Published : 27 Sep 2019 09:12 AM
Last Updated : 27 Sep 2019 09:12 AM

இரண்டு பாதுஷாக்களும் இன்னிசை தான்சேனும் 02: புதிய வானம் புதிய பயணம்

டெஸ்லா கணேஷ்

மெல்லிசை இரட்டையர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும், 1952-ல் வெளியான ‘பணம்’ திரைப்படத்தின் மூலம், நேரடி இசையமைப்பாளர்களாக அறிமுகமானார்கள். அவர்களின் இந்தக் கூட்டு இசைப் பணி 1965-ல் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துடன் நிறைவு பெற்றது. மெல்லிசை மன்னராகத் தனித்து இயங்கத் தொடங்கிய எம்.எஸ்.வி., 1966-ம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட பதினைந்து படங்களுக்கு மேல் இசை அமைத்தார்.

அன்று தமிழ்த் திரையுலகின் இருபெரும் பாதுஷாக்களாக நிலைபெற்றுவிட்டவர்களில் முன்னவரான எம்.ஜி.ஆரோடு ‘கலங்கரை விளக்கம்’, பின்னவரான சிவாஜி கணேசனுடன் ‘நீல வானம்’ ஆகிய படங்களின் மூலமாக, இவ்விருவரின் ஈடு இணை இல்லாத ஒரே தான்சேன் எனப் புகழத்தக்க வகையில் ‘மெல்லிசை மன்னரின்’ தனிப்பெரும் இசைப் பயணம் தொடங்கியது.

பாடல் ஒன்று உணர்வுகள் பல

நடிகர் திலகத்தின் ‘நீலவானம்’ படத்தில் ‘ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே’ ‘ஓ ஷீலா ஓ லிட்டில் பிளவர்’ என ஸ்டைலான பாடல்களை வழங்கினார் எம்.எஸ்.வி. பல கதாபாத்திரங்களின் தனிப்பட்ட மன உணர்வுகளை, சாருகேசி ராகத்தில் ‘மங்கல மங்கையும் மாப்பிள்ளையும்’ என்ற ஒரே பாடலில் வெளிப்படுத்தும் மாயத்தைச் செய்தார்.

இதுபோன்ற மேளகர்த்தா ராகத்தில், மேற்கத்திய இசை பின்னணியில், எப்படி உணர்வு பொங்கும் மெட்டமைப்பது என்று பாடம் எடுத்தார். குழந்தைகளைத் தாலாட்டும் குறிஞ்சி ராகம் ஊடாட, ஒரே பாடலின் அடுத்த அடுத்த சரணங்களில் மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறிப் பொங்கும் ‘சொல்லடா வாய் திறந்து’ என்ற பாடலைப் படைத்தார்.

பாவேந்தர் பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை, அழகு மிளிரும் மோகன ராகத்தில், தூக்கலான குழு வயலின் இசையோடு தந்து சிலிர்க்கவைத்தார். பாகேஸ்வரி ராக அடிப்படையில் ‘பொன்னெழில் பூத்தது’ பாடலையும் நீலாம்பரி ராக அடிப்படையில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ பாடலையும் தந்தார்.

ஃப்ரீ ஸ்டைல் மெலடியாக, நடபைரவியில் இன்றளவும் புதுமையாக இருக்கும் ‘காற்று வாங்கப் போனேன்’ பாடலையும் தந்தார். ஆதார ஸ்ருதி கண்ணாமூச்சி காட்டும் ‘என்ன உறவோ என்ன பிரிவோ’ பாடலும் பி. சுசீலா குரலில் சோக ரசம் ததும்பும் ‘என்னை மறந்ததேன் தென்றலே’ பாடலும் எம்.எஸ்.வியின் தனி அடையாளங்கள்.

‘கிரஹஸ்தி’ என்ற இந்திப் படத்தின் மறு ஆக்கம்தான் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’. ‘கிரஹஸ்தி’ படத்தின் இசையமைப்பாளர் ரவி. அவருக்குத் தேசிய அளவில் விருது பெற்றுத் தந்த பாடலுக்கு இணையாகவும் அதைவிடச் சிறப்பாகவும் இந்தோள ராகத்தில் ‘மனமே முருகனின் மயில் வாகனம்’ என்று ஒரு கீர்த்தனை வடிவிலேயே தந்தார் எம்.எஸ்.வி. ஜெயலலிதா, சச்சு, ஷைலஸ்ரீ இணைந்து ஆடிய ‘துள்ளித் துள்ளி விளையாட’ பாடல் இன்றும் கண்களுக்கு விருந்து. மிஸ்ர தாள நடையில் சீர்காழி கோவிந்தராஜனின் சீர்மிகு குரலில் ‘பெண்ணே மாந்தர்தம்’ என்ற பாடல் சிவரஞ்சனி ராகத்தில் உருக்கத்தின் உச்சம்.

