை பலவிதமாக பேசி நடிக்கக் கற்றுக்கொண்டார்.
சிவகுமார் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை. அவர் அறிமுகமான ‘காக்கும் கரங்கள்’ திரைப்படம் 1965-ல் வெளியானது. இது அந்தத் திரைப்படத்துக்கு பொன்விழா ஆண்டு. இந்த நேரத்தில் அவருக்கு அனைவரது சார்பிலும் பொன்விழா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவருடைய பிள்ளைகள் சூர்யா, கார்த்திக் இரண்டு பேரும் சிறந்த நடிகர்களாக இருப்பதோடு, ஒழுக்கமான பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். ஒரு பேட்டியில், ‘‘உங்க பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக வளர்த்திருக்கிறீர்களே... அவர்களை அதட்டி வளர்த்திர்களா, அடித்து வளர்த்தீர்களா?’’ என்று கேட்டதற்கு சிவகுமார் சொன்னார்:
‘‘நான் அதட்டியும் வளர்க்க வில்லை; அடித்தும் வளர்க்க வில்லை. நானும் என் மனைவி லட்சுமியும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து காட்டினோம். அந்த வாழ்க்கையை எங்கள் பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள்’’ என்றார். புலமைப் பித்தன், ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே/ அவர் நல்லவ ராவதும் தீயவராவதும்/அன்னை வளர்ப்பினிலே’ என்று எழுதியிருப்பார். பிள்ளைகள் நல்லவர்களாக வளர பெற்றோர் தான் முக்கிய காரணம் என்பதை சிவகுமார் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
‘காக்கும் கரங்கள்’ படத்தில் எஸ்.வி.சுப்பையா பணக்கார வேடத்தில் வித்தியாசமாக நடித்திருப்பார். படப்பிடிப்புக்கு வரும்போது கூழ் எடுத்து வந்து எல்லோரையும் குடிக்க வைப்பார். இயக்குநர் தொடங்கி லைட் மேன் வரைக்கும் குடித்தே தீர வேண்டும். அவர் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்ய மாட்டார்.
படத்தில் ஒரு இரவுக் காட்சி. எஸ்.வி.சுப்பையா நடித்தே ஆக வேண்டும். ஏவி.எம்.சரவணன் விவரத்தை சொல்லி இரவு நடிக்கச் சொன்னார். அதற்கு எஸ்.வி.சுப்பையா, ‘‘இந்தக் கூழை உங்கள் தந்தையார் ஏவி.எம் குடித்தால் நான் இரவு நடிக்கிறேன்’’ என்றார். அப்பச்சி அதைக் குடித்துவிட்டு, ‘‘நல்லா இருக்கு, இன்னொரு டம்பளர் கொடு’’ என்று வாங்கிக் குடித்தார். இதனை ஏவி.எம்.சரவணன் எஸ்.வி.சுப்பையாவிடம் சொன்னதும், ‘‘இரண்டு டம்பளர் கூழுக்கு… இரண்டு இரவுகள் நடிக்கிறேன்’’ என்று ஒப்புக்கொண்டார்.
‘காக்கும் கரங்கள்’ படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். இசையில் பல புதுமை செய்தவர். அவரிடம் புகழேந்தி என்ற ஓர் உதவியாளர் பணியாற்றினார். இந்த ராகம் என்று கே.வி.மகாதேவன் ஆரம்பித்தவுடனே அதை அவர் அப்படியே பாடிக் காட்டுவார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஞாயிறு என்பது கண்ணாக’ பாடலை இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
‘அல்லித் தண்டு காலெடுத்து’ என்ற பாடலுக்கு படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். ‘அல்லித் தண்டு காலெடுத்து’ என்ற வார்த்தைக்கு குழந்தை நடப்பதைப் போல படமாக்க வேண்டும். அந்தக் குழந்தை நடப்பதை படமாக்க ஆயத்தமானால் அந்தக் குழந்தை ‘நடக்க மாட்டேன்’ என்று அடம்பிடித்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. முடிவாக இயக்குநர் திருலோக சந்தர், ‘பையனை தனியாக வைத்து எடுத்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு மற்ற காட்சிகளை எடுத்து முடித்தார்.
அதன்பிறகு நானும் கேமராமேன் முத்துசாமியும் தனியே அந்தக் குழந்தையை அழைத்துச் சென்று சாக்லேட் கொடுத்து, விளையாட்டு பொம்மைகள் கொடுத்து நடக்க வைக்க முயற்சித்தோம். தோல்வி தான். முத்துசாமி சோர்ந்துபோய் ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்கத் தொடங்கினார்.
திடீரென முத்துச்சாமி கையில் இருந்த சிகரெட்டை விளையாட்டாக அந்தக் குழந்தையின் முன் நீட்டி ‘வாப்பா… வா’ என்றார். சிகரெட்டை வாங்க விறுவிறுவென நடக்க ஆரம்பித் தான். இதுபோதாதா? திருப்தியாக அந்தக் காட்சியை எடுத்தோம். அப்படி எங்களை வேலை வாங்கிய சிறுவன் இன்று எங்கு இருக்கிறானோ தெரியவில்லை.
- இன்னும் படம் பார்ப்போம்.
முந்தைய அத்தியாயம்:> சினிமா எடுத்துப் பார் 18- நாகேஷின் அழுகை!