Last Updated : 03 Jul, 2015 12:22 PM

 

Published : 03 Jul 2015 12:22 PM
Last Updated : 03 Jul 2015 12:22 PM

சூழல் ஒன்று பார்வை இரண்டு: காதலே வாழ்வு, காதலே தாழ்வு

போற்றினாலும் தூற்றினாலும் ஒரே வித பிரமிப்பு மிக்க உணர்வை அளிப்பதில் காதலுக்கு இணையாக இன்னொன்றைக் கூற இயலாது. காதல் இல்லாமல் எவரும் உயிர் வாழ முடியாது என்று சொல்லும்போதும், ஏன்தான் இந்த மோசமான காதலில் எல்லோரும் விழுகிறார்களோ என்று சொல்லும்போதும், ஆஹா எத்தனை சரியான கருத்து என்று ஆமாம் போட்டுத் தலையாட்ட ஆட்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட விசித்திரமான காதல் உணர்வை நேர் எதிரான பார்வைகளில் கூறும் தமிழ், இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.

இந்திப் பாட்டு:

படம்: மெஹ்பூப் கி மெஹந்தி, 1971 (காதலியின் மருதாணி). பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி. இசை: லட்சுமிகாந்த் பியாரிலால். பாடியவர்: லதா மங்கேஷ்கர்

பாடல்:

இஸ் ஜமானே மே இஸ் முஹபத் நே

கித்னே தில் தோடே கித்னே கர் பூன்க்கே

ஜானே கியோன் லோக் முஹபத் கியா கர்த்தேஹை

தில் கே பத்லே தர்த் யே தில் லியா கர்த்தே ஹை

ஜானே கியோன் லோக் முஹபத் கியா கர்த்தேஹை

பொருள்:

இவ்வுலகில் இந்தக் காதல்

எத்தனை இதயங்களை உடைத்தது

எத்தனை இல்லங்களை அழித்தது

இருந்தும் மக்கள் ஏன் காதல்வயப்படுகிறார்கள்-

இனிய உள்ளத்திற்குப் பதிலாக

துயர உள்ளத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்

மக்கள் ஏன் காதல் வயப்படுகிறார்கள்…

தனிமையே கிடைக்கிறது தக்க சங்கமம் கிடைக்காது

காதல் தடத்தில் எப்பொழுதும் நம் இலக்கு எட்டாது

இதயம் உடைந்துபோகிறது இயக்கம் அற்றுப்போகிறது

உண்மைக் காதலின் முடிவாக இதுவே

உலகத்தாருக்கு அமைகிறது

எவர் அறிவார் இந்தக் காதல் என்ற விளக்கு

ஏன் துன்பம் என்ற எண்ணெயில் எரிகிறது என

ஏக்கம் நிறைந்த வாழ்வைக் காதலர் ஏற்க வேண்டும் என

எப்போதும் இறைஞ்சும் உணர்வு முகத்தில் மொய்க்கும்

மருந்தாலும் தீர்வு இல்லை மனம் உருகிய ஆசியும் வீண்

விஷமே இது எனத் தெரிந்திருந்தும்

அனைவரும் விரும்பி ஏன் இதைப் பருகுகிறார்கள்

மக்கள் ஏன் காதல் வயப்படுகிறார்கள்…

நேர் எதிரான கருத்தைக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் காதலைப் பற்றி இப்பாடல் அளிக்கும் அதே உணர்வை அளிக்கும் தமிழ் பாடல்

படம்: கேளடி கண்மணி

பாடல்: மண்ணில் இந்த

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: பாவலர் வரதராஜன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மண்ணில் இந்தக் காதல் இன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பாவையின்றி

ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா (மண்ணில்)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி

சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்

சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்

கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்

கன்னித் துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிதுதான் (மண்ணில்)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்

கொத்து மலர் அற்புதங்களும் குளிர்ந்த அகரமும்

சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்

சுற்றி வரச் செய்யும் விழியின் சுந்தர மொழிகளும்

எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி

இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி

முடிமுதல் அடி வரை முழுவதும் சுகந்தரும்

விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

(மண்ணில்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x