உலக இசைத் திருவிழா

‘அன்பே வா’ திரைப்படம் ஓர் உலக இசைத் திருவிழா என்றால் மிகையல்ல. பிரம்மாண்டமான ‘ராஜாவின் பார்வை’, ‘நாடோடி போக வேண்டும் ஓடோடி’ என்ற ராக் அண்ட் ரோல், அகிய பாடல்கள், ‘ஒன்ஸ் எ பாப்பா’ என்ற பாய்லா இசைப் பாடல், ‘அடியோஸ் குட் பை’ என்ற ஆங்கில ஜாஸ் இசைப் பாடல், சிம்லாவை நம் கண்முன் நிறுத்தும் ‘புதிய வானம்’ பாடல், கமல்ஹாசன் மீண்டும் தனது படத்தில் பயன்படுத்த விரும்பிய ‘நான் பார்த்ததிலே’ பாடல், பி.சுசீலாவின் குரலில், அழகிய தாளநடை மாற்றம் கொண்ட ‘லவ் பேர்ட்ஸ்’ பாடல், ‘வெட்கம் இல்லை நாணம் இல்லை’ போன்ற அனைத்துமே மெகா ஹிட் பாடல்கள்.

கூட்டு வயலின் இசைப் பிரவாகம் எடுத்த ‘அன்பே வா’ பாடல், வால்ட்ஸ் மற்றும் ஸ்விங் தாள நடைகளில் அழகிய தீம் இசைக்கோவைகள், இறுதிக் காட்சியில் இவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து உலக இசையின் அத்தனை அம்சங்களையும் வெற்றிகரமாக வெளிப்படுத்தினார் எம்.எஸ்.வி. படத்தின் தயாரிப்பு நிறுவனமாகிய ஏவி.எம். பாட்டுப் புத்தகத்தை எல்.பி.ரெக்கார்டைப் போல வட்ட வடிவில் தயார் செய்து வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியது.

‘இருமலர்கள்’ படத்தில் சுத்தமான கரகரப்பிரியா ராகத்தில் ‘மாதவிப் பொன் மயிலாள்’, ‘சந்திரோதயம்’ படத்தில் யதுகுல காம்போதி ராகத்தில் ‘காசிக்குப் போகும் சன்யாசி’, ஹமீர் கல்யாணி ராகம் தொனிக்கும் ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ’ எனப் புல்லரிக்க வைத்த எம்.எஸ்.வி, ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் ஒரு ராக தர்பாரே நடத்தினார். வாத்திய இசைக் கோவைகளில் ‘’ ராகத்தைப் பிராதானப்படுத்தி பாடல் மெட்டில் மேக், மல்ஹார் ராகங்களை இணைத்து ‘முத்துக்களோ கண்கள்’ பாடலைத் தந்தார்.

பிரதானமாக சிம்மேந்திரமத்யம ராகத்தின் அடிப்படையில் தொடங்கி ‘பூ முடிப்பாள்’ பாடலை மெட்டமைத்தவர், பாடலின் இடையில் சுத்ததன்யாசி ராகத்தில் திருமண அழைப்பிதழ் படிக்கும் புதுமை செய்து பின் நாகஸ்வர இசையில் மத்யமாவதி ராக இசைக்கோவையைச் சேர்த்து மீண்டும் பாடலின் அடிப்படை ராகத்துக்குத் திரும்பி, சூழலையும் பாடல் வரிகளின் உணர்வையும் அப்படியே இசையில் வார்த் தெடுத்தார்.

சிந்து பைரவி ராகத்தில் ‘எங்கே நீயோ’ பாடலையும் ஹம்சானந்தி ராகத்தில் ‘நினைத்தால் போதும் பாடுவேன்’ பாடலையும் அமீர் கல்யாணி ராகத்தில் ‘கண்ணன் வரும் நேரமிது’ பாடலையும் அன்றைய அழகிய சென்னையை ஆவணப்படுத்திய ‘நெஞ்சிருக்கும் எங்களுக்கும்’ பாடலையும் தந்து, தான் ஒரு ராகப் பிரவாகம் என்று நிரூபித்தார் எம்.எஸ்.வி.

(விசுவ‘நாதம்’ ஒலிக்கும்)
தொடர்புக்கு: teslaganesh@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x