

தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால், தற்போது தமிழில் முழுமையாகக் காலூன்றி இருக்கிறார். தனுஷுடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி', ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி என பிஸியாகியிருக்கும் அவருடன் ஒரு சின்ன பேட்டி.
மாரி படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்கள்?
என் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்ரீதேவி. ஆடை வடிவமைப்பாளராக நடித்திருக்கிறேன். தனுஷ் லோக்கல் ஆளாக நடித்திருக்கிறார். நான் மார்டன் பெண்ணாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நான் பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியிருந்தது. தனுஷ்தான் உதவி செய்தார்.
வடசென்னையில் நடக்கிற கதை. பாடல்கள் ரொம்ப யதார்த்தமாக இருக்கும். டூயட் எல்லாம் இல்லை. இப்படத்தில் பந்தயப் புறா உடன் நடித்திருக்கிறேன். புறா என்றாலும் அதனுடன் நடிக்கப் பயந்தேன்.
தனுஷுடன் முதன் முறையாக நடித்தது பற்றிச் சொல்லுங்கள்?
வெற்றி மாறனின் ‘பொல்லாதவன்' படத்திலேயே நாங்கள் இணைந்து நடித்திருக்க வேண்டியது. போட்டோ ஷூட் எல்லாம் பண்ணி, இறுதியில் அப்படத்தில் என்னால் நடிக்கமுடியாமல் போய்விட்டது.
அதற்கு பிறகுகூட ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதுவும் சரிவர அமையவில்லை. அதனால் மாரி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம். தனுஷுடன் நடித்ததே ஒரு சிறந்த அனுபவம்தான். படப்பிடிப்பு இல்லாதபோது செட்டில் செம ஜாலியாக இருப்பார். ஆனால், காட்சி என்று வந்துவிட்டால் சற்று முன்னால் பார்த்த தனுஷா இவர் என்று ஆச்சரியப்படுத்திவிடுவார்.
தமிழில் அதிகமாக சம்பளம் கேட்கிறீர்கள் என்று செய்திகள் வலம் வருகிறதே..
என்னுடைய திறமைக்கு என்ன சம்பளம் கொடுப்பார்களோ, அதைக் கேட்கிறேன். அதற்காக 2 கோடி என்று எழுதுவது ரொம்ப அதிகம். நான் 2 கோடி கேட்டேனா என்பதை என்னுடைய தமிழ், தெலுங்கு, இந்தி இயக்குநர்களிடம் கேட்டுப் பாருங்கள். தமிழில் எனக்கு வரும் பாத்திரங்களில் பிடித்திருப்பவற்றைப் பண்ணுகிறேன். ‘காக்கா முட்டை' ஐஸ்வர்யா மாதிரியான பாத்திரங்கள் கிடைத்தால் நானும் நடிக்கத் தயார்தான்.
இன்னும் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்கவில்லையே, என்ன காரணம்?
வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு நேரம் வேண்டுமே. சில நேரங்களில் நான் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி தேதிகள் ஒதுக்கி இருப்பேன், அடுத்த நிமிடத்தில் ஒரு நல்ல படத்திற்காகக் கேட்பார்கள். ஆனால், என்ன செய்வது? தேதிகள் கொடுக்க முடியாமல் போகிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தை ஒப்புக் கொண்டால் அதில் நடித்து முடித்துக் கொடுப்பது என்னுடைய பணி. ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். ஆனால் கதை எனக்குப் பிடிக்க வேண்டும்.
உங்களுக்கு வரவிருக்கும் கணவர் எப்படி இருக்க வேண்டும்?
அனைத்துப் பெண்களும் சொல்லும் அதே பதில்தான். முதலில் அவர் நல்லவராக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் மனம் விட்டு பேசுபவராகவும், நேர்மையாகவும் இருந்தால் போதும். எனக்கு வரவிருக்கும் கணவர், இந்தியாவில் எந்த ஊர் நபராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை.
காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லையா?
நான் யாரையும் காதலிக்கவும் இல்லை, காதலிக்க நேரமும் இல்லை. இப்போதைக்கு நிறைய படங்களில் நாயகியாக நடிக்கிறேன். இப்போது உழைப்பு மட்டுமே,
இங்கே கதாநாயகிகளில் உங்களுக்கு நெருக்கமான தோழி யார்? நடிகர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறீர்கள் என்று கூறப்படுகிறதே..?
எனக்கு சென்னையில் அதிக நண்பர்கள் கிடையாது. நெருக்கமான பள்ளித் தோழிகள் அனைவருமே மும்பையில் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் நடிகைகளை எல்லாம் நேரில் பார்க்கும் போது ‘ஹாய்' சொல்லிப்பேன். நடித்துக் கொண்டிருக்கும், நடிக்கப் போகும் படங்களைப் பற்றி பேசுவேன். எனக்கு யாருடைய வளர்ச்சியைப் பார்த்தும் பொறாமை கிடையாது. பட வாய்ப்புக்காக நடிகர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறேன் என்றெல்லாம் எழுதுகிறார்கள். எதிலும் உண்மையில்லை.
படங்கள்: எல். சீனிவாசன்