Published : 20 Sep 2019 11:36 am

Updated : 20 Sep 2019 11:37 am

 

Published : 20 Sep 2019 11:36 AM
Last Updated : 20 Sep 2019 11:37 AM

எல்லா வீடுகளிலும் ஒரு பிள்ளை உண்டு! - பாண்டிராஜ் பேட்டி

director-pandiraj-interview

“இன்று பாக்ஸ் ஆபீஸ் கொண்டாடும் முன்னணிக் கதாநாயனாக விளங்கும் சிவகார்த்திகேயன், அன்று பாண்டிராஜ் இயக்கிய ‘மெரினா’ படத்தில் அறிமுக நாயகன். இரண்டாம் முறையாக ‘கேடி பில்லா; கில்லாடி ரங்கா’ படத்தில் இணைந்த கூட்டணி, தற்போது ‘நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் மூன்றாம் முறையாக இணைந்திருக்கிறது. படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்ட நிலையில் இயக்குநரிடம் உரையாடியதிலிருந்து…

படத்தின் தலைப்பிலேயே பாசமும் நேசமும் நிரம்பி வழிகிறதே?

ஆமாம்! இதுவொரு அண்ணன், தங்கைக் கதை. தங்கைக்காக ஒரு அண்ணன் எந்த நிலை வரை போகிறான் என்பதுதான் திரைக்கதை. படத்தைப் பார்ப்பவர்கள் நம்ம குடும்பத்தி லும் இப்படித்தானே நடந்தது என்று நினைத்துப் பார்ப்பார்கள். மறந்து போயிருந்தாலும் சொந்த பந்தங்களை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பார்கள். 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் நமது வீட்டில் உள்ள ஏதாவது ஒரு பிள்ளை இருக்கும். படம் முழுக்கவே சடங்கு, திருமணம், வளைகாப்பு, திருவிழா எனக் குடும்பங்களுக்கு இடையிலான கொண்டாட்டமாக இருக்கும்.

ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்பவே பிரம்மிப்பா இருக்கு. 'மெரினா' படத்தில் நடித்தபோது, நாம் இந்த இடத்துக்கு வருவோம் என்று சிவாவே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஒரு காட்சியை ஒரே டேக்கில் முடிக்கிறார். அதெல்லாம் ரொம்ப ஆச்சரியமாகப் பார்த்தேன். அதே காட்சியை டப்பிங்கிலும் ஒரே டேக்கில் முடிச்சார். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும்தான் அவரது இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

சிவகார்த்திகேயனுக்குத் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்! எப்படி இந்த காம்பினேஷனை முடிவு செய்தீர்கள்?

ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரி ஒரு பொண்ணுதான் உங்க தங்கச்சி என்றுதான் கதையையே சொன் னேன். பின்னர் ஐஸ்வர்யாவிடம் போய் நடிக்கக் கேட்டபோது 'என்னது தங்கச்சியா... இப்போதுதான் சார் பெரிய ஹீரோக்களுடன் எல்லாம் நடிச்சிட்டு இருக்கேன்' என்றார். கதையைக் கேட்ட பிறகு முடிவு பண்ணுங்கள் என்று கதையைச் சொன்னேன். கேட்டதும் 'ஓகே' சொல்லிட்டார்.

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் 'கடைக்குட்டி சிங்க’த்தின் சாயல் தெரிகிறதே...

இது 'கடைக்குட்டி சிங்கம் 2'தானா என்று பலரும் கேட்கி றார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு பலரும் பேனர்கள், பத்திரிகைகளில் விவசாயி எனப் போட்டார்கள். வெற்றியைத் தாண்டி, அந்தப் படம் தமிழ்க் குடும்பங்களில் பாதிப்பை உண்டாக்கி இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அப்படியிருக்கும்போது இதையே ஏன் திரும்ப பண்ணக் கூடாது எனத் தோன்றியது. அதற்காக அதே படத்தை நான் திரும்ப எடுக்க வில்லை. அந்தப் படத்தில் இல்லாத பெரியப்பா, சித்தப்பா, பெரிய மாமா, சின்ன மாமா, அத்தை என உறவு களில் கொட்டிக்கிடக்கும் ஓராயிரம் கதைகளில் அழுத்தமான ஒன்றை எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

கல்வி, பள்ளிக் கூடங்கள் சார்ந்து நிறைய இயங்கியிருக்கிறீர்கள். தற்போது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு இரண்டுக்கும் பொதுத்தேர்வு என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதெல்லாம் கொடுமையான விஷயம். குழந்தைகளைக் குழந்தை களாக இருக்கவிடுவதுதான் குடும்பத்துக்கும் அரசாங்கத் துக்கும் அழகு. முதல் பெஞ்ச் மாணவர்கள் மட்டுமல்ல, கடைசி பெஞ்ச் மாணவர்களும் நல்ல இடத்தில்தான் இருக்கிறார்கள். இந்தப் போராட்டமான உலகத்தில் எப்படி வாழணும் என்றுதான் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், நமது கல்விமுறையோ எப்படி மார்க் எடுக்கணும் என்றுதான் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

2009-ல் ‘பசங்க’ வெளியீடு தொடங்கி பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கும் உங்கள் திரைப்பயணம் எப்படியிருக்கிறது?

சினிமாவில் வேலை பார்த்துக்கொண்டே இருக்கணும். முதலில் நான் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். பாண்டிராஜ் படங்கள் என்று விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் நம்பி வாங்கணும். என்னோட ரசிகர்கள் ஆன்லைனில் கிடையாது, வீட்டில் இருக்கிறார்கள் என்று சொல்வேன். அவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படம் பண்ணக் கூடாது என நினைப்பேன். இதில்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்.

- கா.இசக்கிமுத்து


இயக்குநர் பேட்டிபாண்டிராஜ் பேட்டிநம்ம வீட்டுப் பிள்ளை இயக்குநர்கடைக்குட்டி சிங்கம் இயக்குநர்சிவகார்த்திகேயன் நடிப்புசன் பிக்சர்ஸ் படம்ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை

You May Like

More From This Category

More From this Author